கிளிநொச்சியில் பல்கலைக்கழகம் அமைக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை வன்னி மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக இன்று வன்னிப் பாடசாலைகளைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஒன்றுசேர்ந்து, கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள பல்கலைக்கழக வளாகப் பகுதியில் சிரமதானப்பணியில் ஈடுபடுகின்றனர். பற்றைகள் வளர்ந்துவிட்டிருக்கும் பொறியியல்பீட வளாகப் பகுதியிலேயே இந்த மாணவர்கள் துப்புரவுப் பணிகளை மேற்கொள்கிறார்கள்.
மாணவர்களை அரசியல் நோக்கிலேயே இந்தப் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தமிழரசுக் கட்சியின் பத்திரிகை விசனச் செய்தி வெளியிட்டுள்ளது. வன்னி மண்ணில் பல்கலைக்கழகம் அமைவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் என்ன அரசியல் நோக்கம் இருக்கமுடியும் என்பதை அப்பத்திரிகை விளக்கவில்லை.
எல்லாச் செயல்களிலும் அரசியல் கலந்திருக்கிறது என்கிற அடிப்படை விளக்கத்திலிருந்து, அப்பத்திரிகை கண்டுபிடிக்க முனையும் அரசியல் நோக்கம் எதுவாக இருக்கும் என்பதை நாம் கொஞ்சம் விளக்க அல்லது விளங்கிக்கொள்ள முயற்சிக்கலாம்.மக்களுக்கு கல்வி கிடைக்க வழி செய்தல், தொழில் வாய்ப்புகளை வழங்குதல், இருப்பிடங்களை அமைக்க, வறுமையைப் போக்க, போக்குவரத்தைச் சரிசெய்ய, நிம்மதியாக வாழ வேண்டிய அபிவிருத்திகளைச் செய்தல், வாழ்வாதார வசதிகளை அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றல், வீழ்ந்துகிடக்கும் மக்களது வாழ்க்கையை உயர்த்துவதன் மூலம் அடுத்தகட்டமாக அவர்களை தன்னம்பிக்கையுடன் விழிப்படையச் செய்து அரசியலுரிமைகளைப் பெற முயற்சித்தல் என்பது ஒரு வகையான அரசியல் நோக்கம் எனலாம்.
தேர்தலுக்குத் தேர்தல் பதவிகளைப் பிடித்துக் கொள்வதற்காக வந்து வாக்குகள் கேட்டல், மூன்று வருடங்கள் என்ன முப்பது வருடங்களாகவும் தேர்தலில் வென்றால் தீர்வு வந்துவிடும் என்று சொல்லியே வாக்குக் கேட்டுக் கொண்டிருத்தல், தேர்தல் முடிந்தவுடன் உட்கட்சிக்குள்ளேயே ஒருவரை எதிர்த்து ஒருவர் அறிக்கை விட்டுக்கொண்டிருத்தல், ஓய்ந்த நேரத்தில் அரசாங்கத்தை எதிர்த்தும் உணர்ச்சிபொங்க குற்றச்சாட்டுகளை வீசி மக்களை மகிழ்ச்சிப்படுத்திவிட்டு உலகம் சுற்றிவருதல், தேர்தல் வேலை செய்த தொண்டனுக்குக் கூட காசு கொடுக்காமல் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தலைவர்கள் சொத்துச் சேர்த்துக் கொள்ளுதல், நெருங்கிய உறவுகளுக்கு மட்டும் அரசாங்கத்திடம் பின்கதவால் சென்று சலுகைகள் பெற்றுக் கொடுத்தல் போன்ற அதிமுக்கிய வேலைகளும் இன்னொரு வகையான அரசியல் நோக்கத்தின் கீழ் வருவன எனலாம்.
இதில் எந்த அரசியல் நோக்கத்திற்காக இன்று மாணவர்கள் சிரமதானப் பணிகளில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் அப்பத்திரிகை குறிப்பிட்டு விசனமடைந்திருக்கலாம். ஒருவர் மக்களிடமிருந்து திரட்டிய பணத்தை களவாடிக்கொண்டு தப்பியோடிப் பின்னர் அரசபடையினரின் இராணுவ விமானத்தில் யாழ்ப்பாணம் வந்திறங்கித் தமிழ்த்தேசியம் பேசி பதவி பெற்றுக்கொள்வதிலும் அரசியல் நோக்கம் இருக்கத்தான் செய்கிறது.
அதுபோல, தன்னுடைய பாடசாலை மாணவர்களை வற்புறுத்திப் போர்க்களமுனைக்கு அனுப்பிச் சாகக் கொடுத்துவிட்டு, தான் மட்டும் செஞ்சிலுவைச்சங்க வாகனத்திலேறித் தப்பியோடிவந்து எம்.பி. வாழ்வைப் பெற்றுக்கொண்டவருக்கும் இருந்தது அரசியல் நோக்கம்தான். இவர்களெல்லாம் வன்னியில் பல்கலைக்கழகம் அமைவதை ஏன் பொறுக்க முடியாமல் விசனப்பட்டபடி இருக்கிறார்கள் என்பதுதான் ஆராயப்பட வேண்டியது.
இதே தமிழரசுக் கட்சியினர்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியாக வேடந்தாங்கிநின்று யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைக்க முடிவெடுக்கப்பட்ட வேளையிலும் எதிர்ப்புத் தெரிவித்து நின்றவர்கள். இடதுசாரிகளும் தம்மால் ‘துரோகிகள்’ என முத்திரை குத்தப்பட்ட அல்பிரட் துரையப்பா போன்றவர்களும் சேர்ந்து சாதித்தால் அது வரலாற்றில் பதிவாகி தமக்கு நிரந்தர இழுக்காகிப் போய்விடும் என்ற வெப்பிசாரத்திலேயே அன்றும் எதிர்த்தார்கள்.
தமிழ் மக்களுக்கு நன்மையான விஷயம் நடக்கிறதே என்று இவர்கள் பார்ப்பதேயில்லை. தங்களது அரசியல் லாபங்களுக்குச் சரிவராவிட்டால், ‘மூக்குப் போனால் போகிறது, எதிரிக்குச் சகுனப் பிழையாக்குவோம்’ என்றே இவர்கள் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகிறார்கள். அதன் பிரதிபலனே நமது மக்களது அழிவுகளும் ஒட்டுமொத்த சமுதாயப் பின்னடைவுமாகும்.
1974-ல் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைந்துவிடாமல் தடுப்பதற்காக இவர்கள் பல சிரிப்புக்கிடமான கதைகளை எல்லாம் மக்கள் மத்தியில் அவிழ்த்து விட்டார்கள். சேர்.பொன்.இராமநாதனால் உருவாக்கப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரியில் இப்பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டால் அந்தப் பாடசாலை இல்லாமல் போய்விடும் என்றார்கள். அதாவது எங்கள் மக்களுக்கு பிரியாணி வேண்டாம் கஞ்சியே போதும் என்பதே இவர்கள் கொள்கை.
அப்போதும் தமிழ்மக்கள் கல்வியிலே அக்கறை கொண்ட நல்லவர்கள் இவர்களுக்குப் பதிலளித்தார்கள். திருநெல்வேலியில் தனது மனைவியின் பெயரில் பரமேஸ்வரா ஆண்கள் கல்லூரியையும், மருதனார்மடத்தில் தனது பெயரில் இராமநாதன் பெண்கள் கல்லூரியையும் இராமநாதன் தம்பதிகள் அமைத்ததின் நோக்கம், எதிர்காலத்தில் அவற்றை பல்கலைக்கழகத் தரத்திலான உயர்கல்வி நிறுவனங்களாக வளர்த்தெடுக்கும் நோக்குடன்தான் என, இந்த எதிர்ப்பரசியல் விண்ணர்களுக்கு அவர்கள் விளங்கப்படுத்தினர்.
மக்கள் நெருக்கமாக வாழ்கின்ற சூழலில் பல்கலைக்கழகம் அமைந்தால், அங்கு பயிலும் மாணவ மாணவியரின் ‘சேஸ்டை’களைப் பார்த்து, இதர பாடசாலை மாணவர்களும் ‘கெட்டு’ப் போய்விடுவார்கள் என்றும் குழப்பிப் பார்த்தார்கள். சிங்கள மாணவர்களும் கற்பதற்கு வருவார்கள், அதன்மூலம் சிங்கள ஆதிக்கம் சிங்களக் குடியேற்றம் எல்லாம் வரும் என்றும் வழமையான இனவாதக் குண்டுகளையும் தூக்கிப் போட்டார்கள்.
இவர்கள் அன்று தொடக்கிவைத்த தமிழ் மக்களுக்கெதிரான அழிவுப் பாதையையே இன்றும் தமிழ்மக்களுக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இளஞ்சமுதாயத்தைக் கல்வியறிவற்றவர்களாக்கி இவர்களது ரோசத்திற்கான யுத்தத்தில் அவர்களைப் பலிக்கடாக்களாக்குவதிலேயே குறியாயிருக்கிறார்கள். இப்போதும் அதே பாணிகளிலேயே கிளிநொச்சியில் அமையவிருக்கும் பல்கலைக்கழகத்திற்கும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள். அங்கு பல்கலைக்கழகம் அமைந்த பின்னர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குச் செய்ததைப் போல, அதையும் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவருவதற்கான குத்துக்கரணங்களையும் உடனடியாகவே தொடங்கிவிடுவார்கள்.
பல்கலைக்கழக நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கு கல்விச்சமூகம் விசனப்படுகிறதாம் என்று இன்றைய வயிற்றெரிச்சல் ஜோக்குகளை அவிழ்த்துவிடுகிறார்கள். இவர்களாகவும் தமிழ்மக்களுக்குப் பிரயோசனமான எதையும் எடுத்துக் கொடுக்கவும் மாட்டார்கள். மற்றவர்களாலும் மக்களுக்கு நல்லது எதுவும் நடந்துவிடக்கூடாது என்றும் பார்ப்பார்கள். இவர்களுக்கென்றே தமிழில் உள்ள பழமொழியையும் நாகரிகம் கருதி இங்கு எழுதாமல் தவிர்க்க வேண்டியிருக்கிறது.