இலங்கையில் தேர்தல் நடந்துமுடிந்துள்ள கிழக்கு மாகாணசபை உட்பட மூன்று மாகாணசபைகளிலும் தாமே ஆட்சியமைப்போம் என்பதில் சந்தேகமில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
சபரகமுவை மற்றும் வடமத்திய மாகாணசபைகளில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பலத்தை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்றுள்ள போதிலும், கிழக்கு மாகாணத்தில் எந்தக் கட்சிக்கும் போதிய பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.கிழக்கில் பெரும்பான்மையான வாக்குகள் அரசாங்கத்துக்கு எதிராகவே விழுந்துள்ளன என்ற அடிப்படையில் எதிரணிகளின் கூட்டணியே ஆட்சியமைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் அறிவித்திருந்தன.
முஸ்லிம் காங்கிரஸ்
இந்தப் பின்னணியில், மத்தியில் ஆளும் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் பங்காளிக் கட்சியாக இருந்தாலும் கிழக்குத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே எந்தத் தரப்பு ஆட்சியமைப்பது என்பதை தீர்மானிக்கும் நிலையில் இப்போது இருக்கிறது.இதற்காக இரண்டு தரப்புடனும் பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாக முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் முடிந்து கடந்த 5 நாட்களாக கூறிவருகிறது.
இந்தச் சூழ்நிலையி்ல் கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கிழக்கு மாகாணசபையில் அரசாங்கமே ஆட்சியமைக்கும் என்று உறுதியாகக் கூறினார்.
கிழக்கில் ஆட்சியமைப்பதற்கான பேரப் பேச்சுக்கள் நடந்துவருவதாகவும் அவர் கூறினார்.
யாருடன் சேர்ந்து எப்படி ஆட்சியமைக்கப்படும் என்பது நிலவும் அரசியல் சூழ்நிலைகளைக் கொண்டே தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் கெஹெலிய ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.