வளமான மாகாணமாக கிழக்கை மாற்றுவேன்: புதிய முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத்
வளமான மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்றுவேன் என கிழக்கு மாகாண புதிய முதலமைச்சரான நஜீப் ஏ.மஜீத் தெரிவித்தார்.
"ஏனைய எட்டு மாகாணங்களை விட வளமான மாகாணமாக கிழக்கு மாகாண சபை எதிர்காலத்தில் மாற்றப்படும். இதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து செயற்படவுள்ளேன்" என கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் மாகாண சபையிலுள்ள தமிழ் மற்றும் சிங்கள உறுப்பினர்களுடன் இணைந்து மாகாணத்தை கட்டியொழுப்ப உள்ளேன் என அவர் குறிப்பிட்டார்.
"அரசியலுக்கு நான் புதியவனல்ல. கடந்த 1994ஆம் ஆண்டிலிருந்து நான் அரசியலில் ஈடுபட்டு வருகின்றேன். இதனால் கிழக்கு மாகாணத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்" என முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கிழக்கு மாகாண புதிய முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை இரவு அமைச்சர் ஹக்கீமின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.