பிரதியமைச்சரும் SLFP முஸ்லிம் பிரிவின் பொறுப்பாளருமான பைஸர்
முஸ்தபா செவ்வி
* அரசை விமர்சித்துக் கொண்டு அரசில் ஒட்டியிருப்பது ஏன்?
* பல்டி அரசியல் நடத்துவதில் மு.காவை விஞ்ச எவருமில்லை!
* அமைதியாக வாழும் முஸ்லிம்களின் வாழ்வை சீர்குலைக்கும் மு.கா!
* மர்ஹ{ம் அஷ்ரப் வளர்த்தெடுத்த மு.கா இன்று அழிவுப் பாதையில்!
* சமூக நலன் துளியளவும் இல்லாத மு.கா சுயநல அரசியலில்!
* முஸ்லிம்களுக்கு தீங்கு எனில் முதலில் குரல் கொடுப்பவன் நானே!
அரசியலுக்காக சமூகத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் முஸ்லிம் காங்கிரஸின் தற்கால
செயற்பாடுகளைத் தான் வன்மையாக எதிர்ப்பதாக பிரதியமைச்சரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்
கட்சியின் முஸ்லிம் பிரிவின் பொறுப்பாளருமான பைஸர் முஸ்தபா தெரிவித்தார். கிழக்கு மாகாண சபைத் தேர் தலில் வாக்குகளைப் பெறுவதற் காக முஸ்லிம் காங்கிரஸ் படாதபாடு பட்டுவருகிறது. இதற்காக இனத்துவேசமான கருத்துக்களை மேடைகளில் முன்வைத்து வருகிறது. அரசாங்கம் பள்ளிவாசல்களை உடைப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது. பள்ளிவாசல் என்பது மரியாதைக்குரிய வணக்கஸ்தலம். இறைவனின் இருப்பிடம். அத்தகைய புனிதமான இறை இல்லத்தை அரசியலுக்காக சிறுபிள்ளைத்தனமாக மு.கா பயன்படுத்தி வருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
எனவே பள்ளிவாசல் சம்பவங்களை ஒரு போதும் அரசியலாக்கித் தமது சொந்த அரசியலுக்கு பயன்படுத்தாது நாம் ஒற்றுமையாக அவற்றின் புனிதத் தன்மைக்குப் பங்கம் ஏற்படாது பாதுகாக்க வேண்டும். முஸ்லிம்களுக்கோ அல்லது பள்ளிவாசல்களுக்கோ கெடுதல் இடம்பெறுகிறது என்றால் அங்கு நானே முதல் ஆளாக நின்று தட்டிக் கேட்பேன். குறிப்பாக தெஹிவளைச் சம்பவத்தின்போது அங்கு முதலாவதாகச் சென்று பெரிதாக எழவிருந்த மோதலைச் சமாதானமாகத் தீர்த்து வைத்தேன். அவ்வாறு நாம் நிதானமாகவும், புத்திசாலித் தனமாகவும் செயற்பட வேண்டுமே தவிர மு.கா போன்று எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செயற்பட்டால் பாரிய இன மோதலுக்கே அது வழிவகுக்கும்.
கிழக்கு மாகாணசபையின் ஆட்சியைக் கைப்பற்ற தமிழ்க் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் மறைமுகமான இரகசிய உடன்பாடு ஒன்றைச் செய்துள்ளதாக அறிய முடிகிறது. மு.கா அவ்வாறு செய்வது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத் திற்கும் செய்யும் பாரிய துரோகமாகும். இதனை எந்தவொரு முஸ்லிம் மகனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். விடுதலைப் புலிகளின் காலத்தில் புலிகளால் வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்தனர்.
அன்று காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 108 முஸ்லிம் கள் பள்ளியினுள் வைத்தே படுகொலை செய்யப்பட்டனர். வடக்கில் ஒரு லட்சம் முஸ்லிம்கள் உடுத்த உடுப்புக்களுடன் இரு மணி நேரத்தினுள் தமது பூர்வீக மண்ணிலிருந்து பலவந்தமாக வெளி யேற்றப்பட்டனர். இதையெல்லாம் அன்று புலிகளுடன் ஒட்டி உறவாடி அவர்களது குரலாக இருந்த, இன்றும் இருந்து வரும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் மெளனமாக இருந்து வேடிக்கை பார்த்தனர். இத்தகையவர்களுடன் முஸ்லிம்களுக்கு ஒருபோதும் கூட்டுவைக்க முடியாது. அப்படி சிந்திப்பதே சமூகத்திற்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். ஆனால் மு.கா இன்று தனது அரசியல் இருப்பிற்காக இச்செயலில் ஈடுபடத் துணிந்து சமூகத்தை அடகு வைக்கத் தீர்மானித்து விட்டது என்றும் பைஸர் முஸ்தபா கவலை தெரிவித்தார்.
அன்று புலிகள் முஸ்லிம்களைக் குறிவைத்துத் தாக்கியபோது எமக்காக தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒரு சிறு குரலாவது கொடுத்தார்களா? இல்லை. மாறாக இன்று மு.காவுடன் கூட்டுவைக்க அவர்களும் முன்வந்துள்ளனர். அவர்களைக் குறை கூறுவதை விடுத்து எம்மவர்களைப் பற்றிச் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் சமூக சிந்தனையுடன் இக்கட்சியை ஆரம்பித்து, தானிருக்கும் வரை திறம்பட நடத்தினார். தனது காலத்தில் துறைமுகம் பாடசாலைகள், வைத்தியசாலைகள் அமைத்து கிழக்கை அபிவிருத்தி செய்து இளைஞர் யுவதிகளுக்கு பல்வேறு தொழில்வாய்ப்புக்களையும் ஏற்படுத்தினார். அவரது மறைவின் பின்னர் வந்த மு.கா தலைமை இன்றுவரை சமூகத்திற்காக என்ன செய்தது என்று செய்த ஒன்றையாவது கூற முடியுமா? கட்சியை கூறுபோட்டு, பழையவர்களை பழிவாங்கி இன்று ஏனைய சமூகங்களுடன் விரிசலை ஏற்படுத்தி வருவதே இன்றைய தலைமையின் சாதனைகளாகும் என்றும் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
கடந்த ஆட்சியின்போது கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கூட தக்கவைக்க முடியாது ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தாரை வார்த்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை முதலமைச்சர் பதவிக்காக நீலிக் கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக உள்ளது.
கிழக்கு மாகாணசபை ஆட்சியை மு.காவுடன் இணைந்து அமைக்க வேண்டுமென்ற எந்தத் தேவைப்பாடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குக் கிடையாது. அதனைக் கடந்த மாகாண சபைத் தேர்தலில் நிரூபித்துள்ளோம். மு.கா ஐ.தே.க வுடன் இணைந்து கடந்த தேர்தலில் போட்டியிட்ட போதும் அக்கட்சியினால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது போய் விட்டது.
அத்துடன் மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கூட தமது சுயநலத் துக்காக மு.கா தலைவர்கள் ஐ.தே.க விற்குத் தாரை வார்த்து விட்டு கொழும்புக்கு ஓடினர். கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போதும் வாக்களித்த மக்க ளைக் கைவிட்டு விட்டு எம்.பி பதவிக்காக கொழும்புக்கு ஓடினர். இதுதானா முஸ் லிம் சமூகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள பற்று என்றும் பைஸர் முஸ்தபா கேள்வி எழுப்பினார்.
இன்று அரசாங்கதைப் பற்றி மேடைகளில் மிக மோசமாக விமர்சித்துவரும் மு.கா தலைவர்கள் தொடர்ந்தும் அரசில் ஒட்டிக் கொண்டிருப்பதன் அர்த்தம் தான் என்ன? நமது நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு பிரச்சினைகள் பலவுள்ளன என்பதை நாம் மறுக்க முடியாது. அவைகள் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும். எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான பிரச்சினைகள் எழுவது இயல்பு. அவற்றை நமது நாட்டுக்குள் பேச்சுவார்த்தை மூலம் புரிந்துணர்வு அடிப்படையில் தீர்த்துக் கொள்வதே புத்திசாலித்தனமானது. அதை விடுத்து மக்களின் உணர்வுகளை தூண்டி வாக்கு வேட்டைக்காக மேடைகளில் கொக்கரிப்பது இன நல்லுறவை மேலும் விரிவடையச் செய்யும்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மேடைகளில் இனவாதப் பிரச்சாரத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். யதார்த்த நிலைமைகளைப் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும். வாக்குகளைப் பெறுவதற்காக மனச்சாட்சிக்கு விரோதமான செயற்பாடுகளில் மு.கா ஈடுபடக்கூடாது.
மக்களே எஜமானர்கள். கிழக்கு மாகாண மக்கள் புத்திசாலிகள். எனவே அவர்கள் சரி எது, பிழை எது என நன் கறிவர். மு.காவைப் பொறுத்தவரையில் தமது பிரசாரங்கள் மூலம் இனங்களுக் கிடையே காழ்ப்புணர்வை வளர்ப்பதைக் கைவிட வேண்டுமென்பதே எமது கோரிக்கையாகும்.
மர்ஹும் பதியுதீன் முஹம்மத், மர்ஹும் அஷ்ரப் ஆகியோரே எனது அரசியல் குருமார். அவர்கள் தாம் சாணக்கியம் மிக்க தலைவர்கள் என்பதைப் பல சந்தர்ப்பங்களில் உணர்த்தியுள்ளனர். அஷ்ரப் அவர்கள் தனது கட்சி மூலமாக சமுகத்திற்குச் சக்தியளித்து, கட்சியை வளர்த்தெடுத்து அதேசமயம் அரசாங்கத்திற்கும் சக்தியாக, பக்கபலமாக இருந்துவந்தார். ஆனால் இன்றோ கட்சிக்கும், சமூகத்திற்கும், அரசாங்கத்திற்கும் எவ்விதமான பிரயோசனமும் இல்லாத நிலையிலேயே மு.காவும் அதன் தலைமைகளும் செயற்படுகின்றன. அதனால் எனது தந்தையின் நெருங்கிய நண்பர், எனது அரசியல் குரு மர்ஹும் அஷ்ரப் அவர் களால் எமது இல்லத்தில் வைத்து ஆரம் பிக்கப்பட்ட மு.காவின் ஸ்தாபகத் தலை வரது சிறந்த கொள்கைகளை பின்பற்றுமாறு தான் மு.கா தலைமையைக் கேட்பதாகவும் பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தெரி வித்தார். அரசியலில் தமது சுயலாபத்திற்காக பல்டி அடிப்பதில் மு.காவை விஞ்ச எவராலும் முடியாது எனும் அளவிற்கு 2005 ஆம் ஆண்டிலிருந்து இவர்கள் நடத்திவரும் நாடகங்கள் அரங்கேறி வருகின்றன. ரணில் விக்கிரமசிங்கதான் சிறந்த தலைவர் எனக் கூறி அவருடன் இருந்துவிட்டு பின்னர் சரத் பொன்சேகா விற்கு ஆதரவு தெரிவித்தனர். அவர் தோற்றதும் பல்டி அடித்து அரசின் பக்கம் தாவி சலுகைகளைப் பெற்றனர். இன்று சலுகைகளைப் பெற்றுக்கொண்டே அரசை விமர்சிக்கின்றனர். இவர்களுக்கு சமூக நலன் என்பது துளியளவும் கிடையாது. தமது குறுகிய நன்மைக்காக எதனையுமே செய்வர் என்பதே மக்களது கணிப்பாக உள்ளது.
மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் நல்லவர். அவருடன் எனக்கு எவ்விதமான தனிப்பட்ட குரோதமும் கிடையாது. நான் எனது சமூகத்திற்காகவே குரல் கொடுக்கிறேன். இந்நாட்டில் வாழும் சிங்கள, தமிழ் சகோதரர்களுடன் ஒற்றுமையாகவும் சகோதரத்துவத்துடனும் வாழ்வதே முஸ்லிம்களது கடப்பாடாகும். அதனை தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டுமே தவிர உருக்குலைக்கக் கூடாது என்றும் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
இந்நாட்டில் கிழக்கில் மட்டும் முஸ்லிம்கள் வாழவில்லை. மூன்றில் இரண்டு பகுதியான முஸ்லிம்கள் வடக்கு கிழக்கிற்கு வெளியேயும் வாழ்கின்றனர். கிழக்கில் வாக்குகளைப் பெறுவதற்காக இனத்துவேசம் பேசி நாட்டின் ஏனைய பகுதிகளில் அமைதியாக வாழும் முஸ்லிம்களின் வாழ்வைச் சீர்குலைத்துவிடக் கூடாது என்றும் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.