9/20/2012

| |

இந்தியா - இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு; மீள்குடியேற்றம், மீனவர் குறித்து பேசப்படும்

நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்று புதன்கிழமை இந்தியாவுக்கு பயணமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று மாலை இந்திய குடியரசுத் பிரணாப் முகர்ஜியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்திய ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 
இந்த சந்திப்பை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் இரவு 7 மணிக்குச் சந்தித்துப் பேசவுள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அங்கு அவருக்கு இந்திய பிரதமர் இரவு விருந்து அளிக்கவுள்ளார். 
இலங்கையில் இந்தியாவின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் தமிழர் மீள்குடியேற்றப் பணிகள் குறித்தும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் விவகாரம் குறித்தும் இலங்கை - இந்திய தலைவர்கள் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து நாளை வெள்ளிக்கிழமை காலை, புதுடில்லியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சி செல்லும் ஜனாதிபதி குழுவினர், அங்கு நிர்மாணிக்கப்படவுள்ள பௌத்தமத மற்றும் அறிவுசார் பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டவுள்ளனர்.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்துக்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், சாஞ்சியில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளன. இதனால் அம்மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.