கி.மா.ச.உ.பூ.பிரசாந்தன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கிழக்கு மாகாணத்தின்
ஆட்சியைப் பிடிக்க முடியுமா? முதலமைச்சராக முடியுமா? முடிந்தால் கூறட்டும்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒதுங்கி மக்களுக்காக தியாகம்
செய்யத் தயாராக உள்ளது. தமக்கென்று எந்தவிதமான கொள்கையோ, தூரநோக்கோ இல்லாது
விடுதலைப் புலிகள் இருக்கும் வரை தமிழீழம், வடகிழக்கு இணைப்பு,
சர்வதேசத்திற்குக் காட்டுவதற்கு வாக்களியுங்கள் என்கின்றனரே
சர்வதேசத்திற்கு 62 வருடங்களாக காட்டிக் காட்டி என்ன நடந்தது? இலங்கையில்
அதி உச்சமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக 22 நாடாளுமன்ற
உறுப்பினர்களையும், பாராளுமன்றத்திற்கு அனுப்பிக் காட்டினோம். சர்வதேசம்
என்ன செய்தது? அதிகூடிய போர் தளங்கள் மூலம் சர்வதேசமே உற்றுப்பார்த்த
ஆயுதக் குழுவை வைத்திருந்த போது சர்வதேசம் பார்க்கவில்லை. என்ன நடந்தது
அழிவு மாத்திரம் தான்.ஆக்கிரமிப்பு ,கொலைகள், கொள்ளைகள், அவலங்கள் நடந்தது.
அப்போது என்ன செய்தீர்கள்? இன்று கிழக்கு மாகாணம் சுடர்விட்டு
அபிவிருத்தியில் பிரகாசிக்கும் போது மீண்டும் அதனைக் குழப்ப கங்கணம்
கட்டிக்கொண்டு வருகின்றீர்களே இது எந்தவிதத்தில் நியாயமானது என கிழக்கு
மாகாண சபை வேட்பாளர் பூ.பிரசாந்தன் கேள்வி எழுப்பினார்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு
ஆட்சியைப் பிடிக்குமா? இல்லை என்பது வெளிப்படை. இப்படியிருக்கையில்,
தமிழரிடம் இருக்கும் முதலமைச்சுப் பதவியை ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரசிற்கு எடுத்துக்கொடுக்கவா அல்லது ஐக்கிய தேசிய கட்சிக்கு
எடுத்துக்கொடுக்கவா பார்க்கிறது? இது எப்படி சாத்தியமாகும் என எந்த தமிழ்
தேசிய கூட்டமைப்பு வேட்பாளராவது விளக்குவாரா? கிழக்கில் ஆட்சியமைக்கப்
போவது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பது வெளிப்படையாகத் தெரிந்த
போதிலும் அதில் தமிழ் பிரதிநிதித்துவம் அதிகரிக்கக்கூடாது என்ற நோக்கோடு
செயற்படும் தமிழர்கள் பிரதிநிதிகள் என்று 62 வருடங்களாக ஏமாற்றிய தமிழ்
தேசிய கூட்டமைப்பிற்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மக்கள்
நல்லதொரு படிப்பினை கொடுப்பார்கள் எனவும் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.
மண்முனை தாழங்குடாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திpல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.