9/21/2012

| |

ஜப்பானிய உதவியை கரையோர பாதுகாப்புப் படை கோருகிறது

கடல் பாதுகாப்பு தொடர்பாக ஜப்பானிய உதவியையும் நிபுணத்துவ சேவையும் இலங்கை கரையோர பாதுகாப்பு படை கோரியுள்ளது. கரையோர பாதுகாப்புக்காக ஜப்பானிடமிருந்து சிறிய படகுகளை வாங்குவது பற்றியும் அது ஆலோசித்து வருகின்றது.

முன்னாள் கடற்படை தளபதியும் ஜப்பானுக்கான இலங்கை தூதுவருமான வசந்த கரன்னகொட, ஜப்பானிய கடல் தற்பாதுகாப்பு படையின் பிரதான படையதிகாரியான அட்மிரல் கட்சுடோஷி கவானோவை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது இருநாடுகளினதும், இப்பிராந்தியத்தினதும் கடல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்.

கப்பல் பாதைகளின், குறிப்பாக இலங்கையின் தென்பகுதி கடலில் உள்ள கப்பல் பாதைகளின் முக்கியத்துவம் குறித்தும் இதை கடல்கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பது குறித்தும் அவர்கள் முக்கியமாக பேசியுள்ளனர். 

அண்மையில் ஜப்பானிய கடல் சுய பாதுகாப்பு படையை சேர்ந்த 750 பேருடன் மூன்று ஜப்பானிய கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்திருந்தன.

இலங்கை கரையோரப் பாதுகாப்பு படைக்கு 1000 பேரை சேர்த்துக்கொள்ளவும் 30 அதிகாரிகளை நியமிக்கவும் குறைந்தபட்சம் 8 படகுகளை வாங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.