9/16/2012

| |

லிபியாவை தாக்கும் எண்ணத்துடன் போர்க் கப்பல்களை அனுப்பவில்லை: பென்டகன்

லிபியாவை தாக்கும் எண்ணத்துடன் போர்க் கப்பல்களை அனுப்பவில்லை என அமெரிக்க பாதுகாப்பு துறையின் தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.
லிபியாவின் பெங்காசி நகரில் அமெரிக்க தூதர் உள்ளிட்ட 4 அமெரிக்க அதிகாரிகள் கொல்லப்பட்டதை அடுத்து,லிபிய கடல்பகுதிக்கு இரு அமெரிக்க போர்க் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. லிபியா மீது தாக்குல் நடத்தவே இந்த கப்பல்களை அமெரிக்கா அனுப்பியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் பென்டகன் செய்தித் தொடர்பானர் ஜார்க் லிட்டில் கூறுகையில்,
சில நேரங்களில் மத்திய தரைக்கடல் பகுதிக்கு அமெரிக்க கப்பல்களை அனுப்புவது வழக்கமான ஒன்று தான். லிபியாவைத் தாக்க வேண்டும் என்பதற்காக போர்க் கப்பல்களை அனுப்பவில்லை. அப்பகுதியில் எந்த நாட்டின் மீதும் இந்த போர்க் கப்பல்கள் தாக்குதலில் ஈடுபடாது என்றார்.

இதனிடையே பெங்காசி நகரில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மற்ற 3 அமெரிக்க அதிகாரிகள் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

இதில் இருவர் அமெரிக்க கடற்படையின் சிறப்பு அதிரடிப்படையில் முன்பு பணியாற்றியவர்கள். மற்றொருவரும் தூதரகத்தின் தகவல் நிர்வாக மேலாளராகப் பணியாற்றி வந்தவர்.

இறந்தவர்களின் குடும்பத்துக்கு அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டுள்ளார்.

லிபியாவுக்கான அமெரிக்க தூதர் கொல்லப்பட்டது குறித்துப் பேசிய ஜனாதிபதி ஒபாமா, லிபியாவில் திட்டமிட்டு அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் நமது சகோதரர்கள் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்குக் காரணமான அனைவரும் நீதிக்கு முன்பு நிறுத்தப்படுவார்கள். பயங்கரவாதம் எந்த வகையில் தலையெடுத்தாலும் அதை அழிப்போம். அனைத்து மதங்களையும் மதித்து வந்துள்ளதே அமெரிக்காவின் வரலாறு.

லட்சக்கணக்கான முஸ்லிம்கள் உள்பட பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் நமது நாட்டில் உள்ளனர். நாம் ஒரு குறிப்பிட்ட மதத்தின் எதிர்ப்பாளர்கள் என்ற சாயத்தைப் பூச நினைக்கிறார்கள். அது எப்போதும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

ஒரு திரைப்படத்தை மையமாக வைத்து வன்முறையில் இறங்குவதை நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.