இடைமறிப்பு. எஸ்.எம்.எம்.பஷீர் அவர்களுடன் நான்-கற்சுறா
"60ஆண்டுகால தேசிய அரசியலுக்குச் சவால் விட்டு கிழக்கிலே தனிமனிதனாக 22000 வாக்குகளைப்பெற்று ஈட்டிய வெற்றியை நாம் சும்மா மதிப்பிடமுடியாது."
எஸ்.எம்.எம்.பஷீர் அவர்கள் லண்டனில் வசித்து வருகிறார். இலங்கை அரசியலில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து எழுதிவருபவர்.
கற்சுறா: தற்போது நிகழ்ந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கிழக்கில் முதல்ஆட்சியமைத்த தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் ஆட்சியை அமைக்க முடியாமல் போய்விட்டது. கடந்த தேர்தலைப் புறிக்கணித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த முறை வெட்கமற்றுப் போட்டியிட்டாலும் அதுவும் ஆட்சியமைக்க முடியவில்லை. ஆழும் கட்சியைச் சேர்ந்த முஸ்லீம் ஒருவரே முதலமைச்சராகியுள்ளார். இந்த நிலையில் தமிழ் மானம் போய்விட்டதாகவே கருதும் தமிழ்தேசியவாதிகள் கிழக்கின் கதை இனி முடிந்தது என்றே கவலை கொள்கிறார்கள். இனிவரும் காலங்களில் கிழக்கின் எதிர்காலம் எப்படியிருக்கும்?
பஷீர்: இந்தத்தேர்தலை விட கடந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழர் கூட்டமைப்பு பங்குபற்றவில்லை என்பதனால் அந்தப் பாரிய இடைவெளியை நிரப்பவே, அதாவது தமிழர் தரப்புக்குரிய வாக்கு என்ற வகையிலேயே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்குக் அதிகப்படியான வாக்கு அப்போது கிடைத்தது.
பஷீர் அவர்களின் இணையத்தள முகவரி : http://www.bazeerlanka.com/
இரண்டுகேள்வியில் ஒன்றும் அதன் பதிலும்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினது தோல்வி என்பதின் விளைவுகள் நீண்டகால விளைவுகளாக இருக்கும்.
இந்த முறை தமிழர்கூட்டமைப்புப் போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகளைப் பெற்றதன் மூலம் அது இப்போது நிரூபணமாகி இருக்கிறது. உண்மையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது அரசியலைப் பன்முகப்படுத்தவில்லை. அவர்களது கட்சியின் பெயர் கூட புலிகள் என்பதின் தொடர்ச்சி எனத் தக்கவைத்துக் கொண்டிருப்பதனால் மக்களிடத்தில் ஒரு மாயையைத் தோற்றுவித்துக் கொள்வது என்பதை தமக்கு சாதகம் என்று அவர்கள் நம்பினார்கள். மக்கள் தம்மைப் புலிகளின் ஒருபகுதியினர் என எண்ணிக் கொள்வார்கள் எனவும் அது தமக்குச் சாதகமாக இருக்கும் எனவும் அவர்கள் நம்பினார்கள். அது ஒரு பிழையான அணுகுமுறை என நான் எண்ணுகிறேன்.
இன்னொரு புறம் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் உள் முரண்பாடுகளின் வடிவமாக தங்களைக் காட்டிக் கொள்ள முற்பட்டார்கள். அது கருணாவுக்கூடாகத் தான் நடைபெற்றது. ஆனாலும் கருணாவுக்கும் சந்திரகாந்தனுக்கும் ஏற்பட்ட உள்முரண்பாடு வடக்குத் தலமைக்கு எதிராக வடக்குத் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான போராட்டத்தை நலிவடையச் செய்தது. அதுமட்டுமல்லாமல் அந்த இருவரது உள்முரண்பாடுகள் இன்றுவரை தொடர்கதையாகவே இருக்கின்றன. இந்த உள்முரண்பாடுகளே அந்தக் கட்சியை மிகப்பலவினப்படுத்தியது.
கருணாவின் தலைமயிலான அந்தக் கட்சி உள்முரண்பாடுகளற்று இருந்து இருக்குமானால் அதன் விளைவு வேறுமாதிரி இரந்திருக்கும். அவர்கள் சேர்ந்தியங்கியிருந்தால் அதன் பாதிப்பு - தாக்கம் என்பது வேறுமாதிரியானதாகவே இருந்திருக்கும். அந்த உள்முரண்பாட்டால் கட்சி நலிவடைந்து போனதையும் அதன் விளைவையும் நாம் இப்போது தேர்தல் வடிவில் பார்க்கிறோம்.
தேசிய அரசியலுக்குள் தமிழ் மக்களைக் கொண்டு போவது என்பது இலகுவான காரியமல்ல. ஏனென்றால் கடந்த 60 வருடகாலப் போராட்டத்திலே ஆட்சியமைத்த ஐக்கியதேசியக் கட்சியாகட்டும் சிறீலங்கா சதந்திரக் கட்சியாகட்டும் அவற்றை தமிழ்க் கட்சிகள் ஆதரித்தால் மாத்திரமே மக்கள் ஆதரவும் அவர்களுக்குச் சார்பு நிலையும் இருக்கும். மற்றப்படி தனித்துவமாக மக்கள் ஆதரித்த வரலாறு இல்லை. களநிலை இல்லை. அந்த வகையிலே கருணா அவர்கள் தேசியக் கட்சியான சுதந்திரக்கட்சியில் இணைந்ததின் மூலம் தனது அரசியல் அபிலாசைகளை அடைந்திருக்கிறார் என்பதும், அதனூடாக மக்களை தேசிய அரசியலுக்குள் உள்வாங்கிக் கொள்ளலாம் என்ற அவரது எதிர்பார்ப்பு என்பதும் பாரியளவு வெற்றியைத் தந்திருக்கிறதா என்று கேட்பதன் மூலம் தனித்துவமாகவே வடக்கிலிருந்து பிரிந்து கிழக்கு மக்களுக்கான கட்சியாக ஸ்தாபித்து கிழக்கு அரசியலை முன்னெடுத்த சந்திரகாந்தன் வெற்றியளித்திருக்கிறாரா என்பதையும் இந்தத் தேர்தலுக்கூடாக நாம் பார்க்கவேண்டும்.
சந்திரகாந்தனுடைய தலைமைத்துவத்திற்கு அப்பால் கட்சியினுடைய மொத்தச் செயற்பாடும் அதாவது கிழக்குத் தழுவிய அரசியற் செயற்பாட்டில் அவர்களது அரசியல் ஆழுமை என்பதில் பலவீனமாகவே இருந்திருக்கிறார்கள்.
அந்தவகையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் வழக்கம் போலவே சமூகத்தின் பிரபலங்களை சமூகசேவகர்களை முன்னாள் ஆசிரியர்களை கல்விமான்கள் போன்றோரைக் கொண்டே தமது அரசியலை முன்னெடுத்தவருகிறார்கள்.அதனூடாகவே அவர்கள் பலவெற்றிகளைப் பெறக்கூடியதாக இருந்திருக்கிறது.
அந்த சமூக ஆழுமை மிக்க பிரதிநிதிகளைப் பெறுவதிலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தவறி விட்டார்கள். அவர்களைப் பொறுத்தளவிலே சந்திரகாந்தன் என்ற தனிமனிதனைச் சார்ந்ததாகவே அவர்கள் பலம் இருந்திருக்கிறது என்பனை இந்தத் தேர்தல் புலப்படுத்தியிருக்கிறது. மற்றய அங்கத்தவர்களைப் பொறுத்தளவில் மற்றய மாவட்டங்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் போட்டிபோடக்கூடிய தகுதிகளைப் பெற்றிருக்கவில்லை என்பதையும் இந்தத் தேர்தல் பலப்படுத்தியிருக்கிறது.
ஆகவே திட்டமிட்டவகையில் கட்சியின் கட்டமைப்புக்கள் பலப்படுத்தப் பாடாமையும் தேர்தலுக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படாமையும் அந்த அரசியல் அனுபவங்களிலேயே அவர்கள் கற்றுக்குட்டிகளாக காணப்பட்டமையும் இந்தத் தோதலின் தோல்விக்கான காரணமாகப்பார்க்கப்படவேண்டும் .தனிப்பட்டவகையிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் சந்திரகாந்தன் 22000 வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றிருக்க முடியும் என்றால். அவருடைய ஆளுமை இங்கு புலப்படுகிறது. ஒருதனிமனிதனாக 60ஆண்டுகால தேசிய அரசியலுக்குச் சவால் விட்டு கிழக்கிலே தனிமனிதனாக ஈட்டிய வெற்றியை நாம் சும்மா மதிப்பிடமுடியாது.
வடகிழக்கு என்றும் தமிழ்த் தேசியம் என்றும் சொல்லிவந்த தமிழத்தேசியக் கூட்டமைப்பு முதலாவது கிழக்குமாகணத்தேர்தலைப் புறக்கணித்துவிட்டு இன்று 5 ஆண்டுகால இடைவெளிக்குப்பின் கிழக்கு மாகாணத்திற்கு அங்கீகாரம் வழங்குமாப்போல் தேர்தலில் போட்டியிட்டாலும் அவர்களின் நீண்டகால அரசியற்கோட்பாட்டை முன்நிறுத்தி, தமது அரசியல் பலம் ஆழுமை பலம் அரசியல் கருத்துப்பலம் என்பவற்றை முன்நிறுத்தித் தோதலில் நின்றாலும் அதற்கெதிராக மட்டக்களப்பு மாவட்டத்தில் 22000 பேர் வாக்களித்திருக்கிறார்கள் என்பது மிகமுக்கியமான விடையம்.
அதுவும் அவர்களைப் பொறுத்தளவில் சிங்களப் பேரினவாத அரசுடன் நின்று கொண்டு ஒரு துரோகியாக ஒரு காட்டிக் கொடுப்பாளனாக தமிழ்த் தேசிய விரோதியாகக் காட்டப்பட்ட ஒருவருக்கு 22000 வாக்குகளை அதுவும் அதிகப்படியான வாக்குகளை மக்கள் அளித்திருக்கிறார்கள் என்பதும் தமிழத் தேசியத்துக்கெதிராக தமது கிழக்கின் மகனாக மக்கள் அங்கீகரித்து அவரை வெற்றியடைய வைத்திருக்கிறார்கள் என்பதும் அந்தளவில் சந்திரகாந்தன் தனிமனிதனாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவனாகவும் இருந்து கிழக்கில் மகிப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது மறக்க முடியாத உண்மையாகும்.
ஆனால் இந்தத் தனிமனித வெற்றி தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் தலைமையின் வெற்றி என்பது எப்படி எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் மூலதனமாக்கப்படப்போகின்றது என்பது நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும். தொடர்ந்தும் கட்டுக் கோப்பற்ற அரசியல் கட்டுமானமற்ற கட்சியாக தமது கட்சியைத் தொடர்ந்து பேணுவார்களாக இருந்தால் மீளவும் தனிமனித வெற்றிகளாகவே இருக்குமேயொழிய கிழக்குமக்களின் கட்சியாக முதல் பதிவுசெய்யப்பட்ட கிழக்குமாகாணக் காட்சியாக இருக்குமா என்பது கேள்விக்குறியே.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தளவில் இம்முறை போட்டியில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் சமூக முக்கியஸ்தர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், கடந்தகாலத்தில் தமிழத்தேசியவாதத்தினையே ஊட்டி வளர்ந்தவர்கள். என்னைப்பொறுத்தளவில் அவர்கள் பாரிய வெற்றியை ஈட்டவில்லை என்றே சொல்வேன். அரசு சார்பாகக் கேட்ட கணிசமான வேட்பாளர்கள் தோல்வியுற்றாலும் பாரியளவு வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள்.
அந்தவகையில் தமிழத்தேசியக் கூட்டமைப்பின் மாயையை -அதாவது கூட்டமைப்பினர் பெருமளவு வெற்றியீட்டியிருக்கிறார்கள் தமிழ்மக்கள் முழுப்பேரும் அவர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள் கிழக்கு மக்களில் தாம் செல்வாக்குச் செலுத்தகிறார்கள் என்ற பொய் விம்பத்தை அது தகர்த்திருக்கிறது. மறுபுறம் தமிழ் பேசும் முஸ்லீம்கள் என்று அவர்கள் வெறுமனே பேசுகிற சுலோகக்கோட்பாடு கூட தோல்வியைத் தழுவியிருக்கிறது. ஏனென்றால் இவர்களுடன் இணக்கப்பாட்டிற்கு வராமல் முஸ்லீம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது என்பதும் இவர்களுக்கிடையில் உண்மையான இணக்கப்பாடோ ஒருங்கிணைவோ ஒருபோதும் இருக்கவில்லை. அவை வெறுமனே கோசங்களாகவே இருந்தன என்பதையுமே தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றன. அதன் பின் வந்த கூட்டுக்களும் காட்டியிருக்கின்றன.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் கணிசமான முஸ்லீம்கள் வாழ்கிறார்கள். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளைப் பொறுத்தளவில் அவர்களுடைய கட்சி தமிழ்மக்களைப் பிரதிநிதிப்படுத்தும் கட்சியாகவே செயற்பட்டது. அவர்களால் தமது வேட்பாளர்களில் முஸ்லீம்களையோ சிங்களவர்களையோ ஒருவரைத்தன்னும் உள்வாங்கியிருக்கவேண்டும். தமழ்க்கூட்டமைப்பு ஓரிரு முஸ்லீம் வேட்பாளர்களைக் கொண்டுவந்த அளவுக்குக்கூட இவர்கள்; ஒரு முஸ்லீமைக் கூடக்கொண்டுவரவில்லை. பல்தேசிய இனத்தின் முழுச் சமூகங்களின் கட்சியாக அது தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தாமல் வெறுமனே தமிழர்களின் கட்சியாகவே அது தேர்தலில் போட்டியிட்டது மிகப்பலவீனமான விடையமாகும்.
ஆனால் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசோ வெறுமனே முஸ்லீம் மக்களுக்கான கட்சியாக இருந்தாலும் அப்பாவிச் சிங்களமக்களை உள்வாங்கி அவர்களைச் சிங்களப் பிரதேசங்களில் போட்டியிடச்செய்தது. ஒரு Nசிய, இனவாத, மதவாதக் கட்சியினால் சிங்களமக்களையும் உள்வாங்கிக் கொண்டு தோதலில் போட்டியிட முடியுமென்றால் ஏன் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளினால் இயலாமல்போனது என்ற கேள்வி எழுகின்றது. வெறுமனே புலிகள் சார்ந்த கட்சியாக இருந்ததுதான் தோல்விக்குக் காரணமாக அமைந்தது என எண்ணத்தோன்றுகிறது.
அடுத்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு முஸ்லீம் முதலமைச்சரைத் தாமே முன்வந்து வழங்குவதாகச் சொன்னார்கள். அவ்வாறு வழங்குவதூடாக அரச எதிர்ப்பு, சிங்களப்பேரினவாதம்,சுயாட்சி, தன்னாட்சி, அல்லது வடக்குக்கிழக்கு இணைப்பு என்ற தங்களது பல்வேறுபட்ட நிகழ்ச்சி நிரலை தங்களது அரசியல் செயற்திட்டங்களை தங்களுக்கூடாகவே செயற்படுத்தவதற்கு ஒரு முஸ்லீம் முதலமைச்சரை தாம் நிமிக்கத் தயாராய் இருப்பதாகச் சொன்னார்கள். அந்தக் கனவில் பாரிய இடி விழுந்திருக்கிறது.
முஸ்லீம்களைப் பொறுத்தளவில் அவர்கள் எந்தக்கட்சியும் சாராது தனித்துவமாகப் போட்டியிட்டால், அதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டாலும் கூட முஸ்லீம் முதலமைச்சர் ஒருவர் வருவதற்கான சாத்தியப்பாடுகளே அங்கு உண்டு. ஆனால் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தளவில் மற்றய இனங்களது ஆதரவு தேசியரீதியான ஆதரவு மூலம்தான் ஒரு முதலமைச்சர் வருவதற்கான சாத்தியப்பாடுகள் உண்டு.
காரணம் சமூகங்கள் பிளவுபட்டதாக அரசியல் ரீதியான சிந்தனைகள் பிளவுபட்டதாக இருக்கின்ற காரணத்தால் தேசியரீதியான ஆதரவுடன் கூடிய முதலமைச்சர் வருவதற்கான சாத்தியப்பாடுகளே அதிகமுண்டு. ஆனாலும் முஸ்லீம் காங்கிரசோ பாரியளவு வெற்றியை அங்கு பெறவில்லை. தேசிய காங்கிரசிலே அகில இலங்கை முஸ்லீம் காங்கிரசிலே போட்டியிட்டவர்கள் கூட அதேயளவு வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள். குறுகிய இனவாத மதவாத கட்சியான முஸ்லீம் காங்கிரஸ்கூட உண்மையில் பார்க்கப்போனால் பாரியளவு வெற்றியைப் பெறவில்லை. எவ்வாறு கூட்டமைப்பு பாரியளவு வெற்றியைப் பெறவில்லையோ அதேபோல் முஸ்லீம் காங்கிரசும் பாரியளவு வெற்றியைப் பெறவில்லை.
பேரினவாதத்திற்கெதிரான சுலோகங்களை பாரியளவு விழுங்கிக்கொண்டு மக்கள் வாக்களித்ததாக இல்லை. அதனால்தான் ஒரு இணக்கப்பாட்டில் கூட்டுச்சேர்ந்து கொண்டு ஆட்சியை அமைக்கவேண்டிய தேவை அவர்களுக்கு வந்தது. அந்தவகையில் தான் தங்களுக்கு ஆட்சி அமைக்கும் சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால் கூட தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கத் தாம் தயாராய் இருக்கிறோம் ஜனாதிபதி அழைத்தால் தாம் செய்யத் தயாராய் இருக்கிறோம் என்று சம்பந்தன் அறிக்கை வெளியிட்டார்.
இதன்மூலம் என்ன தெரிகிறதென்றால் ஆட்சியை கிழக்குமாகாணத்தில் தாம் தொலைப்பது என்பது அதிலிருந்து விடுபடுவதென்பது தமது எதிர்காலக் கனவிற்கு, தமது தன்னாட்சிக் கோரிக்கைக்கு, தமது பிராந்திய ஆளுமைக்கு,தமது 60 ஆண்டுகால அரசியல் வரலாறுக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தப்போகிறது என்பதும் அந்தக் கோட்பாடுகளையே சர்ச்சைக்குரியதாக கேள்விக்குரியதாக மாற்றப்போகிறது என்பதையும் முஸ்லீம்கள் தம்மை முழுமையாக அங்கீகரிப்பவர்களாக இல்லை என்பதையும் உணர்ந்துதான் தாம்சார்பாக ஒரு முஸ்லீமை முதலமைச்சராகக் கொண்டுவரத் தயாரானார்கள். அந்தத்தயாரிப்பில் பாரிய இடி விழுந்திருக்கிறது.
அந்தத் தோல்வியில் இருக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் முஸ்லீம் காங்கிரஸ் மீது தற்போது தொடர்ந்து சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் இன்னும் பாரிய பிளவை அங்கு ஏற்படுத்தும். முஸ்லீம் காங்கிரஸ் கபடநாடகம் ஆடிவிட்டது. பேரினவாத அரசின் கூட்டாளிகள், முஸ்லீம்கள் தமது புத்தியைக் காட்டிவிட்டார்கள் என்பது மாதிரியான விமர்சனங்கள் ஒருபோதும் சுமூகமான உறவைக் கொண்டுவராது. இது வெறுமனே ராவூப் ஹக்கீம் மீதான பாதிப்பாக இருக்காது. மொத்த முஸ்லீம் சமூகத்தின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தும். சமூகங்களுக்கிடையில் முரண்பாடு வரும்போது முஸ்லீம்கள் தொப்பிபிரட்டிகள் ஏமாற்றுக்காரர்கள் என்ற பழிகளைச் சுமத்துவதை நாம் வரலாற்றில் பார்த்திருக்கிறோம். ஆகவே மீண்டும் தமிழ் முஸ்லீம்களுக்குள் உள்ள உறவு என்பது பொய்யானது என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்திருக்கிறது.
நாக்கிலே நறுந்தேனும்
நெஞ்சிலே நீக்கிரை நெஞ்சம் கொண்டோன்
இன்சொல் உரைக்கின்றாhன் என்றென்றும் நம்பாதே.
என்சொல்லினும் செய்வான் இடர்.
என்பதற்கொப்பானவர்கள் தமிழத்தேசியக் கூட்டமைப்பினர். வரலாற்றில் முஸ்லீம்களுக்கு தீங்கிழைக்கப்பட்ட போதிலெல்லாம். வாய்மூடி ஆதரவு தெரிவித்தவர்கள் இவர்கள். ஒருபுறம் சகோதரர்கள் என்பார்கள். மறுபுறம் அத்தனை கொடுஞ்செயல்களையும் ஆதரிப்பார்கள்.
இதைத்தான் சொல்கிறேன் என்சொல்லினும் செய்வான் இடர் என்று.
ஆகவே முஸ்லீம்கள் தமிழர்கள் என்பது இருதுருவங்களாகிவிட்டது. கிழக்கில் இந்தமுறை முஸ்லீம் முதலமைச்சர் வந்தால் அடுத்த முறையும் முஸ்லீம் முதலமைச்சர் வரவே அவர்கள் விரும்புவார்கள். எப்போதும் எதிர்ப்பரசியல் செய்யாது சார்பு அரசியல் செய்து தமது அனுகூலங்களைப் பெற்ற சமூகம் தற்போதும் அரசசார்பு அரசியலூடாக பல அனுகூலங்களைப் பெறுவதன் மூலம் அடுத்த தேர்தலிலும் தமது சமூகத்தின் முதலமைச்சர் ஒருவர்வருவதையே அவர்கள் விரும்புவார்கள்.
மலையகத்தில் எவ்வாறு தொண்டமான் வருகின்ற அரசோடு கூட்டமைத்து சார்பு அரசியல் செய்து தனது சமூகத்தை வளப்படுத்தினாரோ அதேபோல் மூஸ்லீம் சமூகமும் கடந்துவரும் காலங்களில் சார்பபு அரசியலை மேற்கொண்டு வளம்படுத்தும்.
ஆக, சம்பந்தனது தமிழத்தேசியக் கோட்பாட்டின் மீது மண் விழுந்திருக்கிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினது தோல்வி என்பதின் விளைவுகள் நீண்டகால விளைவுகளாக இருக்கும்.