நாவலின் பேசுபொருள் குறித்த விவாதங்கள், விமர்சனங்களுக்கும் அப்பால், படைப்பாளியின் சமூக அக்கறையும் நாவலின் பிரதான கதைவிரியும் களத்தில் உலாவரும் இரு சமூகங்களுக்கிடையிலேயான அன்பு, பாசம், நட்பு, விரோதம், பிரிவு, கலாச்சாரம் எனும் மானிடப் பகிர்வின் நெருக்கத்திற்கான பண்புகள் என அனைத்தையும்…, படைப்பாளியின் இலக்கிய மன வெளியின் வாயிலாக இறங்கிவந்த ஒரு புனைவுச் சித்திரமாக மட்டும் ஒத்துக்கொள்ள எனது புத்திக்கு உடன்பாடில்லை.
இப் புனைவுப் பிரதியில் ஆழப்புதைந்து வாசகர் கண்ணுக்கு புலனாகாது உரமாகி உக்கிக்கிடப்பது படைப்பாளியின் கடினமான களப்பணிகள் என்பது ‘காண்பதற்குள் உள்ள நாம் காணாத’ ஒரு அனுபவம் என்பது எனது பிடிவாதம்.
-அசுரா-
எம்.ஆர்.ஸ்ராலின் அவர்களின் ‘கசகறணம்’நாவல் மீதான வாசிப்பு அனுபவத்தை நாம் கேட்கத் தயாரானோம்.
எம்.ஆர். ஸ்ராலின் அவர்கள் புகலிடத்தில் இலக்கிய, அரசியல் செயல்பாடுகளில் கணிசமான பங்களிப்புகளை செய்து வருபவர். பிரான்சிலிருந்து வெளிவந்த இலக்கிய சஞ்சிகையான ‘எக்ஸில்’எனும் பிரதியை வெளியிட்டுவந்த ஆசிரியர்களான விஜி, கற்சுறா போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றியவர். புலிகளின் ஜனநாயகவிரோத, பாசிசப்போக்கிற்கு எதிராக புகலிடத்திலிருந்து செயல்பட்ட வானொலிகள், இணையங்கள் என்பற்றினூடா தனது அரசியல் கருத்துகளையும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வந்தவர். கிழக்கிலங்கை வாழ் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமைக்காகவும் தொடர்ச்சியாக செயல்பட்டுவருபவர்.
தேவதாசன்: நீங்கள் நாவல் பற்றிபேசுவதற்கு முன்பு ‘கசகறணம்’ எனபதன் அர்த்தம் குறித்து சற்று விளக்கமாக கூறமுடியுமா? ஏனெனில் இப் பெயர்குறித்த அர்த்தப் புரிதல்கள் இங்கு பலருக்கு குழப்பமாகவே இருக்கின்றது முதலில் அதுபற்றி கொஞ்சம் தெளிவு படுத்துங்க.
எம்.ஆர்.ஸ்ராலின்: பேச்சு வழக்கில் கசரணம் என சொல்லுவார்கள். எழுத்து வழக்கில் கசகறணம் என எழுதுவார்கள். இப்ப கசரணம் பிடிச்ச வேலையில கொண்டுவந்து என்னை நிப்பாட்டியிருக்கிறீங்க. ஒரு சல்லிக்கு உதவாத வேலை எண்டு சொல்லுவதும், ஒரு பாட்டுக்கும் சரிவராது என்பதாகவும் கதைப்பம் அல்லவா அந்தவகையில் அர்த்தம் கொள்ளலாம்.
விஜி: உதவாக்கர வேலை என்பதாகவும் கருதலாம்.
அசரா: இச்சொல் தமிழ் நாட்டிலையும் உபயோகப்படுத்துகின்றார்கள்.
விஜி: நாங்க சொன்னா கேக்கமாட்டீங்க.
எம்.ஆர்.ஸ்ராலின்: அநேகமாக தமிழ் நாட்டில் திருநெல்வேலி மக்களிடம் இச்சொல்லாடல் வழமையில் இருக்கும் என நினைக்கின்றேன்.
தவபாலன்: ஏன் தலைகறணம் என்று கருத முடியாதோ?
வாசுதேவன்: கசகறணம் என்ற சொல்லை நான் எப்படி புரிந்து கொண்டேன் என்றால், சொல்லின் வடிவத்தைப் பார்த்தால். குத்துக்கறணம்; அடிப்பதாக தோன்றுகின்றது. கறணம் அடிப்பதென்பது ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாத தன்மைக்கும் அர்த்தப்படும். கசகறணம் என்கின்றபோது குழப்பத்தின் ஒட்டுமொத்தமான தன்மையை குறிக்குமோ எனவும் நான் கருதினேன்.
அசுரா: இதைத்தான அவர் தலைகறணம் என்று சொன்னாரோ?
எம்.ஆர்.ஸ்ராலின்: இந்த நாவலில் ஓர் இடத்தில் இவ்வாறு சொல்லுகின்றார்: “அட நெருப்பென்றால் சுடத்தானே போகுது அவன் கிடக்கிறான் கசகறணம் அவன்ர கதையையும் கணக்கில் எடுப்பாங்களே.”
மேற்படி’ கசகறணம்’ எனும் சொல்லின் அர்த்த்தை கூறியவாறு எம்.ஆர்.ஸ்ராலின் அவர்கள் நாவல் குறித்து தனது வாசிப்பு அனுபத்தை பகிரத்தொடங்கினார். “தற்போதைய நிர்வாக அலுகுப்படி பார்த்தால் அம்பாறை மாவட்டத்தை மையமாக வைத்து இந்நாவல் எழுதப்பட்டிருக்கின்றது. எந்த அந்நிய மொழி நுழைவும் இல்லாது, பழமைவாய்ந்த பாரம்பரிய கலாச்சாரங்களைக் கொண்ட ஒரு கிராமத்து வாழ்க்கையை மையமாக கொண்ட நாவலாக ‘ கசகறணம்’ எனும் நாவல் வெளிவந்துள்ளது. எம்மைபோன்று பிரான்சிற்கு, கனடாவிற்கு, இற்ராலிக்கு வாறமாதிரியான வாய்ப்பைபெற்ற மக்களல்ல அம்பாறை மாவட்டத்தின் மையப்பகுதியான அக்கரைப்பற்று கிராமத்து மக்களின் வாழ் நிலை. இந்த அக்கரைப்பற்று கிராமத்தில் உள்ள சந்தையில் வியாபாரம் செய்யும் ஏழை வியாபாரிகளான வெள்ளும்மா, மையிலிப்பெத்தா, குலத்தழகி, குறட்டக்காக்கா எனும் பிரதான பாத்திரங்களை மையமாக கொண்டே நாவலின் கதைவிரிகின்றது. ஆரம்பத்தில் இந்தக் கிராமத்தில் வாழும் பிரதானமான இரு சமூகங்களான முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் உள்ள உறவுகள் மிக அந்யோன்யமாக இருந்துவந்ததை பதிவுசெய்திருக்கின்றது இந்த நாவல். சுமார் ஆயிரம் வருடங்களுக்கு மேலான முஸ்லிம்களின் கிழக்கு மாகாணத்து வருகையிலிருந்து அங்கு இரு சமூகங்களுக்கிடையில் இருந்த நம்பிக்கைகளையும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்ந்து வந்த சூழலை ஆரம்பப்குதிகளில் இந்த நாவல் சித்தரித்துக்கொண்டே வருகின்றது. இந்த சித்தரிப்புகளிலிருந்து அரசியல் செயல்பாடுகள், அதனது பாதிப்புகள் இக்கிராமத்தில் நுழைவதையும் அவை எந்த ஆண்டுகள் என்ற ரீதியான காலங்களைக்கொண்டோ, எந்த இயக்கங்களின் பெயர்களைக்கொண்டோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. தாடி வைத்திருப்பவர்களாகவும், தோழர்கள் என தங்களுக்குள் அழைத்துக்கொள்பவர்களாகவும் சித்தரிக்ப்படுவதால் இந்த நாவலில் குறிப்பிடப்படும் இயக்கத்தை புளொட் இயக்கமாகவே என்னால் கருதக்கூடியதாக இருக்கின்றது. அந்த இயக்கம் புலிகள் இல்லை என்பது தெளிவாக புரிகின்றது.
நீண்டகாலமாக இங்கு முஸ்லிம் வயோதிபர்கள் தமிழ் பெடியன், பெட்டைகளை மருமகள்(ன்) என்றுதான் அழைப்பார்கள். ஆரம்பத்தில் முக்குவர் எனும் ஆதிக்க சமூகமாக இருந்தவர்களின் பெண்களைத்தான் பாரசீக வியாபாரிகள், அல்லது மத்திய கிழக்கில் இருந்து வந்த முஸ்லிம்கள் திருமணம் செய்து முஸ்லிம்களாக மாறினார்கள். இவ்வாறான வரலாற்றுக் கதைகளுக்கு தமிழர்களை மருமகன், மருமகள் எனற உறவு முறையில் அழைக்கும் வழக்கத்தை ஆதாரமாக கொள்ளலாம். இவர்களுக்கிடையில் திருமணங்களோ, மதமாற்றங்களோ நிகழாவிட்டாலும் இவ்வாறான குடும்ப உறவு முறையான உணர்வுடனே இரு சமூகமும் பழகிவந்திருக்கின்றது. இந்த நிலையில்தான் மெதுவாக இயக்கங்களின் வருகையை நாவலாசிரியர் குறிப்பிடுகின்றார். இந்த இயக்கங்களையும் அங்கிருந்து உருவானது என்று கூறாமல் இந்த நாவலாசிரியர் தனக்குத் தெரிந்தோ, தெரியாமலோ இயக்கங்களின் வருகை எனக் குறிப்பிடுகின்றார். இந்தக் கிராமத்திலுள்ள மக்களுக்கு தமிழ் ஈழம் ஒன்று வேணும் என்ற தேவை இருக்கவில்லை. 72ஆம் ஆண்டு தரப்படுத்தலால் பல்கலைக்கழகத்திற்கு போகமுடியாமல் போன விளைவுகள் குறித்து இக்கிராமத்திற்கு எந்தப்பாதிப்பும் ஏற்படவில்லை. அல்லது 56ஆம் ஆண்டு சிங்கள மொழிச் சட்டம் காரணமாக வேலை இல்லாப் பிரச்சனை ஏற்பட்டுவிடும் என்பது குறித்தும் இந்தக் கிராமத்திற்கு எந்தபாதிப்பும் ஏற்படவில்லை. இவ்வாறாக சித்தரிக்கப்பட்டே இயக்கங்களின் வருகை என்பதாக அழுத்தம் கொடுக்கின்றார். எப்படியென்று சொன்னால் இது எங்கேயோ இருந்து வருகின்றது. கிழக்கு மாகாணத்திற்கு அந்நியமாக, அவசியமல்லாத ஒன்று எங்கேயோ இருந்து திணிக்கப்படுகின்றது. இவ்வாறு தன்னை மறந்தோ மறவாமலோ மிக தெளிவாக இந்நாவலில் வலியுறுத்தப்படுகின்றது. இவ்வாறு இந்த இயக்கங்களின் வருகையால் மிக நெருக்கமாகவும், நம்பிக்கையுடனும் வாழ்ந்த இரு சமூகங்களுக்கிடையில் எவ்வாறு பிளவுகளை ஏற்படுத்தியதென்பதுதான் இந்நாவலின் மையக் கருவாக கொள்ளலாம். இந்த இயக்க வருகைக்குரிய பிரதான பாத்திரங்கள் முகமட், கேசவன் எனும் இரு பால்ய நண்பர்களாகும். முதலில் முகமட்தான் யாழ்ப்பாணத்திற்கு படிப்பதாக கூறி இயக்கத்தில் இணைகின்றான். இது வந்து உண்மைச்சம்பவமும் கூட அம்பாறை, கல்முனை, அக்கரைப்பற்று போன்ற பிரதேசங்களிலிருந்து ஆரம்பத்தில் இயக்கத்தில் இணைந்தவர்கள் முஸ்லிம்களாகவே இருந்திருக்கின்றார்கள். இங்கிருந்துதான் அதிகமான முஸ்லிம்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கித்தில் இணைந்திருக்கின்றார்கள். இந்த உண்மையிலிருந்துதான் நாவலாசிரியர் முகமட் பாத்திரத்தை படைத்திருக்கின்றார் என நம்புகின்றேன்.
ஆரம்பத்தில் அக்கரைப்ற்றுக் கிராமத்தில் சில முஸ்லிம் தமிழர் பிரச்சனை என நிகழ்ந்தாலும் அவை ஒரு சமூகப்பிரச்சனையாகவோ, இரு சமூகங்களுக்கிடையேயான விரோதமாகவோ இருந்ததில்லை. இயக்கம், அரசியல் எனும் செயல்பாடுகள் அக்கிராமத்தில் எப்ப நுழைந்ததோ அன்றிலிருந்து சமூகப்பிரச்சனையாகவும், ஒன்றையொன்று விரோதமாகவும் பார்க்கும் நிலை தோன்றுகின்றது. சிறுவயதிலிருந்து ஒன்றாக, ஒற்றுமையாக, நட்பாக இருந்தவர்களுக்கும், ஒரே இயக்கத்திலிருந்தவர்களுக்கும் இடையில் பிளவுகள் தோன்றுகின்றது. அல்லது தோற்றுவிக்கப்படுகின்றது. இவ்வாறான ஒரு சமூக யதார்த்தத்தை, உண்மை நிலையை ஒரு இலக்கியப் படைப்பாக வெளிக் கொண்டுவருவதில்தான் ஒரு படைப்பாளியின் இலக்கிய ஆளுமை புலப்படுகின்றது. அந்தவகையில் ‘வெள்ளாவியிலிருந்து’, ’கசகறணத்திற்காக’ படைப்பாற்றலில் ‘நெடும் பாய்ச்சலொன்றை’ நிகழ்த்தியுள்ளார் குழந்தைவேல் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் எனக்கில்லை.” இவ்வாறு எம்.ஆர்.ஸ்ராலின் அவர்களின் ‘கசகறணம்’ நாவல் குறித்த சமூக, அரசியல் பார்வை இருந்தாலும். அவர் நாவலின் முழுக்கதையையும் அச்சுவிலகாமல் விலாவாரியாக சொல்லிமுடித்தார்.
அசுரா: மிக முக்கியமான பாத்திரமான கனகவேல் எனும் பாத்திரம் பற்றி நீங்க குறிப்பிடவில்லை.
எம்.ஆர்.ஸ்ராலின்: ஓம் ஒரு முக்கியமான பாத்திரம் அது. அதாவது சந்தையில் வியாபாரம் செய்யும் நால்வரோடு இவரும் அடிக்கடி வந்துபோவார். இவர் ஒரு திருநங்கையாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றது.
அசரா: அவரது மரணமும் மிகப் பரிதாபகரமானது.
எம்.ஆர்.ஸ்ராலின்: மற்றது பிரதேச, கிராமத்துச் சொல்லாடல்கள் நாவலுக்கு தடையாக இருப்பதாக ஒரு விமர்சனம் வந்தது. நாங்க பாமாவின்,குணசேகரத்தின் மொழிகளையெல்லாம் புரிந்துகொண்டவர்கள்தானே.
சோபாசக்தி: மட்டக்களப்பு மொழி புரியவில்லை என்றோ கஸ்டமானதென்ற அர்த்தத்திலோ நான் சொல்லவில்லை. என்ன நடந்ததென்றால் ‘வெள்ளாவி’ வந்த நேரத்தில நான் உட்பட எல்லோராலும் அது பாராட்டப்பட்டது. குழந்தைவேல் மட்டக்களப்பு மொழியை மிக நன்றாக கையாண்டிருந்தார். சக்கரவர்த்தி சிறுகதைகளில் மட்டக்களப்பு மொழியை கையாண்டிருந்தாலும், நாவல் என்ற வகையில் முக்கியமான நாவல் ‘வெள்ளாவி’தானே. அது வந்து குழந்தைவேலுக்கு மிகப்பெரிய பலம். அந்த மிகப்பெரிய பலத்தை பின்பற்றாமல், அதாவது மொழியை குழந்தைவேல் கையாளாமல், மொழி குழந்தைவேலை கையாண்டிருக்கின்றது என்பதுதான் எனது விமர்சனமாக இருந்தது. செட்டா சொல்லவேண்டிய விசயத்தை சொல்லாமல், மொழியின் வசீகரத்தை சொல்லி விடுபட்டுப்போயுள்ளார். அதுதான் நான் வைத்த விமர்சனம்.
அரவிந் அப்பாத்துரை: உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வட்டார மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவமே போதுமானது என்பதுதான் நீங்க தவறானது என கருதியிருக்கின்றீர்கள்.
எம்.ஆர்.ஸ்ராலின்: வாசிப்பிற்கு தடையாக இருந்ததென்பதாகவா உங்களது விமர்சனம் இருந்தது?
சோபாசக்தி: இல்லை வாசிப்பிற்கு இனிமை, மட்டக்களப்பு தமிழோ, கோவைத் தமிழோ, சென்னைத் தமிழோ, வாசிப்பிற்கு இனிமை. சிலர் தவறாக புரிந்துகொண்டிருக்கின்றார்கள். அதையே நம்பி எழுதக்க்கூடாதென்பதுதானே தவிர வாசிப்பிற்கு எந்த தடையுமில்லை.
உதயன்: அதையே நம்பி எழுதப்பட்டிருக்கென்று சொல்லேலாதென்றுதான் நான் நினைக்கின்றேன்.கூடுதலாக கையாண்டிருப்பதென்பது உண்மை
சோபாசக்தி: அதைமட்டும் என்று நான் சொல்லேல்ல.
அரவிந் அப்பாத்துரை: நான் சோபாசக்தியின் விமர்சனம் படிக்கவில்லை. ஒரு வித்தையொன்று கிடைத்திருக்கின்றது அதை முழுமையாக கூடியமட்டும் பயன் படுத்துவோம் என்பதாலேயே உள்ளடக்கத்திற்கு போதிய கவனம் கொடுக்கப்படவில்லை என்பதாகத்தான் உங்கட விமர்சனம் என நான் நினைக்கின்றேன்.
தர்மினி: சில சொற்கள் முதல் உற்சரிப்பில் புரியாதிருக்கும். உதாரணத்திற்கு கடவம் என்பது வேகமான வாசிப்பிற்கு புரிவது கடினமாகவே இருக்கும். நாங்கள் அதை கடகம் என்றே உற்சரிப்பதால்.
எம்.ஆர்.ஸ்ராலின்: அது நோமல், எனக்கே சில சொற்களை இரண்டுதரம் வாசிக்கவேண்டிய தேவை ஏற்பட்டது.
விஜி: எனக்கு சோபாசக்தி எழுதின விமர்சனததில விளங்கிக்கொண்டது என்னவென்றால் மட்டக்களப்பு மொழியை எடுத்தால் இதில ஒண்டுமே இல்லை. என்பதாகத்தான் எனக்கு விளங்கியது.
அரவிந் அப்பாத்துரை: கிட்டத்தட்ட அப்படித்தான்.
சோபாசக்தி: அப்படியில்ல அது நான் வெள்ளாவிக்கு எழுதினது. இந்த நாவலில் வந்து மொழி வந்து வழ வழப்பாக இருக்கு. செட்டில்ல மட்டக்களப்பு மொழி அகராதிக்குள் இந்த நாவல் இருக்கின்றது. இன்னொரு விசயம் என்னென்றால் புத்தகத்திற்கு பின்னுக்கு இந்த அருஞ்சொல் அகராதி போட்டிருக்கல்லோ அதாலேயே இந்த நாவல் பெயில்.
எம்.ஆர்.ஸ்ராலின்: அதுபற்றி நான் சொல்லவேணும் என்றிருந்தேன் அது தவறுதான் இது ஒரு கட்டுரைத்தொகுப்பல்லவே.
அரவிந் அப்பாத்துரை: எழுத்தாளரின் அபிப்பிராயம் இல்லாது இது காலச்சுவட்டின் கோரிக்கையாகவும் இருக்கலாம். ஏனெனில் அவர்களுக்கு அது தமிழ்நாட்டின் வியாபார நலனுக்கான விடயமாக இருக்கும். பதிப்பாளர்களின் வற்புறுத்தலாகவும் அமைந்திருக்கலாம்.
சோபாசக்தி: டானியலின் நாவல்களைத்தான் தலித் இலக்கியத்தின் முன்னோடி என சொல்லுவார்கள். டானியலின் எழுத்துக்கள் புரிதலுக்கு அவர்களுக்கு மிக கடினமாக இருந்திருக்கும். அப்படியிருந்தும் சொல்லகராதி இல்லாம எல்லோரும் புரிந்து கொண்டவர்கள் தானே.
எம்.ஆர்.ஸ்ராலின்: எஸ்.போ அவர்களின் முழுக்க முழுக்க யாழ்ப்பாண மொழி வழக்கில் எழுதப்பட்ட ‘சடங்கு’ நாவல் ராணி முத்துவில் தொடராக வந்தபோது ஒரு இலட்சத்து நாற்பத்தி மூவாயிரம் பிரதி விற்றது.
சோபாசகதி: ராணிமுத்துவில் தொடராக சடங்கு நாவல் வரும்போது ஒரு இடத்தில் ‘பேந்து வரும்’என்று ஒரு சொல்லு வரும் அதற்கு ராணிமுத்து பேந்து என்றால் ‘bank’ என்று அடிக்குறிப்பு போட்ட சம்பவமும்
நடந்திருக்கு.
நடந்திருக்கு.
தேவதாசன்: இதில வந்து முக்கியம் வந்து மொழி இந்த நாவலிற்கு தடையாக இருக்கும் என்றில்லை. இதன் உள்ளடக்கம் வந்து அறம் சார்ந்ததாகவும் இருக்கு. ஏனென்றால் முஸ்லிம் தமிழ் மக்களின் உறவு எப்படியிருந்தது. அதுவே எப்படி சீரழிந்துபோனது என்பதை மிக சரியாக விபரிக்கப்பட்டுள்ளது. குழந்தைவேல் வந்து ஒரு இயக்கத்தையும் சார்ந்தவருமல்ல. நான் நினைக்கின்றேன் இயக்கங்கள் விடயத்தில் அவருக்கு பெரிதாக ஈடுபாடும் இருக்கவில்லையென்றே.
மனே: ஸ்ராலின் கதையை சொல்ல சொல்ல என் மனதில என்ன ஓடிக்கொண்டிருந்ததென்றால். ஊரில சுருட்டு சுற்றும் தொழிலாளர்களுக்கிடையில் ஒருவர்தான் வாசிக்கத் தெரிந்தவராக இருப்பார். அப்படி ஒருவர் சில கதைகளை வாசித்துக் கொண்டிருக்க மற்றவர்கள் சுருட்டு சுற்றியவாறு கதையை கேட்டுக்கொண்டிருப்பார்கள்.இதை எதற்கு சொல்ல வாறன் என்றால் இது வந்து ஒரு ஆரோக்கியமானதல்ல. கேட்டுக்கொண்டிருக்க நன்றாக இருந்ததென்பது உண்மை. எல்லோரும் இந்த நாவலை படிக்காதபோது நாவலின் முழுக் கதையையும் சொல்லுவது அழகல்ல. நான் எனி இந்த நாவலை வாசிக்கமாட்டன்.
விஜி: அப்படி இல்ல ஸ்ராலின் வாசித்து புரிந்து கொண்ட அனுபவம் உங்களுக்கு வராது.
சோபாசக்தி: புத்தகம் வந்து இண்டைக்கு ஒன்றைரை வருடம் ஆகிவிட்டது. இதுவரை படிக்காத நீங்க எனிமல் படிக்கப்போறதெண்டில்ல.
மனே: இந்த இடத்தில என்னும் ஒன்றை சொல்லுறன் அறம் சார்ந்த ஒரு விடயம். இவர் வந்து.
அசுரா: அவர் இவர் என்ற ஏக வசனம் வேண்டாம்.
மனோ: சோபசகத்தி போன்ற நபர்கள் வந்து
சோபாசக்தி: நபர்கள்.. ஆ.. ஆ.
மனோ: அமிர்தலிங்கம் போன்றவர்களிடம் கேள்வி ஏதும் கேட்டால் ஆங்கிலத்திலதான் பதில் அளிப்பார்கள். அதேமாதிரித்தான் நாங்கள் ஏதும் புத்தகம் பற்றி கதைக்க வெளிக்கிட்டால் சோபாசக்தி அவர்களும் நீ அந்தப் புத்தகம் படிச்சியா, இந்தப் புத்தகம் படிச்சியா, அது படிச்சியா, இது படிச்சியா, சடப் யுவர் மவுத். இவ்வாறான செயலை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இரண்டாவது முதல் நாவலின் படைப்பாளியான சயந்தனின் அறம் சார்ந்த விடயம் பற்றிய உரையாடலின் தொடர்ச்சியாக இதைச்சொல்லவாறன். சயந்தன் சார்ந்த அறமும் ஒரு முக்கியமானது. ஜோசப் ஸ்டாலின் ஒரு இடத்தில் கூறுகின்றார் முற்போக்குவாதி என்பது முற்போககான சிந்தனை கொண்டிருப்பதென்பதல்ல. தான் இருக்கும் இடத்திலிருந்து முன்னோக்கிப் பார்ப்பவன்தான் முற்போக்குவாதி என்று.
சயந்தனும் தன்னுடைய நிலையில் இருந்து அறம் சார்ந்து தான் எழுதியிருக்கின்றார். சயந்தன் போன்றவர்கள் வந்து ஒரு குறிப்பிட்ட இடத்திலே வாழ்ந்து, ஒரு குறிப்பிட்ட நூல்களையே வாசித்து வளர்ந்தவர்கள். இப்பதான் அவர்கள் வந்து வெளியுலகை பார்க்கின்றார்கள். அப்படி பார்க்கும்போது அவர்களிடம் தோன்றும் சந்தேகங்களும், கேள்விகளுமே நாவலாக குற்ற உணர்வாக வெளிப்படுகின்றது. இவர் 2004 இற்கு முதல் இவ்வாறான நாவலை எழுதியிருக்க முடியாது. அவரிடம் ஒரு பக்கப்பார்வைதான் இருந்தது. சில மார்க்சியர்கள் மார்க்சிய நுல்களை மட்டுமே படிப்துபோல. அவரும் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்திருந்திருக்கின்றார் அதை அவர் சுய விசாரணைக்குட்படுத்தி இந்த நாவலை கொண்டுவாறார். ஆகவே அவரும் தன்னளிவில் அறம் சார்ந்துதான் நாவலை எழுதியிருக்கின்றார். அதில வந்து எந்த குற்றச் சாடடிற்கும் இடம் இல்லை.
சயந்தனும் தன்னுடைய நிலையில் இருந்து அறம் சார்ந்து தான் எழுதியிருக்கின்றார். சயந்தன் போன்றவர்கள் வந்து ஒரு குறிப்பிட்ட இடத்திலே வாழ்ந்து, ஒரு குறிப்பிட்ட நூல்களையே வாசித்து வளர்ந்தவர்கள். இப்பதான் அவர்கள் வந்து வெளியுலகை பார்க்கின்றார்கள். அப்படி பார்க்கும்போது அவர்களிடம் தோன்றும் சந்தேகங்களும், கேள்விகளுமே நாவலாக குற்ற உணர்வாக வெளிப்படுகின்றது. இவர் 2004 இற்கு முதல் இவ்வாறான நாவலை எழுதியிருக்க முடியாது. அவரிடம் ஒரு பக்கப்பார்வைதான் இருந்தது. சில மார்க்சியர்கள் மார்க்சிய நுல்களை மட்டுமே படிப்துபோல. அவரும் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்திருந்திருக்கின்றார் அதை அவர் சுய விசாரணைக்குட்படுத்தி இந்த நாவலை கொண்டுவாறார். ஆகவே அவரும் தன்னளிவில் அறம் சார்ந்துதான் நாவலை எழுதியிருக்கின்றார். அதில வந்து எந்த குற்றச் சாடடிற்கும் இடம் இல்லை.
அரவிந் அப்பாத்துரை: இந்த இரண்டு புத்தகத்தையும் எடுத்துப்பார்தீங்களென்றால் ஒரு உண்மை தெரியும்.’கசகறணம்’ வந்து எங்கேயும் விற்கமுடியும். அதோடு அதை எந்த இடத்திலும் ஆவணமாக பாதுகாக்கும் உரிமையும் அதற்கு இருக்கின்றது. ஆனால் ‘ஆறாவடு’ எல்லா இடத்திலும் விற்க முடியாது, ஆவணப்படுத்தும் தகுதியும் அதற்கில்லை. ஏனெனில் ஆறாவடுவில் சி.பி.என். இலக்கம் இல்லை. காரணம் இதற்கு பின்னால் ஒர் அரசியல் செயல் பட்டிருக்கின்றது. அதிகார பூர்வமான வரலாற்று இருப்பிற்கு இந்த சி.பி.என். இலக்கம் மிக அவசியமானது. இந்த இலக்கம் இல்லாதுபோனால் வரலாற்றில் இந்த நாவலை கண்டறிவதற்கான எந்த சாத்தியமும் இல்லாதுபோகும்.
தேவதாசன்: இதில நான் ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் ‘கசகறணம்’ நாவல் வெளிவந்து பல நாட்கள். ‘ஆறாவடு’ மிக அண்மையில் வெளிவந்தது. ‘ஆறாவடு’ எல்லோராலும் வாசிக்கப்பட்டிருக்கின்றது. கசகறணத்திற்கான வாசிப்பு ஆர்வம் எங்களிடம் இல்லை என்றால் அதற்கு என்ன காரணம். கிழக்கு வடக்கு என்கின்ற அரசியல் பாராபட்சமே இலக்கியத்திலும் நிலவுகின்றது. அதுதான் உண்மை.
சோபாசக்தி: அதுதான்.. அதுதான் பிரச்சனை.
வரும் செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி யோகர்ணனின் சிறுகதைகள் :அசுரா
கார்டன் வைஸ் இன் கூண்டு நாவல்: வாசுதேவன்
தொடர்ச்சியாகவும், மேலும் தொடர்ந்தும் தனது அலுவலகத்திலுள்ள சிறு மண்டபத்தை எமது தொடர்ச்சியான இலக்கிய விவாதத்திற்கு இலவசமாக தந்து உதவும் நண்பர் அரவிந் அப்பாத்துரை அவர்களுக்கு இவ்வாவாதத்தில் பங்குபற்றும் நாம் அனைவரும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.