9/13/2012

| |

மட்டக்களப்பில் படுதோல்வியடைந்த தமிழரசுக்கட்சி


அஸ்வின் மித்ரா

நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியானது மட்டக்களப்பு மாவட்டத்தில் படுதோல்வியடைந்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் சார்பில் 07 உறுப்பினர்களை களமிறக்கிய போதும் ஆக இரண்டே,இரண்டு உறுப்பினர்கள் மாத்திரமே கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவாகியுள்ளனர். ஏனைய 04 உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டு போட்டியிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களாவர்.

அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்ட துரைரெட்ணம் (EPRLF) அமைப்பினையும்,ஜனா மற்றும் பிரசன்னா இருவரும் (TELO) அமைப்பினையும்,வெள்ளிமலை தமிழர் விடுதலைக் கூட்டணியினையும் பிரதி நிதித்துவப்படுத்தி நிற்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 06 பேரில் துரைராஜசிங்கம்,நடராஜா ஆகிய இருவர் மாத்திரமே தமிழரசுக் கட்சியினைச் சேர்ந்தவர்களாவர்.

அதிலும் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு விருப்புவாக்கு அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இரண்டாம் நிலையில் இருக்கும் துரைராஜசிங்கம் பெற்றுக் கொண்ட 27717 விருப்புவாக்குகளும் அவருக்கு மட்டும் உரித்தானவை அல்ல.

அவர் தனியாகப் பெற்றுக் கொண்டவை 17903 விருப்பு வாக்குகள் மட்டுமேயாகும். மேலதிகமாகக் கிடைத்த வாக்குகள் அனைத்தும் துரைரெட்ணத்திற்கு வழங்கப்பட்ட வாக்குகளினூடாக இரண்டாம் பட்சமாகப் புள்ளடியிடப்பட்டு துரைராஜசிங்கத்தைச் சேர்ந்தவையாகும்.

கல்குடா தொகுதியின் தேர்தல் பெறுபேறுகளை வைத்து பார்க்கும் போது யோகேஸ்வரன் எம்.பியின் செல்வாக்கு கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது வெட்ட வெளிச்சமாகிறது. காரணம் யோகேஸ்வரன் எம்.பியால் பரிந்துரைக்கப்பட்டு தமிழரசுக் கட்சியால் களமிறக்கப்பட்ட கதிரவெளியைச் சேர்ந்த சிவநேசன் மற்றும் சந்திவெளியைச் சேர்ந்த சேயோன் ஆகிய இருவரும் தோல்வியைத் தழுவியுள்ளனர். இவர்களுடைய தோல்வி யோகேஸ்வரன் எம்.பியின் வீழ்ந்து வரும் செல்வாக்கின் எதிரொலியாகவே பார்க்கப்படுகின்றது.

அடுத்ததாகப் பார்க்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் பரிந்துரை செய்து கூட்டணியில் போட்டியிட்ட உறுப்பினர்களுள் நடராசா தவிர்ந்த மூன்று உறுப்பினர்கள் மிக மோசமான தோல்வியைத் தழுவியுள்ளனர். ஈச்சந்தீவு யோகானந்தராசா,களுதாவளையைச் சேர்ந்த குணம்,பழுகாமம் V.R.மகேந்திரன் ஆகிய மூவருமே இவ்வாறு தோல்வியடைந்தவர்களாவர். அரியநேந்திரன் இவர்களுக்கு ஆதரவாக மேற்கொண்டு வந்த பலமான பிரச்சாரங்களையும் தாண்டித் தாக்கம் செலுத்தியுள்ள இந்தத் தோல்வியானது அரியநேந்திரனது செல்வாக்கினையும் அசைத்துக் காட்டியிருப்பது புலனாகின்றது.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட மாற்றுக் கூட்டணி கட்சிகளினுடைய வெற்றியும்,தமிழரசுக் கட்சியினரது இழப்புக்களும் ஆழமாக ஆராயப்படுமிடத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட மாற்றுக் கட்சிகள் “இளநீர் குடிக்க தமிழரசுக் கட்சி குரும்பை சுமந்த” கதையாகி நிற்கின்றது.        இதுவே யதார்த்தமுமாகும்.

-நன்றி தேனீ