9/26/2012

| |

அபிவிருத்தி, ஐக்கியம், சமத்துவத்தை வைத்தே ஐ.ம.சு.மு கிழக்கில் கூட்டாட்சி முன்னாள் -முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி, இன ஐக்கியம் மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கு மாகாண சபையில் கூட்டாட்சியை ஏற்படுத்தியிருப்பதாக மாகாணசபை உறுப்பினரும், முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் நேற்றுத் தெரிவித்தார்.Photo
கிழக்கு மாகாண சபையில் எந்தவொரு இனத்தவரும் தனித்து, பிரிந்து நின்று ஆட்சியமைக்கமுடியாது என்ற உண்மையை நடைபெற்று முடிந்த தேர்தல் உணர்த்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சிவநேசதுரை சந்திரகாந்தன் இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் கருத்துக்கூறிய அவர், கிழக்கு மாகாண சபையில் தமிழர் ஒருவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை. தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள் என்ற சந்தேகத்தை ஊடகங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன.
எனினும், தமிழ் மக்கள் இங்கு புறக்கணிக்கப்படவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அமைச்சர்கள், பங்காளிக் கட்சிகள் ஆகியவற்றின் இணக்கப்பாட்டுடனேயே கிழக்கு மாகாணசபையில் கூட்டாட்சி அமைந்துள்ளது.
முதலமைச்சர் பதவியை இலக்குவைத்தே நான் இம்முறை கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டேன். எனினும், கூட்டாட்சி அமைக்கவேண்டிய சூழ்நிலையில் அமைச்சுப் பதவிகூட எனக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும் கிழக்கு மாகாண அமைச்சர்களுக்குப் பின்னாலிருந்து மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நான் தொடர்ந்தும் செய்வேன். கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக நான் ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளேன். இதன் ஊடாக கிழக்கின் அபிவிருத்திக்கு நான் தொடர்ந்தும் பங்களிப்புச் செலுத்துவேன்.
நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் ஒரு தமிழரும் தெரிவுசெய்யப்படக் கூடாது என்ற பிரசாரத்தையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம் இனரீதியான பிரசாரங்களையே முன்னெடுத்தன. எனினும், கிழக்கு மாகாணத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழர்களுக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையான வாக்குகள் கிடைத்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் உணர்வை மாத்திரம் தட்டி எழுப்பி வாக்குகளைப் பெற முயற்சித்தது. ஐ.ம.சு.மு வையும், ஜனாதிபதியையும் தோற்கடிப்பதற்கு வாக்குகளைப் பயன்படுத்த வேண்டுமெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பிரசாரங்களை முன்னெடுத்தனர். எனினும், அவர்களின் முயற்சி தோல்வியடைந்துள்ளது.
2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலைவிட இம்முறை தேர்தலில் மும்முனைப் போட்டி காணப்பட்டது. இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனினும், கிழக்கு மாகாணசபையில் 3 முஸ்லிம்களுக்கும், ஒரு சிங்களவருக்கும் அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழர்களுக்கு அமைச்சுப் பொறுப்புக் கிடைக்காவிட்டாலும் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைத்து இனங்களுக்கும் பாரபட்சமற்ற சேவையை வழங்குவார்கள் என்பதில் எமக்குப் பலமான நம்பிக்கை உள்ளது.
தனித் தனியான இனங்களாகப் பார்க்காமல் எல்லா மக்களும் நம்பிக்கை கொள்ளும் வகையில் நாம் செயற்படுவோம் என்றார்.
அதேநேரம், புலம்பெயர்ந்து வாழும் சில தமிழர்களே இலங்கையிலுள்ள தமிழர்களின் நிலை மோசமடைவதற்குக் காரணமாக அமைந்துள்ளனர். அங்குள்ளவர்கள் தமது குடும்பங்களுடன் அங்கேயே தொடர்ந்தும் தங்கவேண்டும் என்பதற்காக இங்கு குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேலும் தெரிவித்தார்.