எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர். நேற்று புதன்கிழமை (29.08.2012) மாலை களுதாவளையில் இடம் பெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்திலேயே இவ் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவரும், முதலமைச்சர் வேட்பாளருமாகிய சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) விஞ்ஞாபனத்தின் முதலாவது பிரதியை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் ஆலோசகர் சின்னா மாஸ்டரிடம் (ஸ்ராலின்) வழங்கி வைத்து வைபவ ரீதியாக அதனை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து களுதாவளைப் பிரதேசத்தின் விளையாட்டுக் கழகங்கள், அபிவிருத்திச் சங்கங்கள், மீனவர் சங்கங்கள், விவசாயிகள் சங்கம், மாதர் அமைப்புக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் என்று பலதரப்பட்ட நிறுவனங்களின் சார்பில் கட்சித் தலைவர் சந்திரகாந்தனிடம் விஞ்ஞாபனத்தின் பிரதிகளைப் பலரும் பெற்றுக் கொண்டனர்.
சுமார் இரண்டாயிரம் பொதுமக்கள் திரண்டு வந்து இப் பிரச்சாரத்தில் பங்கேற்றிருந்தனர். இந் நிகழ்வில் முதலமைச்சர் சந்திரகாந்தனுடன் இணைந்து வேட்பாளர்களான பூ.பிரசாந்தன், சிறிதரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பினர் மணிவண்ணன் (ஆசிரியர்), செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, தமயேந்தி (முன்னாள் அதிபர்), கட்சியின் உபசெயலாளர் ஜெ.ஜெயராஜ் போன்ற பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இக் கூட்டத்தில் உரையாற்றிய சின்னா மாஸ்டர் “நேற்று இந்த மைதானத்தில் பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது, கூட்டமைப்பினர் இளைஞர்களைத் தூண்டிவிட்டு வன்முறைக்குத் தூபமிடுகின்றனர்” என்று குற்றம் சாட்டினார், அத்தோடு “கூட்டமைப்பினரின் இச் செயற்பாடுகள் கடந்த நான்கு வருடமாக நாங்கள் கிழக்கு மாகாணத்தில் கட்டியெழுப்பிய அமைதியையும், ஜனநாயகத்தின் மீள்வரவையும் சீர்குலைப்பதோடு மீண்டும், மீண்டும் கைதுகளையும், விசாரணைகளையும், சோதனைச் சாவடிகளையுமே எமது மக்களுக்குப் பரிசளிக்கும்” எனத் தெரிவித்தார்.