9/16/2012

| |

கொழும்பில் ஜப்பான் தூதரகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அழகி!

கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகத்தில் வைத்து அழகிய யுவதி ஒருவர் கடந்த நாட்களில் கைது செய்யப்பட்டு உள்ளார். இவரின் பெயர் Piyumi Tharaka Kalpani Ranasinghe. வயது 23. பியகமவை சேர்ந்தவர்.
ஜப்பானுக்கு தொழில் விசா பெற்று செல்கின்றமை இலகுவான காரியம் அல்ல. இதை இவர் முதலீடாக பயன்படுத்தினார்.
ஜப்பானிய தூதரக ஊழியர் என்று வெளியில் காட்டிக் கொண்டார். ஜப்பானுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் செல்ல விசா பெற்றுத் தருவார் என்று சொல்லி ஏராளமானோரிடம் இருந்து இலட்சக் கணக்கில் பணம் வசூலித்தார். பல மாதங்களாக இந்த ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வந்திருக்கின்றார்.
இவரது நண்பர் ஒருவர் ஜப்பானிய தூதரகத்தில் கடமை ஆற்றுகின்றார். இவரின் ஏமாற்று வேலைக்கு நண்பரும் உடந்தையாக இருந்து வந்திருக்கின்றார். நண்பரின் உதவியுடன் ஆவண மோசடிகள் செய்து நால்வரை ஜப்பானுக்கு இவர் அனுப்பித்தான் உள்ளார்.
அத்துடன் ஜப்பானிய தூதரக ஊழியர் என்று மற்றவர்களை நம்ப வைக்கின்றமைக்காக போலி ஆடையாள அட்டைகள் சரிக் கட்டி வைத்து இருந்திருக்கின்றார்.
பெருந்தொகை பணத்தை பெற்றுக் கொண்டு இவர் காலத்தை இழுத்தடிப்புச் செய்து வந்தமை இவரிடம் பணம் கொடுத்து இருந்த பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இவர்களில் இருவர் சம்பவ தினம் இவரை பின் தொடர்ந்தனர். இவர் தூதரகத்துக்குள் நுழைந்தார். இவரை பின் தொடர்ந்து வந்தவர்கள் இவரைப் பற்றி பாதுகாப்புக் கடமையில் நின்ற ஊழியரிடம் விசாரித்தனர்.
சற்று முன் சென்ற யுவதியை உங்களுக்கு தெரியுமா?
தூதரகத்துக்கு அடிக்கடி வந்து செல்கின்றவர்.
தூதரக ஊழியரா?
இல்லை. ஆனால் இவரின் நண்பர் ஒருவர் தூதரகத்தில் வேலை பார்க்கின்றார். நண்பரை காண இவர் வருகின்றமை வழக்கம்.
பின் தொடர்ந்து வந்த இருவரும் ஏமாற்றமும், திகைப்பும், பதற்றமும் அடைந்தனர். பாதுகாப்பு ஊழியருக்கு யுவதியின் மோசடிச் செயல்பாட்டை விரிவாக எடுத்துச் சொன்னார்கள். பொலிஸாருக்கு முறையிட்டார் பாதுகாப்பு ஊழியர்.
யுவதியை கறுவாக்காட்டு பொலிஸ் நிலைய பொலிஸார் தூதரக வளவுக்குள் வைத்து கைது செய்தனர்.
இவரின் உடைமையில் இருந்து பல தரப்பட்ட விசா விண்ணப்பங்கள், போலி அடையாள அட்டைகள், போலிக் கடவுச்சீட்டுக்கள், இரண்டு இலட்சம் ரூபாய் பணம் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு உள்ளன. இவற்றை தூதரகத்திடம் பொலிஸார் கையளித்து உள்ளார்கள்..
ஜப்பானிய தூதரகத்தில் இருந்து மாத சம்பளம் பெறுகின்றார் என்று காட்டுகின்ற ஆவணங்களையும் போலியாக தயாரித்து வைத்து இருந்திருக்கின்றார். இந்த ஆவணங்களை இரு கார்களை நிறுவனம் ஒன்றில் இருந்து வாடகைக்கு பெற்று பயன்படுத்தி வந்திருக்கின்றார்.
இவரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜராக்கினர். இவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்று கொழும்பு பிரதான நீதிவான் ரஷ்மி சிங்கப்புலி உத்தரவிட்டு உள்ளார்.