கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டும், முதலமைச்சர் தெரிவு என்ற விடயம் தொடர்ந்தும் இழுபறியாகவே இருந்து வந்தது. மௌனங்கள் கலைக்கப்பட்டு விவாதங்கள் முற்றுப்பெற நேற்றைய தினம் வைக்கப்பட்டது முற்றுப்புள்ளி. இது யார் தலை மேல் விழுந்த இடி? என்பதே ஆராயப்பட வேண்டிய விடயம்.
மூவின மக்களும் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் அதிகப்படியான பெரும்பான்மை கொண்ட இனக்கூட்டமாகவும் பேரிழப்புகளை தாண்டி வந்த சமூகமாகவும் அதிகம் புண்பட்டு நிற்பவர்கள் தமிழர்களே!
அடுத்தபடியான இனவிகிதாசாரத்தில் இருக்கும் முஸ்லீம் சமூகமானது போராட்ட சூழலிலும் தம்மை அபிவிருத்தி, ஆழுமை ரீதியில் வளர்த்துக் கொண்டே விருத்தியடைந்த சமூகமாகும். இவை இரண்டிற்கும் அடுத்ததாகவே சிங்களவர் சமூகம் சிறுபான்மை விகிதாசாரிகளாக கிழக்கில் வாழ்கின்றனர். அந்த வகையில் தமிழீழம் என்ற இலக்கினை நோக்கி நகர்த்தப்பட்டு கடந்த 30 வருடகால ஆயுக்கலாச்சாரத்தினாலும், போலி வேடதாரிகளின் அரசியல் கலாச்சாரத்தினாலும் அதிகம் நொந்து நிற்கின்றவர்கள் கிழக்குத் தமிழர்கள்தான். எனவே கிழக்கின் ஆட்சி அதிகாரத்தில் தமிழர்களுக்கு பெருமளவில் பங்குண்டு எனும் விடயத்தில் யாரும் குற்றம் சொல்ல முடியாது. அந்தவகையில் ஏனைய சமூகத்தினரையும் புறக்கணித்துவிட்டு செயற்படவும் முடியாது. நியாயமாக முதலமைச்சர் என்ற கிழக்கின் அதிகாரம் அடங்கிய பதவியானது தமிழர்களுக்கே கிடைத்திருக்க வேண்டும். அல்லது 2008 இல் தமிழர் சமூகத்திற்கு கிடைத்த கிழக்கு முதலமைச்சர் என்ற அந்தஸ்து தொடர்ந்தும் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டும். இந்த இரண்டு விடயங்களையும் முன்னிறுத்திப் பார்க்கும்போது கிழக்கின் தமிழ் முதலமைச்சர் உருவாக்கத்திலும், தமிழ் முதலமைச்சர் தக்க வைப்பிலும் பங்கெடுக்காது தமது சுயஇலாப அரசியலையும் , பழிவாங்கும் அரசியலையும் மாத்திரம் மனதில் வைத்து செயற்பட்ட வக்கிர மனோநிலை கொண்ட அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளும் கிழக்குத் தமிழர்களின் தலைவிதியோடு விசப்பரீட்சை வைத்து விளையாடிய துரோகிகளாகவே மக்களால் உணரப்படுகின்றார்கள்.
பெரும்பாலான கிழக்கு வாழ் தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்ததெல்லாம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இருந்து ஒரு தமிழ் முதலமைச்சரை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சாத்தியம் அற்ற எண்ணப்பாட்டினை முன்னிறுத்தியே ஆகும். எப்படியிருந்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முதலமைச்சர் என்கின்ற பதவியினை கைப்பற்றவே முடியாது என்பதும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அப்புக்காத்து தலைமைகள் நன்கறிந்த விடயம். ஆனாலும் கிழக்குத் தமிழர்களது அப்பாவித் தனமான மனோநிலையினை தமக்கு சாதகமாக பயன்படுத்துவதிலேயே தமது முழுப்பலத்தினையும் பிரயோகித்து யதார்த்தினை உணரவிடமால் செய்து வாக்கு வேட்டை நடாத்தியவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே ஆவர். தனித்து ஆட்சி அமைக்க முடியாத தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து கொண்டு ஆதரவினை வழங்கும் என்பது எதிர்பார்க்கப்பட்ட விடயம்தான். அதேபோன்று மத்திய அரசில் பங்குகொண்டு அமைச்சுப் பதவிகளை வகிக்கும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஒருபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைக்க முன்வராது என்பது வெளிப்படையாகவே சகலரும் அறிந்த விடயம். கடந்து வந்த அரசியல் வரலாற்றின் பதிவுகள் அனைத்தும் பக்கத்திற்கு பக்கம் நன்கறிந்த கூட்டமைப்பின் அப்புக்காத்து தலைமைகள் இதுதொடர்பில் மிகத்தெளிவிலேயே இருந்தனர்.
ஆனாலும் கிழக்குத் தமிழர்களது வாக்குகளை பெருமளவில் பெறவேண்டுமானால் ஓர் போலியான நம்பிக்கையினை மிகக் கச்சிதமாக உருவாக்கிவிட வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது. அவ்வாறு உருவாக்கப்பட்ட போலித்தயாரிப்புதான் “ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசினை இணைத்துக்கொண்டு ஆட்சியமைப்போம்” என்ற பிரச்சாரப் பொருளாகும். இந்த யுக்தி அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இலாபத்தினை வழங்கியிருந்தும் குறிப்பிடத்தக்கதாகும். அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது சாத்தியமற்ற இலக்குநோக்கி மக்களை நகர்த்தியது எல்லாம் பிள்ளையானை முதலமைச்சராக வரவிடாமல் தடுக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான அரசியல் நிலைப்பாட்டினை எண்ணத்திற் கொண்டமைதான் என்பது தெட்டத்தெளிவாகின்றது.
பிள்ளையானுக்கு எதிராக போடும் முட்டுக்கட்டைகள் அனைத்தும் கிழக்குத் தமிழர்களது தலைகளிலும் பேரிடியாக விழும் தமிழ் முதலமைச்சர் பறிபோகும் என்று தெரிந்தும் தமிழர் நலன் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பானது சற்றுச் சிறிதேனும் சிந்திக்கவில்லை. அவர்கள் வெற்று ரொக்கட்டான முஸ்லீம் காங்கிரசிற்கு எரிபொருள் தாங்கி பொருத்துவதிலேயே குறியாக இருந்தனர். இவையெல்லாவற்றையும் கடந்து அரசாங்கம் பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவியினை கொடுக்க கடுமையான முயற்சிகளை செய்து பல்வேறு விவாதங்களையும் பேரம் பேசுதல்களையும் செய்து கொண்டு வந்தது. ஆனாலும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் கடுமையான நிபந்தனைகள் அரசின் நிலைப்பாட்டினை தளர்த்தத் தொடங்கியது. 07 ஆசனங்களை மாத்திரமே பெற்றுக்கொண்ட கட்சி அரசுடன் அதிகபட்ச அதிகாரங்களைக் கேட்டு தனது பேரம் பேசுதலை மேற்கொள்ளும் விதமாக தனது சக்தியினை மென்மேலும் அதிகரித்துக் கொள்ள வழிவகுத்துக் கொடுத்த பெருமையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினையே சாரும்;. எங்களுடன் இணைந்தால் முஸ்லீம் முதலமைச்சரை உருவாக்கித் தருவோம். எந்த விதமான நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம் என்று பகிரங்க அறிக்கையினை விடுத்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு.
ஏற்கனவே ஆட்சியமைப்பு தொடர்பில் 07 ஆசனங்களுடன் முக்கியத்துவம் பெற்று நின்ற ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசானது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த அறிவிப்பால் மேலும் வலுப்பெற்றுக்கொண்டு அரச தரப்போடு பேசத் தொடங்கியது. இதுவே “சும்மா இருந்த சங்கினை ஊதிக் கெடுத்தான் ஆண்டி” என்ற கதையாகி நின்றது.
இறுதியில் முஸ்லிம் முதலமைச்சர் பதவியினை கொடுத்துத்தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது. இந்த நெருக்கடி நிலையினை அரசுக்கு ஏற்படுத்த காரணமாய் அமைந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பின், முஸ்லீம் காங்கிரஸ் மீதான மறைமுக உற்சாகமூட்டல்களேயாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லீம் தலைமைகள் அனைத்தும் பல்வேறு திசைகளில் பிரிந்து நின்றன. அரசிற்குள் ரிசாட் அணி, அதாவுல்லா அணி என்ற இரு அணிகள் இருக்க முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் இரு வேறுபட்ட கருத்துப் பிளவுகள் உதிர்வுபெற்றன. ஆனாலும் இந்த அனைத்துக் கோடுகளும் வௌ;வேறாக பயணித்தாலும் இதய சுத்தியுடன் ஒரேயொரு மையப்புள்ளியிலேயே இடைவெட்டிக்கொண்டன. இந்த சந்திப்புப் புள்ளிதான் “முஸ்லீம் முதலமைச்சர்” என்ற பெரும் சக்தியாக பரிணமித்தது.
அந்தவகையில் மிகச்சரியான முறையில் சிந்தித்து இறுதிநேர விட்டுக்கொடுப்புகளின் மூலம் ஒரு முஸ்லீம் முதலமைச்சரை உருவாக்கியமையிட்டு முஸ்லீம் தலைமைகளை உளமாற பாராட்டியே ஆகவேண்டும்.
சிங்களவர் எமது உரிமைகளை பறிக்கின்றனர். எமது காணிகளை கையகப்படுத்துகின்றனர் என்றெல்லாம் கூச்சல்களை மட்டுமே வெளிப்படுத்தி வெட்டி வீராப்பு பேசும் தமிழ் தேசிய கூட்டமைப்பானது கிழக்கு மாகாண தமிழர்களின் வாழ்வுரிமையினையும் அரசியல் அதிகாரத்தினையும் முஸ்லீம் சமுகத்தினது கைகளில் ஒப்படைத்துவிட்டு ஒளிந்தோடியிருப்பது கிழக்குத் தமிழர்களுக்கு செய்து இருக்கின்ற மிகப்பெரிய துரோகமாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பை நம்பி வாக்களித்து வழமைபோல் இம்முறையும் ஏமாந்து நிற்கும் ஒவ்வொரு கிழக்குத் தமிழனும் புத்தியில் உறைக்க சிந்திப்பதெல்லாம் காலம் கடந்த ஞானமேயாகும். கண்கெட்டபின்னர் செய்ய நினைக்கும் சூரிய நமஸ்காரமும், முஸ்லீம் முதலமைச்சர் வருகையின் பின்னரான “பிள்ளையானை கோட்டை விட்டோமே” என்கின்ற உணர்வும் சரிநிகர் சமமாகவே அமையும். இதுமட்டும் உறுதி.
அஸ்வின்மித்ரா