மூன்று மாகாண சபைகளிலும் அமோக வெற்றியீட்டியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தமது பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கும் என கட்சியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அத்துடன் ஜனாதிபதி தலைமையில் எமது கட்சி கூடி முதலமைச்சர் யார் என்பது பற்றி தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் சுசில் தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன்னதாக ஐ.ம.சு. மு.வில் அங்கம் வகிக்கின்ற சகல கட்சிகளும் ஒன்றிணைந்து வேட்பாளர் பட்டியல் தயாரிப்பது என முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் ஆசன ஒதுக்கீடுகள் தொடர்பாக ஆராய்ந்ததில் ஐ.ம.சு.மு.வில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டு பின்னர் ஒரே குடையின் கீழ் வருவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த தேர்தலில் மட்டுமல்ல இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களிலும் இதேபோன்று நடைபெற்றது. விமல் வீரவங்சவின் கட்சியும், இ.தொ.கா., முஸ்லிம் காங்கிரஸ், போன்ற கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன.
இப்போது சகல மாகாண சபைகளிலும் அமோக வெற்றியீட்டியுள்ளதுடன், பங்காளிக் கட்சிகளுடன் ஆட்சி அமைக்கும் என்றும் அமைச்சர் சுசில் கூறினார்.
கொழும்பு, மகாவலி மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவி த்தார்.