9/20/2012

| |

பிரான்ஸ் பத்திரிகையிலும் முஹம்மத் நபியை இழிவுபடுத்தும் கேலிச் சித்திரம்

20 நாடுகளில் பிரான்ஸ் தூதரகங்களுக்கு வெள்ளிக்கிழமை ப+ட்டு; உள்நாட்டிலும் பாதுகாப்பு அதிகரிப்பு
முஹம்மத் நபியை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய திரைப்படம் சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரான்ஸ் வார இதழ் ஒன்று இறைத் தூதர் பற்றி மோசமான கேலிச் சித்திரங்களை வெளியிட்டுள்ளது.
பிரான்ஸிலிருந்து வெளியாகும் ‘கார்லி ஹெப்டோ’ என்ற வாராந்த கேலிப் பத்திரிகையே முஹம்மத் நபியை அவமதிக்கும் கேலிச் சித்திரங்களை நேற்றைய தினத்தில் வெளியிட்டது. ‘அதிர்ச்சியில் இருப்பவர்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கவுள்ளோம்’ என்று இது குறித்து அந்த பத்திரிகையின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். ‘கார்லி ஹெப்டோ’ பத்திரிகையின் இந்த வாரத்திற்கான இதழ் நேற்று வெளியானதைத் தொடர்ந்து, பிரான்ஸ் அரசு நாடுபூராகவும் பாதுகாப்பை அதிகரித்துள்ளதோடு, அமைதி காக்குமாறு நாட்டு மக்களை கோரியுள்ளது.
இறைத் தூதர் தொடர்பான நிர்வாண கேலிச் சித்திரங்கள் இந்த பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே பிரான்ஸில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய திரைப்படத்திற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடரும் நிலையில், இந்த கேலிச் சித்திர விவகாரம் அங்கு மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்த கேலிச் சித்திரம் வெளியானதைத் தொடர்ந்து, பிரான்ஸ் பல நாடுகளிலும் தூதரகங்களின் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. இதில் 20 நாடுகளில் உள்ள பிரான்ஸ் தூதரகங்கள், துணைத் தூதரகங்கள், கலாசார மையங்கள் மற்றும் பிரான்ஸின் சர்வதேச பாடசாலைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மூடப்படும் என பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின்னரான ஆர்ப்பாட்டங்களில் குறித்த நாடுகளில் உள்ள பிரான்ஸ் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரான்ஸ் அரசு கூறியுள்ளது.
இந்த கேலிச் சித்திரங்களை வெளியிட்ட கார்லி ஹெப்டோ பத்திரிகையின் பாரிஸ் அலுவலகத்திற்கு நேற்றைய தினத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கேலிச் சித்திரங்களுக்கு எதிர்ப்பு வெளியிடுவோர் அது குறித்து பிரான்ஸ் நீதிமன்றத்திற்கு முன் செல்லுமாறு அந்நாட்டு பிரதமர் ஜீன் மார்க் அய்ரோல்ட் அறிவித்துள்ளார்.
‘எமது நாட்டில் கருத்துச் சுதந்திரத்திற்கு முழு அங்கீகாரம் இருக்கிறது. இதில் கேலிச்சித்திரங்களும் உட்பட்டதே. தமது நம்பிக்கையை பாதிப்பதாக யாராவது நினைத்தால் அது குறித்து சட்டத்தை நாட முடியும். எமது நாட்டில் சட்டத்திற்கு முழு மதிப்பு அளிக்கப்படுகிறது’ என்று பிரான்ஸ் பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதில் பாரிஸ் நகரில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கான அனுமதிகள் அனைத்தும் ரத்துச் செய்யப்படுவதாக பிரதமர் ஜீன் மார்க் அய்ரோல்ட் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே சர்ச்சைக்குரிய திரைப்படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த பிரான்ஸ் உள்துறை அமைச்சு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் பிரான்ஸின் அமெரிக்க தூதரகத்திற்கு முன்னிலையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்தே உள்துறை அமைச்சு இந்த தடையை விதித்துள்ளது.
எனினும் இந்த திரைப்படத்திற்கு எதிராக எதிர்வரும் சனிக்கிழமை பிரான்ஸில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி சமூக இணையத் தளங்களினூடே அழைப்பு விடுக்கப்பட்டு ள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் இந்த கேலிச் சித்திரங்களை எழுதிய பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என பிரான்ஸ் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
நேற்றைய தினம் விற்பனைக்கு வந்த கார்லி ஹெப்டோ பத்திரிகையில் முஹம்மத் நபியை சுட்டிக்காட்டப்பட்டு 4 கேலிச் சித்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இரு கேலிச் சித்திரங்களில் இறைத் தூதர் நிர்வாணமாக காண்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு கேலிச் சித்திரத்திற்கு 1963 ஆம் ஆண்டு வெளியான ‘கொன்டம்ப்ட்’ என்ற திரைப்படம் பின்னணியாக அமைந்துள்ளது. இதில் இறைத்தூதர் என்று சித்தரிக்கப்படும் கேலிச் சித்திரம் இயக்குனரைப் பார்த்து ‘எனது பின்புறம் அழகாக இருக்கிறதா’ என்று கேட்பது போல் அமைந்துள்ளது. மற்றொரு கேலிச் சித்திரத்தில் இறைத் தூதர் என சித்தரிக்கப்படுபவர் குனிந்திருப்பது போன்றும் அவருக்கு பின்னர் திரைப்பட நட்சத்திரங்கள் வரிசையில் நிற்பது போன்று வரையப்பட்டுள்ளது. அதில் ‘நட்சத்திரம் ஒன்று பிறக்கிறது’ என வசனம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.
மற்றைய கேலிச் சித்திரத்தில் அண்மையில் இடம்பெற்ற பிரிட்டன் இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டனின் அரை நிர்வாண புகைப்பட விவகாரம் சித்தரிக்கப்பட்டுள்ளதோடு, மிடில்டன் முஹம்மதுவின் பரபரப்பான படம் வெளியிடப்படும் என வாக்குறுதி அளிப்பதுபோல் காண்பிக்கப்பட்டுள்ளது.
இதில் தாடி வைத்த ஆண் தலையொன்றுடன் அரை நிர்வாணமாக பெண்ணின் உடல் கேலிச்சித்திரமாக வரையப்பட்டுள்ளது.
இந்த பத்திரிகையின் அட்டைப் படத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள கேலிச் சித்திரத்தில் பழைமைவாத யூதர் ஒருவர் தலைப்பாகை அணிந்த ஒருவரை சக்கர நாற்காலியில் தள்ளிச் செல்வது போன்றும், அந்த யூதரை சக்கர நாற்காலியில் இருப்பவர் ‘நீ ஒரு முட்டாள்’ என கூறுவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த கேலிச்சித்திரங்கள் வெளியானதைத் தொடர்ந்து, கார்லி ஹெப்டோ பத்திரிகையின் இணையத் தளத்தில் பலர் எச்சரிக்கை விட்டு கருத்து வெளியிட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த பத்திரிகையின் ஆசிரியர் ஸ்டிபன் கார்பொனியர் மேற்படி கேலிச்சித்திரங்கள் வெளியானதை நியாயப்படுத்தியுள்ளார்.
‘எனது நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களை கேட்க நான் பள்ளிவாசல் களுக்கு செல்லமாட்டேன். அதேபோன்று கடும்போக்கு முஸ்லிம்களும் எமது கார்லி ஹெப்டோ பத்திரிகையை வாசிக்குமாறு நான் கோரவில்லை’ என்று கார்பொனியர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கார்லி ஹெப்டோ பத்திரிகை மத முக்கியஸ்தர்களை விமர்சிப்பதில் கடந்த காலங்களிலும் பிரபலம் அடைந்திருந்தது. கடந்த 2008 இல் பொப்பாண்டவர் குறித்த கேலிச் சித்திரங்கள் அடங்கிய விசேட தொகுப்பொன்றை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கும் தோல்வி அடைந்தது.
அதேபோன்று ஏற்கனவே இந்த பத்திரிகை இஸ்லாமிய எதிர்ப்பு கேலிச் சித்திரத்தை பிரசுரித்து சர்ச்சையை கிளப்பியது. இதனால் கடந்த நவம்பரில் இந்த பத்திரிகையின் பாரிஸ் அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதலும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேற்கு ஐரோப்பாவில் அதிக முஸ்லிம் சனத்தொகை கொண்ட பிரான்ஸில் சுமார் 4 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.
ஏற்கனவே லொஸ்ஏஞ்சல்ஸைச் சேர்ந்த எகிப்து நாட்டின் கொப்டிக் கிறிஸ்தவர் ஒருவர் தயாரித்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகெங்கும் முஸ்லிம்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு வார காலமாக நீடிக்கும் ஆர்ப்பாட்டங்கள் வன்முறை மற்றும் தாக்குதல் சம்பவங்களில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த கேலிச் சித்திரங்களால் இந்த ஆர்ப்பாட்டங்கள் ஐரோப்பாவிலும் தீவிரம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே துனீஷியாவில் இருக்கும் பிரான்ஸ் பாடசாலைகள் நேற்றைய தினம் தொடக்கம் மூடப்பட்டன. இந்த கேலிச் சித்திரங்கள் வெளியானதைத் தொடர்ந்து மூடப்பட்ட இந்த பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.