9/27/2012

| |

அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் வலுக்கிறது கூட்டமைப்பு பூசல்



தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்ய , கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான தமிழரசுக் கட்சி எதிர்ப்பு காட்டுகிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் அதிகார பூர்வ பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் குற்றம் சாட்டினார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பற்றி தமிழோசைக்கு கருத்து தெரிவித்த சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே இதை ஒரு கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இருந்த தாகவும், இப்போது, போருக்குப் பின்னர் இதற்கான அவசியம் அதிகரித்திருப்பதாகவும் கூறினார்.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் எல்லாக் கட்சிகளும் இதற்கு இணங்கினாலும், தமிழரசுக் கட்சி மட்டும் இதற்கு உடன்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
எனவே கூட்டமைப்பு பல்வேறுபட்ட கட்சிகளின் ஒரு “தளர்ச்சியான கூட்டணியாகவே” இருந்து வருவதாகவும் இது தமிழர்களின் அரசியல் நலன்களுக்கு வலு சேர்ப்பதாக இல்லை என்றும் அவர் கூறினார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் , இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைக்கும்போதெல்லாம் பேச்சுவார்த்தைகளுக்குச் செல்வது என்பது, இலங்கை அரசுக்கு மட்டுமே லாபமளிப்பதாய் இருந்திருக்கிறது ,அதனால் தமிழர்களுக்கு எந்தவித பலனும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை ஜனாதிபதி, தான் இந்தியா செல்லும்போதோ அல்லது சர்வதேச அழுத்தங்களுக்கு உள்ளாகும்போதோ மட்டும், தமிழ் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார், அந்த அழைப்பை ஏற்று , அவருடன் பெரிது பயன் விளைவிக்காத பேச்சுவார்த்தைகளுக்குச் செல்வதன் மூலம், தமிழ் மக்களுக்கு எந்த வித நன்மையும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
தனது கருத்துக்கள் எதிர்கால தலைமைப் பதவிக்கான போட்டி என்ற அடிப்படையில் புரிந்துகொள்ளப்படக்கூடாது , தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் நாடாளுமன்ற அரசியலைத் தாண்டி, மக்கள் இயக்கமாகவும் வலுப்பெறவேண்டும் என்ற அடிப்படையிலேயே இவை புரிந்துகொள்ளப்படவேண்டும் என்று கூறினார் சுரேஷ் பிரேமசந்திரன்.