9/02/2012

| |

இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கென புலம்பெயர் சமூகம் வழங்கிய பெருந்தொகை பணம் அபேஸ்!

தமிழருக்கு அனுப்பிய நிதியில் பாரிய மோசடி

தமிழரசு, தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஏப்பம் விட்டதாக பகிரங்கக் குற்றச்சாட்டு

இலங்கை வந்து வன்னி சென்ற புலம் பெயர் தூதுக்குழு கண்டுப்பிடிப்பு
* மூன்று வருடங்களாக மாறி மாறி ஏமாற்றிப் பணம் கறந்தமை அம்பலம்
* கணக்கு வழக்கு விபரம் கேட்டபோது கையைப் பிசைந்து தட்டிக்கழிப்பு
* அரச உதவியைத் தவிர எதுவும் கிடைக்கவில்லை என மக்கள் வாக்குமூலம்
* தமிழ் கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்து கணக்குவழக்கை பேண வலியுறுத்து
இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வன்னி வாழ் தமிழ் மக்களுக்கென புலம்பெயர் தமிழர்களால் கடந்த மூன்று வருடங்களாக அனுப்பி வைக்கப்பட்ட மிகப்பெருந்தொகைப் பணம் பயன்படுத்தப்படாது தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்க் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் மோசமான முறையில் மோசடி செய்யப்பட்டுள்ளமை குறித்து புலம்பெயர் சமூகம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
யுத்தம் முடிவடைந்த ஆரம்ப காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக புலம்பெயர் சமூகம் அனுப்பிவைத்த பெருந்தொகைப் பணம் முழுமையாகச் சூறையாடப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்து வன்னிக்கு சென்ற புலம்பெயர் தமிழர்கள் சிலர் தமது உதவிக்தொகை குறித்து சம்பந்தப்பட்ட மக்களிடம் நேரடியாக விசாரித்தபோது அரசாங்கத்தின் உதவியைத் தவிர ஒருசதமேனும் கூட்டமைப்பின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களால் தமக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பெயர் குறிப்பிடப்பட்டு கேட்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக எவ்விதமான உதவிக் தொகையும் தமக்குக் கிடைக்கவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமுற்ற புலம்பெயர் தமிழர் குழு குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ளதுடன் தாம் கொடுத்த உதவித் தொகை குறித்த கணக்கு வழக்கையும் கேட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இவ்விடயம் தொடர்பாக கூட்டமைப்பின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தொடர்புகொண்டு கேட்டபோது தமிழரசுக் கட்சிக்கோ, தமிழ்க் கூட்டமைப்பிற்கோ முறையான கணக்குப் பதிவுகள் என்று எதுவும் கிடையாது. வெளிநாடு சென்றுவரும்போது பல உறுப்பினர்கள் பெருந்தொகைப் பணத்தை நிதியாகச் சேகரித்து வருகின்றனர். அவை கணக்கில் வைக்கப்படாது கொண்டுவருபவரது விருப்பின்பேரில் செலவிடப்படுகின்றது. எனவே முதலாவதாக தமிழ்க் கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்து மக்களுக்காக மக்கள் கஷ்டப்பட்டு அனுப்பும் நிதியை முறையாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி தனிப்பட்டமுறையில் பாராளுமன்ற உறுப்பினர்களது பெயர்களுக்கு வருவதை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும். அண்மையில் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட முக்கியஸ்தர் ஒருவருக்கு ஒரு கோடி ரூபா தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதுவரை அவர் அப்பணம் கிடைத்தமை குறித்து கட்சி தலைமைக்கோ, உயர்பீடத்திற்கோ அறிவிக்கவில்லை. இப்போது புலம்பெயர் குழுவின் இலங்கை விஜயத்தால் இத்தகைய பல நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் அம்பலப்படவுள்ளதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.