9/26/2012

| |

தேசிய மின் வலையமைப்பு மூலம் யாழ் குடாவுக்கு மின்சாரம்

மஹிந்த ராஜபக்ஷஇலங்கையின் தேசிய மின் விநியோக வலையமைப்பின் ஊடான யாழ்ப்பாணத்திற்கான மின் விநியோகம் 25 வருடங்களின் பின்னர், செவ்வாயன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது.
ஜப்பானிய அரசின் 3500 மில்லியன் ரூபா நிதியுதவியில் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மின்சார விநியோக நிலையத்தின் ஊடாக இந்த மின் விநியோகம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கை மின்சார சபையின் வவுனியா உள்ளிட்ட கிளிநொச்சி பிராந்திய பிரதம பொறியியலாளர் செல்வராஜா பிரபாகரன் தெரிவித்தார்.
வவுனியாவையும் கிளிநொச்சியையும் 132 கிலோவாட் (கே.வி) உயர் மின் அழுத்தத்துடன் இணைத்துள்ள ஒரு உப மின்நிலையமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதில் இருந்து யாழ் குடாநாட்டின் ஒரு பகுதியாகிய மருதங்கேணி ஊடான பருத்தித்துறை உள்ளிட்ட வடமராட்சி பகுதிக்கு 10 கே.வி மின்சாரம் வழங்கப்படும்.
இது யாழ் குடாநாட்டின் 45 கே.வி மின்சாரத் தேவையின் ஒரு பகுதியைப் பூர்த்தி செய்யவுள்ளது.
இதனால் மின்பிறப்பாக்கிகளின் (ஜெனரேட்டர்) ஊடாக யாழ்ப்பாணத்திற்கு சுழற்சி முறையில் வழங்கப்படுகின்ற மின் விநியோகம் மேலும் சீரடையும் என நம்பப்படுகின்றது.
கடந்த 1987 ஆம் ஆண்டு யுத்த மோதல்கள் தீவிரமடையத் தொடங்கியதையடுத்து, தேசிய மின் விநியோக வலையமைப்பின் ஊடான மின் விநியோகம் தடைபட்டிருந்தது.
இதனையடுத்து, விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது, சக்திவாய்ந்த மின்பிறப்பாக்கிகளின் மூலமே தமக்குத் தேவையான மின்சாரத்தைப் பெற்று வந்தார்கள்.
இதன் ஒரு பகுதி பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டு வந்தது. எனினும் அது அனைவருக்கும் கிடைக்கவில்லை.
இதேவேளை, மீள்குடியேற்றப்படுகின்ற குடும்பங்களுக்கு அரசாங்கம் இலவசமாக மின் இணைப்புக்களை வழங்கி வருகின்றது.
இதன் ஊடாக சுமார் 14ஆயிரத்து 500 மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்கள் இதுவரையில் பயனடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஆய்வு

இதேவேளை, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள், கிளிநொச்சி நகருக்கான புதிய சந்தைக் கட்டிடத் தொகுதி, கரைச்சி பிரதேச செயலகக் கட்டிடம் என்பவற்றைத் திறந்து வைத்ததுடன், இந்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திப் பணிகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்திலும் கலந்து கொண்டு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்திருக்கின்றார்.
இந்தக் கூட்டத்தில் அரச அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி வன்னிப் பகுதி மக்கள் யுத்தம் காரணமாக 30 வருடங்கள் பின்தள்ளப்பட்டிருப்பதாகவும், தற்போது அவர்களது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள பல்வேறு வேலைத்திட்டங்களை மக்கள் பயனடையும் வகையில் அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த மக்கள் அனைவரும் எமது மக்கள் என்ற அடிப்படையில் எந்தவிதமான பாரபட்சமுமின்றி அதிகாரிகள் மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.