கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம் மக்களைக் கவருவதற்காக பொய்யான வாக்குறுதிகளை அளித்தும், கபடத்தனமான நாடகங்களை அரங்கேற்றியும் மக்களை ஏமாற்றி வருகின்றன. எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிடுவதற்காக இவ்விரு கட்சிகளும் அரசாங்கத்தை வசைபாடும் செயலிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இது இன்று மக்களுக்குப் புளித்துப்போனதொரு விடயமாகவே உள்ளது. வடக்கைப் போன்று அரசாங்கத்தை விமர்சித்தால் மக்கள் தம்முடன் நிற்பார்கள் எனும் தப்புக்கணக்கில் தமிழ்க் கூட்டமைப்பு செயற்பட்டு வரும் அதேவேளை அரசிலிருந்து விலகுவது போன்று நாடகமாடி அரசை வசைபாடி முஸ்லிம் மக்களை முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்றி வருகின்றது.
முன்னொரு காலம் போன்றல்லாது மக்கள் இன்று சகல விடயங்களிலும் தெளிவாகவே உள்ளனர். கட்சிகளால் பரப்பப்படும் சகல விடயங்களிலும் தெளிவாகவே உள்ளனர். கட்சிகளால் பரப்பப்படும் சகல பொய்களையும் அம்மக்கள் நம்பத் தயாராக இல்லை. எது சரி, எது பிழை, ஏன் இப்படிக் கூறுகிறார்கள் என்றெல் லாம் மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளார்கள். தம்மை வைத்து கட்சிகளின் தலைமைகள் நடத்திவரும் கபடத் தனமான நாடகங்கள் இப்போது சிறு குழந்தைகளுக்குக் கூட விளங்குகையில் தொடர்ச்சி யாக ஏமாற்றப்பட்டுவரும் மக்களால் மட்டும் புரிந்துகொள்ள முடியாதா?
அண்மையில் பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா வழங்கியிருந்த ஒரு பேட்டியில் முஸ்லிம் காங்கிரஸைக் கடுமையாக விமர்சித் திருந்தார். அது கிழக்கு மாகாண முஸ்லிம்களிடையே ஒரு விழிப்புணர்வைத் தோற்றுவித்துள்ளது. மு.கா தொடர்பாகவும் அதன் தலைவர் தொடர்பாகவும் அவர் தெரிவித்திருந்த சகல விடயங்களுமே ஏற்றுக்கொள்ளக் கூடியவை. அரசியலுக்காக சமூகத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் முஸ்லிம் காங்கிரஸ் என்று அவர் ஒரு வசனத்திலேயே மு.காவைப் பற்றித் தெரிவித்துவிட்டார்.
பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபாவைப் பொறுத்தவரையில் அவர் ஒரு கண்ணியமான அரசியல்வாதி. ஏனைய ஒருசில அரசியல்வாதிகள் போன்று தொட்டதெற்கெல்லாம் அறிக்கை விடுவதோ விதண்டாவாதமாக விவாதிப்பதோ அவரது பண்பல்ல. பிரபல சட்டத்தரணியான அவர் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற நோக்கிலேயே அரசியலுக்கு வந்தவர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மூலமாக தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்து அதனூடாக தனது தொகுதி மக்களுக்குச் சேவை செய்யக் கிடைத்த சந்தர்ப்பத்தை இன்றும் நன்றியுணர்வுடன் நினைவு கூர்கிறார். அவர் இன்று ஆளும் தேசியக் கட்சியில் இணைந்து ஜனாதிபதியின் நன்மதிப்பிற்கு ஆளாகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவிற்கும் பிரதான பொறுப்பாளராக நியமிக் கப்பட்டு முழு நாட்டு மக்களுக்கும் சேவை செய்து வருகின்றார்.
தான் சிறுவனாக இருந்தபோது தனது இல்லத்தில் தனது தந்தையின் ஆசிர்வாதத்துடன் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்பால் முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஆரம்பிக்கப் பட்ட முஸ்லிம் காங்கிரஸ் இன்று அது ஆரம்பிக்கப்பட்ட உயரிய நோக்கத்தை மறந்து சமூகத்தைத் தூக்கியெறிந்து சுயநலமாகச் செயற்பட்டு அழிவுப்பாதையை நோக்கிச் செல்வதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால்தான் அவர் தனது மனதில் பட்ட உண்மையை கூறியுள்ளார். அதனை மு.காவினர் மட்டுமல்ல எந்தவொரு முஸ்லிம் மகனுமே ஏற்றுக்கொள்வான்.
குறிப்பாக கிழக்கு மாகாண தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக தமிழ்க் கூட்டமைப்புடன் மு.கா நடத்திவரும் மறைமுகமான இரகசிய பேச்சுவார்த்தையை பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா வன்மையாகக் கண்டித்துள்ளார். விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்குச் செய்த பாரிய துரோகங்களை மறந்து, அன்று அப்புலிகளுடன் ஒட்டி உறவாடி இன்றும் அப்புலிகளின் கொள்கைகளையே பின்பற்றிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டு வைக்க மு.கா எடுத்த முடிவையே பைஸர் முஸ்தபா தவறு என்று வாதிடுகிறார். இது சமூகத்தை விற்கும் செயல் என்பதே இவரது கருத்து.
அன்று புலிகள் முஸ்லிம்களை வதைத்தபோது வாய்மூடி மெளனிகளாக இருந்து அவற்றை இரசித்தவர்களே இந்தத் தமிழ்க் கூட்டமைப்பினர். மூன்று வருடங்கள் கழியுமுன்னர் அவற்றை மறந்து ஒரு முதலமைச்சர் பதவிக்காக அத்தகையவர்களுடன் கூட்டு வைப்பதா என்பதே பைஸரின் கேள்வியாகும். அன்றும் இன்றும் முஸ்லிம்களுக்கு ஆதரவளித்துவரும் அரசாங்கத்திற்கு துரோகமி ழைத்துவிட்டு எம்மை நட்டாற்றில் விட்ட புலிச்சார்பு குழுவுடன் கூட்டு வைப்பதா என்பதே இவரது வாதமாகும். இவர் இதனை அரசியலுக்காகக் கேட்கவில்லை. அதனையும் தாண்டி சமூகத்திற்கா கவே கேட்கின்றார். மர்ஹும் அஷ்ரப் உயிருடன் இருந்திருந்தால் இத்தகையதொரு மூடத்தனமான முடிவை கனவில் கூட நினைத்தும் பார்த்திருக்கமாட்டார்.
இதேபோன்றுதான் தமிழ் மக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினரும் ஏமாற்றி வருகின்றனர். இணைந்த வடக்கு கிழக்கிலேயே எமது அடுத்த மாகாண தேர்தல் என்று கூக்குரலிட்டுவிட்டு இன்று கிழக்கில் தேர்தலில் போட்டியிடுகின்றனர். கடந்த மாகாண தேர்தலில் தாம் விலகியிருப்பதற்கான காரணத்தைக் கூறியது போன்று இம் முறையும் இவர்கள் விலகியிருந்திருப்பார்களேயானால் தமிழ் மக்கள் இவர்களை ஹீரோவாகப் பார்த்திருப்பர். ஆனால் இன்று இவர்கள் மக்கள் முன்னால் சீரோவாக உள்ளனர். ஆனாலும் அதைப்பற்றிப் பரவாயில்லை ஆட்சியைக் கைப்பற்றுவதே அவர்களது குறிக்கோள்.
வடக்கில் இவ்வாறுதான் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு அரசாங்கத்தையும், அதன் துரித அபிவிருத்தியையும் விமர்சித்து பல சபைகளைக் கைப்பற்றினர். ஆனால் அதன் ஒரு நிர்வாகத்தை யேனும் திறமையாக நடத்த முடியாது இன்று திண்டாடுகின்றனர். அதே நிலையை கிழக்கிலும் ஏற்படுத்துவதே அவர்களது நோக்கமாகவுள்ளது. கடந்த நான்கு வருடங்களாக கிழக்கு மாகாண சபையை சந்திரகாந்தன் தலைமையிலான குழுவினர் மிகத் திறமையாக நடத்தி வந்தனர். மத்திய அரசாங்கத்தின் வளங்களைப் பெற்று மாகாணத்தை அபிவிருத்தி செய்தனர். இந்நிலையை இனத்தர்க்கம் புரியும் கூட்டமைப்பினராலோ அல்லது முஸ்லிம் காங்கிரஸினராலோ தொடர முடியுமா?
அத்துடன் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக முஸ்லிம் காங்கிரஸின் கால்களில் விழாக்குறையாக தலைவர் இரா. சம்பந்தன் நடந்துகொள் ளும் விதம் தமிழ் மக்களின் முகங்களைச் சுழிக்க வைத்துள்ளது. இவ்விடயத்தில் அவர் விடும் அறிக்கைகளும், தேர்தல் மேடைப் பேச்சுக்களும் அருவருக்கத்தக்கதாக உள்ளன. அன்று முஸ்லிம் மக்களை மூன்றாம் தரப்பாக ஏற்றுக்கொள்ள முடியாதென பிடிவாத மாக நின்றுவிட்டு இன்று ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக அதே முஸ்லிம்களிடம் மண்டியிடும் செயலை இரு சமூகங்களுமே கண்டிருக்கின்றன.
எனவே பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தது போன்று சமூகங்களை விற்றுப் பிழைக்கும் கட்சிகளைப் புறந்தள்ளிவிட்டு தமிழரும் முஸ்லிம்களும் தம்மை தேசியக் கட்சியுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலமே எதிர்வரும் காலங்களில் எமது சமூகங்களிற்கு விடுதலையும், உண்மையான அபிவிருத்தியும் கிடைக்கும். சமூக நலனில் துளியளவும் அக்கறையில்லாத இனத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் இனரீதியான கட்சிகளை நம்பி அவர்கள் பின்னால் இனியும் செல்வது முட்டாள் தனமான செயலாகவே இருக்கும்.