8/25/2012

| |

கிழக்கு தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஒரே மேடையில்-நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணி ஏற்பாடு


2012 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கியுள்ள பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் ஒரே மேடையில் தத்தமது கட்சிகளின் கொள்கைகள் வேலைத்திட்டங்கள் என்பவற்றை பொதுமக்களுக்கு விளக்குமுகமாக நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணி (FJP) பொதுக்கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
மேற்படி பொதுக்கூட்டம் இன்று 24ம் திகதி ஆகஸ்ட் மாதம் 2012 வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை கடற்கரை வெளியில் இடம்பெற உள்ளது. இக்கூட்டத்தில் UPFA, SLMC, UNP, TNA, TMVP, JVP, PMGG ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறான இன்னுமோர் நிகழ்வு 26ம் திகதி ஆகஸ்ட் மாதம் 2012 ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையிலும் இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
இன ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் பிரிந்து மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரசார நடைமுறையை இல்லாமல் செய்வதுடன் எந்தவொரு கட்சியும் எந்தவொரு வேட்பாளரும் மாகாணத்தில் எந்தவொரு பிரதேசத்திற்கும் சென்று தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்ற ஜனநாயக சூழலை ஏற்படுத்தும் நோக்கிலும், ஜனநாயக அரசியலில் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடு என்பது கொள்கைகள், கருத்துகள், வேலைத்திட்டங்கள் என்பவற்றை மாத்திரமே அடிப்படையாக கொண்டிருக்க முடியும். மாறாக மதம், மொழி, பிரதேசம் என்ற அடிப்படையில் அமையக்கூடாது என்பதை நடைமுறையில் காட்டும் ஒரு முன்மாதிரி நிகழ்வாகவே நாம் இதனை ஏற்பாடு செய்துள்ளோம் என FJP யின் தலைவர் Shiehk M. Naja Mohammed குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மக்களிடையே நீதியை நிலைநிறுத்துவதன் மூலம் சமூகங்களுக்கிடையே சமாதானத்தை கட்டியெழுப்ப முடியும் என்பது FJPயின் நம்பிக்கையாகும்