8/27/2012

| |

நமது சொந்த வழிமுறைகளின் மூலம், நமது சொந்த அர்ப்பணிப்பின் மூலம் நமது வரலாற்றிற்குத் திரும்ப விரும்புகின்றோம்

பிஸோ-கினிய மக்களுடைய அன்புக்குரிய தலைவரும், கினிய மற்றும் கேப்வெர்டே விடுதலைக்கான ஆபிரிக்கக் கட்சியின் பொதுச் செயலாளருமான அமீல்கர் கப்ரால் அவர்களது வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையொன்று எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றது. நம்மிடம் பெரிய தொழிற்சாலைகள் இல்லை, பிற மக்களின் குழந்தைகளிடம் இருக்கும் பொம்மைகள் கூட நம்முடைய குழந்தைகளிடம் இல்லை, ஆனால் நமக்கே சொந்தமான இதயங்களும்;, மூளையும் இன்னும் நம்மிடம் தான் இருக்கின்றன. நமக்கே உரிய வரலாறும் நம்மிடம் இருக்கின்றது. இந்த வரலாற்றினைத் தான் காலணி ஆதிக்கவாதிகள் நம்மிடமிருந்து பறித்து விட்டார்கள். நம்மை வரலாற்றிற்கு அழைத்து வந்தது தாங்கள் தான் என்று அவர்கள் வழக்கமாகவே கூறுகின்றார்கள்.


ஆனால் அது உண்மையல்ல என்று நாம் இன்று காட்டுவோம். நமது வரலாற்றிலிருந்து நம்மை வெளியேற்றிய அவர்கள் தங்களுக்குப் பின்னாலேயே வர வேண்டும் என்றும், தங்களையே பின்பற்ற வேண்டும் என்றும் எம்மை மாற்றியிருக்கிறார்கள்.    
நம்மை நாமே விடுவித்துக் கொள்ள எமது சொந்தக் கால்களில் நிற்பதன் மூலம், நமது சொந்த வழிமுறைகளின் மூலம், நமது சொந்த அர்ப்பணிப்பின் மூலம் நமது வரலாற்றிற்குத் திரும்ப விரும்புகின்றோம் என்று அமீல்கர் கப்ரால் கூறியிருந்தார்;. இதே போன்றுதான் இந்த யாழ் மேலாதிக்கமானது தாங்கள் தான் எம்மை வரலாற்றிற்கு அழைத்து வந்ததாகவும், தங்களையே பின்பற்றி தமக்குப் பின்னாலேயே கிழக்கு சமூகம் தொடர்ந்தும் செல்ல வேண்டும் என்றும் பறைசாற்றி வருகின்றது. எமது சமூகத்தினை அதற்கேற்றாற் போல் மாற்றியும் வைத்திருக்கிறது. தனித்துவமான வரலாற்றினைக் கொண்ட நாம் துன்பங்களையும், இழப்புக்களையும் ஏற்றுக் கொண்டு யாழ் ஏகாதிபத்தியத்தினைத் தொடர்ந்தும் பின்பற்ற முடியாது. அவர்களை இன்னும் பின்பற்றிச் செல்ல நாம் ஒன்றும் சிந்திக்கத் தெரியாதவர்கள் அல்ல, அடி மடையர்களும் அல்ல. அடிமாடாய் வாழ்ந்த அகராதியை மாற்றி எழுதவென்றே நாம் புறப்பட்டோம் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை (26.08.2012) மாலை கோவில்போரதீவில் இடம் பெற்ற அரசியல் பிரச்சாரக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
யாரோ ஒருவருடைய கருத்துக்களுக்காக, யாரோ ஒருவருடைய மூளையிலுள்ள விடயங்களுக்காக மக்கள் போராடுவதில்லை. என்பதை எப்போதும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். பொருளாதார நன்மைகளைப்  பெறுவதற்காகவும், அமைதியாகவும் மேன்மையாகவும் வாழ்வதற்காகவும் தங்களது வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்துவதற்குமாகவே     அவர்கள் போராடுகின்றார்கள். அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்து வருவது போல் எமது மக்களின் எதிர்பார்ப்புக்களை ஏமாற்றங்களாக மாற்றும் படுபாதாள அரசியலை எப்போதுமே எம்மால் செய்ய முடியாது. எம் மக்களை எரித்து குளிர்காயும் அளவிற்கு மனச்சாட்சி அற்றவர்கள் அல்ல நாம். உலகிலுள்ள எல்லா மக்கள் கூட்டத்தைப் போலவும் எமது மக்களும் முன்னேற்றமடைந்த சமூகமாக அறிவியல் பூர்வமாக வெற்றியடைந்த சமூகமாக வாழ வேண்டும். எமது குழந்தைகளின் முகங்களில் புன்னகை ஒன்று மட்டுமே குடியிருக்க வேண்டும். கொடிய யுத்தத்தினைக் கொண்டு வந்து அந்தக் குழந்தைகளின் புன்னகையினைப் பறித்து அநாதை வாழ்வினைப் பரிசளிப்பவர்கள் யாராக இருந்தாலும் நாம் மன்னிக்க மாட்டோம். கிழக்கின் அமைதியினை நிலைக்க விடுங்கள், கிழக்கினைக் கிழக்காக இருக்க விடுங்கள், உங்கள் அரசியலுக்காக வேறு எதையாவது பயன்படுத்திக் கொள்ளுங்கள். எமது மக்களின் வாழ்க்கையில் கை வைக்காதீர்கள் என்று கூறினார். இத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் திரு.சி.சந்திரகாந்தன் அவர்களோடு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் ஆலோசகர் திரு. சின்னா மாஸ்டர் மற்றும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபையின் வேட்பாளருமான பூ.பிரசாந்தன்,மற்றும் வேட்பாளர் ஸ்ரீதரன்,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிச் செயலாளர் ஜெ.ஜெயராஜ் என முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.