மிகவும் நூதனமான முறையில் அரசியல் நாடகமொன்றினை அரங்கேற்றி விட்டு திரையை மூடி விட்டிருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தற்போதைய கிழக்கு மாகாண அரசியல் கள நிலவரமானது எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்க இயலாத வண்ணம் தளம்பலான ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் இருக்கின்றது. கூட்டாக இணைந்து ஆட்சியமைக்கும் சந்தர்ப்பங்கள் மட்டுமே விடையாக இருக்கின்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை நோக்கிக் காய்களை நகர்த்தி வருகின்றது. முஸ்லிம் காங்கிரஸின் எந்தவொரு நிபந்தனைகளையும் ஏற்பதாகவும்,முதலமைச்சர் பதவியினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கே தரத் தயாராக இருப்பதுமாக தமது நிலைப்பாடுகளை அறிக்கையிட்டுக் கொண்டிருக்கிறது.
வட-கிழக்கு இணைப்பு,சர்வதேச அங்கீகாரம் என்று பல்வேறு தொனிப் பொருட்களில் சவால் விட்டு,தமிழ் மக்களை உசுப்பேற்றி வாக்குகளைப் பெற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று ஆட்சி அமைக்கின்ற பெயரில் அனத்தையும் விட்டு கொடுத்தாலும் பரவாயில்லை பிள்ளையான் முதலமைச்சராக விட மாட்டோம் என்றே செயற்படுகின்றது.தனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை எதிரிக்கு
"சகுனபிளையாக இருக்க வேணும்" என்பது தெரு சண்டிதனத்திற்கு சரியாயிருக்கலாம்.
லட்சோப லட்சம் மக்களின் எதிர்கால வாழ்வில் அக்கறையுள்ளஅரசியல் தலைமைகளின் பொறுப்பு மிக்க முடிவாக இருக்க முடியாது. இனவாத முஸ்லிம் காங்கிரசுடனும்.வலது சாரி யு.என்.பி உடனும் கூட்டு சேருவதன் ஊடக தமது கொள்கைகளையும்,
தேர்தல் வாக்குறுதிகளையும் எப்படி காப்பாற்றப் போகின்றது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு?.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சர் பதவியை கொடுப்பதன் மூலம் வட-கிழக்கினை இணைக்க முடியுமா? வடக்கினை இணைக்க முஸ்லிம் காங்கிரஸ் ஒப்புதல் அளிக்குமா? அப்படி வட-கிழக்கு இணைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உடன்பட்டால் அஸ்ரப்பின் வழி நடந்து வந்த பாதையினை மாற்றிக் கொண்டு சம்பந்தர் ஐயாவின் பாதை வழியே நடக்கப் போகிறார்களா? முஸ்லிம்களின் தனியான அரசியல் அபிலாசைகளை எண்ணத்திற் கொண்டே அஸ்ரப் அவர்கள் தனியாகப் பிரிந்து முஸ்லிம் காங்கிரஸினை அமைத்தார். அவ்வாறாகத் தனிவழி வந்த முஸ்லிம் காங்கிரஸ்வட-கிழக்கு இணைப்பிற்கு ஒப்புறுதி வழங்கினால்,இணைந்த வட-கிழக்கில் 7% மான மக்கள் கூட்டம் முஸ்லிம் சமூகமாக இருக்கும். முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம் வீழும் அபாயம் தோன்றும். சிறுபான்மை முஸ்லிம்களின் தனித்துவம்,அரசியல் இருப்பு இவை அனைத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறான ஒரு முடிவினை எடுக்க வேண்டும் என்கின்ற முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவங்களுக்கான சவாலாக நிற்கின்றது.
அடுத்த பார்வையாக ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்ற வகையில் “நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாக” வாக்குறுதியளித்தால் மாத்திரமே எமது ஆதரவு கிடைக்குமென கூட்டமைப்பிற்கு அறிக்கை விடப்பட்டிருக்கிறது.
மஹிந்த ராஜபக்ஷவினை தமிழ் மக்களுக்கு எதிரானவராக அடையாளப்படுத்தும் கூட்டமைப்பினர்,ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆதரவு பெறுவதற்கான முயற்சி செய்கின்றனர். 1983ல் திட்டமிட்ட இன கலவரத்தை நடாத்தி,வெலிக்கடை படு கொலையை நடாத்தி,பெருமளவான தமிழர்களை வீதியில் டயர் போட்டு எரித்து வெறியாட்டம் போட்ட J.R.ஜெயவர்த்தனாவின் யு.என்.பி
யாழ் நூலகத்தையும் எரித்து சாம்பலாக்கிய
J.R.ஜெயவர்த்தனாவின் கட்சியினரது இரத்தக் கறைபடிந்த கைகளைப் பற்றிக் கொண்டு நட்புக் கொண்டாடும் கூட்டமைப்பினர் நிலைப்பாட்டிலே கொள்கை,கோட்பாடுகள் என்பது போலியானதாகவே இருக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியினரை கூட்டமைப்பின் வட-கிழக்கு இணைப்பை ஏற்றுக்கொண்டதாக அறிக்கை விட செய்தால் அது சாதனையாக இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாக இருக்கும்.ஆனால் அது ஒரு போதும் நடக்கப்போவதில்லை.ஒரு போதும் வட-கிழக்கு இணைப்பினை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அது இப்போது கூட அவர்களது வாயாலேயே வெளிப்பட்டிருக்கிறது. “நாட்டின் ஒருமைப்பாட்டினை பாதுகாப்போம்” என வாக்குறுதி தர வேண்டுமென கூட்டமைப்பினை கோருவதும் திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட அறிக்கை வாயிலாக அறிய முடிவதும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொது நிலைப்பாட்டை விளக்குகிறது.
ஆகவே தேசியம் .வட-கிழக்கு இணைப்பு,சர்வதேச அங்கீகாரம் எனும் விடயங்கள் தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்காகப் போடப்பட்ட சதி வலைகளே தவிர நிஜத்தில் நடக்கும் விடயங்கள் அல்ல என்பது வெட்டவெளிச்சமாகிறது.கூட்டமைப்பினரை நம்பி,
இருந்த ஒரு தமிழ் முதலமைச்சரையும் கோட்டை விட தயாரான மட்டக்களப்பார்கள் தலையில் கொச்சிக்காய் அரைக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.