பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரிட்டிஷ் குடியுரிமை பெறுவதற்காக நடத்தப்படும் பரீட்சை ஒன்றில் கேட்கப்படும் கேள்விகள் போல கேட்கப்பட்ட கேள்விகளில் சிலவற்றுக்கு தவறான பதிலகளைத் தந்தார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் டேவிட் லெட்டர்மான் நடத்தும் "லேட் ஷோ" என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கேமரன் அவரது கேள்விக்கணைகளில் சிக்கினார்.
பிரிட்டனின் மிகவும் பிரசித்தி பெற்ற, தனியார் பள்ளியான ஈட்டன் பள்ளியிலும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் படித்த கேமரன், 1215ம் ஆண்டு கையொப்பமான, பிரிட்டிஷ் மன்னர்களின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் "மேக்னா கார்ட்டா" என்ற ஆவணத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன என்று சொல்லத்தெரியாமல் திணறினார்.( அந்த ஆவணத்துக்கு "பெரும் பிரகடனம்" என்று பொருள்).
அதே போல தேச பக்தப் பாடலான " ரூல் பிரிட்டானியா" என்ற பாடலை யார் எழுதியது என்பது குறித்தும் அவருக்குத் தெரியவில்லை. 1740ல் இந்தப் பாடலுக்குத் தாமஸ் ஆர்ன் என்பவர் இசையமைத்தார். ஆனால் கேமரனோ, இந்தப் பாடலுக்கு 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இசையமைப்பாளர் எட்வர்ட் எல்கார் இசையமைத்தார் என்று தவறாகக் கூறினார்.