இன்னும் எத்தனை நாட்கள் எமது மக்கள் குடிசைகளிலும் தகரக் கொட்டில்களிலும் வாழ்வது? ஒரு சிலர் சொகுசு மாளிகையில் வாழ வேண்டும் என்பதற்காக எமது மக்கள் இன்னும் ஓலைக் குடிசைகளில் வாழும் அவலம். எம்மால் இவற்றை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. எமது மக்களின் துன்பங்களைக் காட்டி தொடர்ந்தும் அவர்களைக் கஸ்டங்களின் மத்தியிலேயே வாழ வைத்து பிரச்சினைகளை விளம்பரப் பொருளாக்கி அரசியல் ஆதாயம் தேடிப் பிழைப்பதானது அழகான ஓர் கைக் குழந்தைக்கு ஆகாரம் எதுவும் கொடுக்காது பசியில் அழவிட்டு அதனைக் காட்டிப் பிச்சையெடுத்துப் பிழைக்கும்
என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளருமான திரு. சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். நேற்று மாலை (26.08.2012) பெரியபோரதீவு பத்திரகாளி அம்பாள் ஆலய முன்றலில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்
இறக்கும் வரை எமது மக்கள் எதிர்பார்ப்புக்களை மட்டுமே சுமந்து கொண்டு வாழ்க்கை நடத்துகின்றனர். சலித்துப் போன இந்த வாழ்க்கையை வாழவும் வழியின்றி நகரவும் முடியாமல் பொருளாதாரம்,கல்வி,கலாசாரம் என்று அனைத்தையும் இழந்து ஏக்கப் பெருமூச்சோடு நிற்கும் ஒரு சமூகம்.
இருளுக்கு மத்தியில் ஓர் ஒளிப்புள்ளியை நோக்கி நகரும் போது அந்த வெளிச்சத்தையும் நிரந்தரமாக அணைத்து விட்டு கண்ணிருந்தும் குருடர்களாக எம் மக்களைத் தொடர்ந்தும் இருளிலேயே வாழவிட்டு வேடிக்கை பார்ப்பதென்பது எவ்வளவு துன்பகரமானது.
எமது கிழக்கு மாகாண சபையினை சீர்குலைத்து எமது மக்களின் உரிமைகளைத் தாரைவார்த்து அடிமை விலங்கு பூட்டி ஆளலாம் என்ற எண்ணங் கொண்ட மனித மிருகக் கூட்டமொன்று எம் மண்ணில் உலா வருகின்றது. மக்களின் காவலர்களாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு வெள்ளைச் சட்டைகளுடன் வலம் வருகிறார்கள் இந்தக் கறைபடிந்த கைகளுக்குச் சொந்தக்காரர்கள். அவர்கள் மனச்சாட்சி அற்றவர்கள் வேதனையை விலைப்பட்டியலாக்கும் கூட்டமைப்பினை இனங் கண்டு கொள்ளா விட்டால் இன்னும் எத்தனை யுகங்கள் கடந்தாலும் எத்தனை பிள்ளையான் வந்தாலும் எம் மக்களைக் காப்பாற்ற முடியாது.
இந்தப் பூச்சாண்டி வித்தை காட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எமது மக்கள் அடிக்கப் போகின்ற சாட்டையடி தான் எமது மக்களை மாயையிலிருந்து விடுபடச் செய்யப் போகும் மரண அடியாக விழப் போகின்றது. எமது மக்கள் நிச்சயம் வெல்வார்கள். மக்கள் சக்தி வெல்லும் போது நாமும் வெற்றியடைவது உறுதி.
“எவ்வளவு தான் சூடாக இருந்தாலும் கிணற்று நீரால் ஒரு பிடி அரிசியைக் கூட வேக வைக்க முடியாது”
அந்த வகையில் அரசியல் எந்திரத்தில் பொறிமுறைகள் தான் மிக அவசியம். ஒவ்வொரு தருணங்களிலும் ஒவ்வொரு விதமான அணுகு முறைகள் வேண்டும். ஒரே அணுகு முறையைத் தொடர்ச்சியாகக் கடைப்பிடிப்பதானது தற்கொலைக்குச் சமனானது.
எனவே நாம் விழிப்படைய வேண்டும் நன்றாகத் தெளிவடைய வேண்டும் அரசியல் ஞானம் கொண்டவர்களாக மாற வேண்டும். “எமக்கு யாரும் எதையும் தர மாட்டார்கள் எமக்குத் தேவையானதை நாம் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
இந்த அரசியல் பிரச்சாரக் கூட்டத்தின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் வேட்பாளர்கள்ஸ்ரீதரன்,பிரஷாந்தன் மற்றும் முக்கியஸ்தர்கள் பெருந் திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர்.