8/30/2012

| |

இனவாத கட்சிகளுக்கு கிழக்கில் இடமில்லை

தமிழ்,முஸ்லிம் இனவாத கட்சி களுக்கு கிழக்கு மாகாணத்தில் இடமில்லை. தமிழ், முஸ்லிம் மக்கள் ஐ. ம. சு. மு.வையே ஆதரிக்கின்றனர். கிழக்கில் ஐ. ம. சு. மு. தனியாக ஆட்சி அமைக்குமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவுத் தலைவரும் பிரதி அமைச்சருமான பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

ஐ. ம. சு. மு. ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய அவர் கிழக்கு மாகாணத்தில் இருந்து பயங்கரவாதம் முழுமையாக தோற் கடிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி அங்கு பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளார்.

தற்போது நல்லிணக்கத்துடன் எதிர்கால பயணத்தை ஒற்றுமையாக மேற்கொள்ள முடியும். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈழ கனவுடனும் சில முஸ்லிம் கட்சிகள் இனவாதம் பேசியும் மக்களின் வாக்குகளை பெற முயல்கின்றன. ஆனால் கிழக்கு மக்கள் புத்திசாலிகள். நிரந்தர சமாதானம்,பாரிய அபிவிருத்தி என்பவற்றினூடாக கிழக்கு மக்கள் வாழ்வில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனவாதத்தை மக்கள் நிராகரிக்கின்றனர்.

ஜனாதிபதி முஸ்லிம்களுக்கும் பெருமளவு சேவையாற்றியுள்ளார். பல முஸ்லிம் நாடுகள் ஜனாதிபதியுடன் நற்புறவு பேணி வருகின்றன. பல முஸ்லிம் கட்சிகள் ஐ.ம.சு.மு. வில் போட்டியிடுகின்றன. அவர் நிற்கும் கிழக்கில் அதிக வாக்குகள் கிடைக்கும். தமிழ்இ முஸ்லிம் இனவாத கட்சிகளுக்கு கிழக்கில் இடமில்லை. கிழக்கு மக்கள் ஐ.ம.சு.மு.வுடனே உள்ளன.

புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து த.தே. கூட்டமைப்பு முன்னெடுக்கும் இனவாத பிரசாரத்தை மக்கள் பகிஷ்கரிக்கின்றனர். சிறுபான்மை மக்களுக்கு இது மிக முக்கியமான தேர்தலாகும்.

இனவாதம் பேசும் கட்சிகளை கிழக்கு மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். தமிழ்இ முஸ்லிம் மக்கள் எம்முடனே உள்ளனர். முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்து வரும் குற்றச்சாட்டுகளை நாம் ஏற்கவில்லை. இனவாதத்தை தூண்டி மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தி வாக்கு பெற முயல்கிறது.

கிழக்கில் தனித்துப் போட்டியிடும் மு. கா. அநுராதபுரதத்தில் ஐ.ம.சு.மு.வுடன் இணைந்து போட்டியிடுகிறது. மு.க.வுக்கு கிழக்கில் ஐ.ம.சு.மு. தேவையில்லை. ஆனால் அதற்கு அநுராதபுரத்தில் ஐ.ம.சு.மு. தேவை. கிழக்கில் ஐ.ம.சு.மு. தனித்து வெற்றியீட்டும்.