கிழக்கு மாகாணத்தின் இனப்பரம்பலும்,வரலாற்றுப் பின்னணிகளும் இத் தேர்தலுக்கு பல்வகை முக்கியத்துவங்களை வழங்கி இருக்கின்றன. ஆங்கிலேயரின் வருகையின் போது இலங்கையிலிருந்த கண்டி இராச்சியத்தின் ஓர் அங்கமாகவே கிழக்கு மாகாணம் இருந்தது. கண்டி இராச்சியத்தின் கீழ் இருந்த போதும் கிழக்கு மாகாணத்திற்கென தனித்துவமான சிற்றரசுகள் தமிழ் மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. 1815ம் ஆண்டு ஆங்கிலேயரால் முழு இலங்கையும் கைப்பற்றப்பட்ட போது இக் கிழக்கு மாகாண சிற்றரசுகளும் ஆங்கிலேயர் வசமாயின. எனினும் 1818ம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிராக உருவாகிய கண்டிக் கலகம் கண்டி இராச்சிய மக்களுடைய சுதேச உணர்வுகளைக் கூறு போட வேண்டிய தேவையை ஆங்கிலேயருக்கு உணர்த்தியது. இதன் அடிப்படையிலேயே கண்டி இராச்சியத்தில் கிழக்குக் கரையோரத்தில் அமைந்திருந்த தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களைத் தனியாகப் பிரித்து கிழக்கு மாகாணம் எனும் ஓர் தனியான அலகினை உருவாக்கினர். அதனடிப்படையில் 1832ம் ஆண்டு இலங்கையில் உருவாக்கப்பட்ட 09 மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டே இன்றைய மாகாண சபைகள் செயற்பட்டு வருகின்றன.
தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட தனி நாட்டிற்கான கோரிக்கைகள் சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் உருவாகிய போது இலங்கைத் தமிழ் தலைவர்களால் வடக்கு,கிழக்கு ஆகிய இரு மாகாணங்களை இணைப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. வட-கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் என்றும் அதனடிப்படையில் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டுமென்றும் வட-கிழக்குப் பிரதேசங்களை இணைத்ததே தமிழீழம் என்றும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஆயுதப் போராட்டப் பாதையில் இடம் பெற்ற முதலாவது பேச்சு வார்த்தையாக திம்பு பேச்சுவார்த்தை (1985) இடம் பெற்றது. இப் பேச்சுவார்த்தைகளில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுள் முக்கியமானதொன்றாக வடக்கு-கிழக்கு மாகாணங்களின் இணைப்பு காணப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் பிரதி நிதிகளாக இருந்த மிதவாத மற்றும் தீவிரவாதத் தலைவர்கள் இப் பேச்சுக்களில் பங்கெடுத்தனர்.அதனைத் தொடர்ந்து 1987 களில் செய்து கொள்ளப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தங்களில்
வடக்கு-கிழக்கு மாகாணங்களின் இணைப்பிற்கான தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டது.
எனினும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டதிற்கமைய ஒரு வருட பூர்த்தியில் கிழக்கு மாகாண மக்களின் சர்வஜன அங்கீகாரம் கோரப்பட முடியாத நிலையில் அவ்விணைப்பு நீக்கப்படவோ,நிரந்தரமாக்கப்படவோ இல்லை. ஆனாலும் நாட்டில் தொடர்ந்த யுத்தம் தற்காலிக இணைப்பினை சுமார் 20 வருடங்களுக்கு நீடிக்க வாய்ப்பினை ஏற்படுத்தியது.
2005 உயர் நீதிமன்ற தீர்ப்பொன்றின் அடிப்படையில் மேற்படி தற்காலிக இணைப்பு ரத்துச் செய்யப்பட்டது. எனினும் 20 வருடங்களுக்குப் பின்னர் ஏற்பட்ட சமூகஇ பொருளாதார மற்றும் நீண்டகாலப் போர்ச்சூழல் ஏற்படுத்திய பின் விளைவுகளினால் மக்களின் அரசியல் அபிலாசைகளும் வேறு பாதைக்குத்திரும்பின. எனவே இத்தீர்ப்பினை ஒட்டிய எந்தவொரு எதிர்ப்புணர்வுகளும் கிழக்கு மாகாண மக்களிடம் இருந்து வெளிப்படவில்லை. பழைய காலாவதியாகிப் போன அரசியல் தலைமைகள் தொடர்ந்து வடகிழக்கு இணைப்பினை வலியுறுத்திய போதும் கிழக்கிலிருந்து புதிதாக உருவாகிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் கிழக்கு மாகாணம் தனி நிர்வாக அலகாக உருவாக்கப்பட்டதனை பலமாக வரவேற்றனர்.
இதனடிப்படையில் 2008ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் இருந்து புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டதன் பின்னர் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை அரசு அறிவித்தது. இவ் வேளையில் கிழக்கின் தனித்துவமா? அல்லது வடகிழக்கு இணைப்பா? என்கின்ற இரு போக்குகளில் தமிழ்க் கட்சிகள் பிரிந்து நின்றன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினைத் தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளும் கிழக்கின் தனித்துவத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பங்கெடுக்க மறுத்தனர். தனித்துவமான கிழக்கில் போட்டியிடுவது தமது கொள்கைகளுக்கும்இ இலட்சியத்திற்கும் முரண்பாடானது என அறிவித்துக் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை பகிஸ்கரித்தனர். அதுமட்டுமன்றி தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக இம் மாகாணசபை முறைமையினை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என அறிக்கை விட்டனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டினர். அதனூடாக சிவநேசதுரை சந்திரகாந்தன் முதலமைச்சராகினார். அது மட்டுமல்ல இம் மாகாணசபை உருவாக்கத்தின் பலனாக 20 வருடங்கள் கைவிடப்பட்டிருந்த 13வது திருத்தச் சட்டத்திற்கு புத்துயிரளிக்கப்பட்டது.
இலங்கை அரசியல் தீர்வு முயற்சிகளில் முதல் முறையாக “யாழ்ப்பாணத்து மூளைகள்” இன்றிய ஒரு தீர்வாக கிழக்கு மாகாணசபையின் உருவாக்கம் நிகழ்ந்தது. ஆனாலும் இன்றைய நிலையில் 30 வருடப் போராட்டங்களின் விளைவாகத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்குக் கிடைத்திருக்கின்ற ஒரேயொரு அதிகாரப் பரவலாக்கல் முறை இக்கிழக்கு மாகாண சபையின் உருவாக்கத்தினாலேயே நிலை கொண்டிருக்கின்றதுஇ என்பதனை யாரும் மறுக்க முடியாது. இந்த சாதனைக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளே முழு உரித்துடையவர்கள்.
இத்தகைய வரலாற்றுப் பின்புலங்களோடு தான் இன்றைய கிழக்கு மாகாண சபைக்கான இரண்டாவது தேர்தல் சூடு பிடித்திருக்கின்றது,நிச்சயமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். இத் தேர்தல் களத்தில் இறங்கியிருப்பதானது கிழக்கு மாகாண சபையின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்திருக்கின்றது.
அது மட்டுமல்ல கிழக்கு மாகாண சபைக்குரிய அடுத்த ஆட்சியை யார் கைப்பற்றுவது? என்ற போட்டியின் பின்னணியில் இந்தியாவும்,நோர்வேயும்,அமெரிக்காவும் கூட இருந்து செயற்படுகின்றன. என்பதை இலங்கையில் இடம் பெறுகின்ற தூதுவராலயங்களின் இராஜதந்திர நகர்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குரிய ஆதரவுத் தளம் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்குத் தமிழ்த் தேசியவாத அரசியலால் காலா,காலமாக கட்டியமைக்கப்பட்டு வந்த அரசு மீதான எதிர்ப்புணர்வும் ஓர் முக்கிய காரணமாகும். அதே போல இறுதி யுத்தம் பற்றிய மனித உரிமை மீறல் பிரச்சாரங்களும் அரசியல் தீர்வு,அரசியல் பகிர்வு போன்ற விடயங்களில் அரசினது இழுத்தடிப்பும்,அரச அதிருப்தி வாக்குகளாக கூட்டமைப்பையே சென்றடையும். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வாக்கு வங்கிக்கு மேலும் பலமூட்டும் என்பது வெளிப்படை எனினும் கிழக்கு மாகாணத்தின் 03 மாவட்டங்களிலும் இவ்வாதரவுத்தளம் ஒரே மாதிரியாகச் செயற்படும் என்பதற்கில்லை. அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் ஒரு மாதிரியாகவும்,மட்டக்களப்பு மாவட்டத்தில் வேறு மாதிரியாகவும் அது இயங்கும்.
அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களில் பெரும்பான்மை அற்றுக் காணப்படும் தமிழர்களிடத்தில் மேற்படி காரணிகள் கூடிய தாக்கம் செலுத்துமென எதிர்பார்க்கலாம். இம் மாவட்டங்களில் காணப்படும் தமிழர்களின் வாக்களிப்பினைத் தீர்மானிப்பதில் தமிழ்த் தேசியவாத அலைக்கு கூடிய பங்கு உண்டு. ஆனால் இம் மாவட்டங்களில் காணப்படும் தமிழ் வாக்காளர்களின் விகிதாசாரம் ஒரு சில உறுப்பினர்களையே வென்றெடுக்கும் வாய்ப்பினைக் கொண்டுள்ளது.
உதாரணமாக திருமலை வாக்காளர்களின் எண்ணிக்கை 246000ஆக இருக்கும் போது அங்குள்ள தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை 63000ஆகும். இது திருமலை மாவட்ட மொத்த வாக்காளர்களின் 25வீதம் மட்டுமே ஆகும். கடந்த மாகாணசபைத் தேர்தலில் திருகோணமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டி போடாத நிலையிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளால் அங்கு ஓர் பிரதிநிதியைக் கூட வென்றெடுக்க முடியவில்லை. அதே வேளை ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு தமிழ்ப் பிரதி நிதிகளை வென்றெடுத்தது. இதற்கு அரச எதிர்ப்பு வாக்குக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஐக்கிய தேசியக் கட்சிக்கான மானசீகமான ஆதரவும் காரணங்களாக அமைந்தன. இந்த வாக்கு வங்கியானது ஐக்கிய தேசியக் கட்சிக்கு நிரந்தரமானதல்ல. அந்த வகையில் இம்முறை திருமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடுகின்ற தமிழ் வேட்பாளர்கள் வெல்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை.
அதே வேளை திருமலை மாவட்டத்தில் விகிதாசாரத்திற்கமைய ஒரு சில தமிழ்ப் பிரதிநிதிகள் மட்டும் தெரிவு செய்யப்படக் கூடிய நிலைமை இருக்கின்றது. அதிலும் தமிழ் வாக்குகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்இ தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என பிளவுபடப் போகின்றன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் போட்டியிடுகின்ற மூவரும் ஆயுதப் போராட்ட கால விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் ஆகும் இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஆயுதக்குழு எதிர்ப் பிரச்சாரங்களை வலுவிழக்கச் செய்யும் உத்தியாகும். ஆசிரியர் நளினகாந்தன்,கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் செந்தூரன்,முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் நவரெட்ணராஜா இதில் குறிப்பாக முன்னாள் அமைச்சர் நவரெட்ணராஜா கடந்த மாகாண சபை ஆட்சிக்கால அபிவிருத்திப் பணிகளை முன்வைத்து பிரச்சாரத்தினை முன்னெடுத்து வருகின்றார். சமூகத்தின் சிவில் சமூகப் பிரதிநிதிகளாகக் களமிறங்கியுள்ள இவர்களது சொந்த செல்வாக்குகளும்,
கடந்த மாகாண சபை அபிவிருத்திகளும் பிரச்சாரத்திற்கு வலுச்சேர்க்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனை நோக்கியே கடந்த முறை அம்பாறை மாவட்டத்திலிருந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் தெரிவாகி மாகாண அமைச்சராக இருந்த நவரெட்ணராஜா இம்முறை திருமலையில் களமிறக்கப்பட்டுள்ளார்.
அதே வேளை மாகாண சபையின் நிர்வாக மையம் திருகோணமலையில் அமைந்திருந்தமையும் திருகோணமலை மக்களை முன்னாள் ஆட்சியாளர்களான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மீது கொண்டுள்ள ஈடுபாட்டினை அதிகரித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பொறுத்த வரையில் திருகோணமலை மாவட்டம் சம்பந்தன் அவர்களது தொகுதி என்பதனால் வலுவான அடித்தளம் கூட்டமைப்பினருக்கு இருக்கின்றது. அது மட்டுமல்ல யாழ்ப்பாணப் பரம்பரையினரின் வாக்குகளை வடகிழக்கு இணைப்பை முன்னிறுத்திக் கூட்டமைப்பு ஈர்த்துக் கொள்ளும். அதே வேளை கூட்டமைப்பின் சார்பில் தலைமை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள தண்டாயுதபாணி ஒரு கல்வியாளராகவும்,தொழிற் சங்கவாதியாகவும் அறியப்பட்டவர். அவரை நோக்கி “விசயமானவர்” என்கின்ற ஒரு தோற்றப்பாடு மக்களிடையே பரப்பப்படுகின்றது. இது கூட்டமைப்பினருக்கு பெரும் சாதகமாகும். ஆனால் இப்பொழுது கிளம்பியுள்ள அவுஸ்திரேலிய ஆட்கடத்தல் விவகாரத்தில் கூட்டமைப்பு வேட்பாளர் சுரேஸ் மாட்டிக் கொண்டுள்ளமை இத் தேர்தலில் முக்கியமான ஒரு திருப்பமாகும். விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட அகிம்சைவாத தமிழரசுக் கட்சியின்வாரிசுகள் என்கின்ற “மிஸ்டர் கிளீன்” மாயையை சுக்குநூறாக்கியுள்ளது. இதனை தமக்குக் கிடைத்த பிரச்சார உக்திக்கான துருப்புச் சீட்டாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கையில் எடுத்துள்ளனர்.
இவையனைத்திற்கும் மத்தியில் தான் திருமலை மாவட்டத் தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்படப் போகின்றன. ஏதோ ஒரு கட்சி ஒரு சில பிரதிநிதிகளை மட்டும் அல்லது இரு கட்சிகள் தலா ஒரு பிரதிநிதிகளை வென்றெடுக்கும் வாய்ப்பினை இப் போட்டி நிலைமை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாறை மாவட்டம் 436000 வாக்காளர்களைக் கொண்டுள்ள போதும் தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை 80000 ஆகும். இது மொத்த வாக்காளர்களில் 18சதவீதமாகும். இந்த வாக்குப் பலத்தினை மிகவும் கட்டுக் கோப்பாகக் கடந்த முறை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பயன்படுத்தியமையின் காரணமாக 03 தமிழ்ப் பிரதிநிதிகள் கடந்த முறை அம்பாறையில் தெரிவு செய்யப்பட்டது. ஆனால் இம்முறை இந் நிலைமை கேள்விகுரியதாகும். ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இருக்கக் கூடிய ஆதரவுத் தளம் அம்பாறை மாவட்டத்தில் அப்படியே காணப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அங்கு போட்டியிடுகின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சங்கர் போன்றவர்கள் மக்களிடையே தமக்கான தனிச் செல்வாக்கினைக் கொண்டிருக்கின்றார்கள். புலிகள் கோலோச்சிய காலத்தில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் துரோகிப் பட்டங்களையும் தாண்டி நுPனுP சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டும் அளவுக்குத் தனிப்பட்ட செல்வாக்கினைக் கொண்டிருந்தவர். இம்முறை அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதால் தமிழ்த் தேசிய முகமூடி அணிந்து மேலும் வாக்குகளைக் கவர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்களும் உண்டு.
ஆனால் அவையெல்லாம் பழங்கதைகள் 15 வருடங்கள் சுவிஸ் நாட்டில் வாழ்ந்து விட்டு வந்திருப்பவரை பாதி சமூகம் மறந்து விட்டிருக்கின்றதுஇ என்கின்ற விமர்சனங்களையும் ஒதுக்கி விடுவதற்கில்லை. இதே போல் கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த இராஜேஸ்வரன் தொழிலதிபர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுபவர்களில் முக்கியமானவர். இவரது பணபலமும் அதனையொட்டிய தொடர்பாடல்களும் கூடிய வாக்குகளைப் பெறக் கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாறை வாழ் தமிழர்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வந்த தமிழர் மாகாண சபையின் தலைமைக் குழுவில் இருக்கின்ற செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன் மற்றும் முன்னாள் கல்விப் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான சகாதேவராஜா போன்றோரும் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அவரது அபிவிருத்திப் பணி தொடர்பில் மிகவும் ஆகர்சிக்கப்பட்டவர்கள். இவர்கள் எடுக்கப் போகின்ற சார்புநிலையும் அம்பாறை மாவட்ட தேர்தல் களத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்பை செலுத்தும்.
ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்த வரையில் பலமானதொரு தமிழ் முகம் அம்பாறை மாவட்டத்தில் கடந்த முறை போல் இம்முறையும் கிடையாது என்பதனால் ஐக்கிய தேசியக் கட்சித் தமிழ் வாக்குகளை பெறுவது சாத்தியமில்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வெற்றிலை சின்னத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட மூவர் இம்முறை போட்டியிடுகின்றனர். இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களிடையே செல்வராஜாவை விட புஸ்பராஜாவுக்கான ஆதரவுத்தளம் சற்றுப் பலமானதாகும். நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளராக செயற்பட்ட அனுபவங்களுடன் மாகாணசபை உறுப்பினராகிய இவர் ஒரு நல்ல செயற்பாட்டாளராக பார்க்கப்படுகிறார்.
அடுத்ததாக புஸ்பகுமார் (இனியபாரதி) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினர் என்பதற்கப்பால் ஜனாதிபதியின் இணைப்பாளராகக் கடந்த சில ஆண்டுகளாகச் செயற்பட்டு வருபவர். இதனடிப்படையில் பல சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் இறுக்கமான தொடர்புகளைக் கொண்டவர். இத்தொடர்புகள் அவருக்கு பெரும்பான்மையான மக்களுடைய செல்வாக்குகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்குள் இருந்து தெரிவு செய்யப்படக் கூடியவர்களில் பாரதி முதன்மையாக உள்ளார் எனக் கருதப்படுகின்றது. இதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்திலும்,
கிடைக்கக் கூடிய ஓரிரு தமிழ்ப் பிரதிநிதித்துவங்களுக்கான போட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியவற்றிற்கிடையே கடுமையாக உள்ளது.
தொடரும்…………………….!
-நன்றி தேனீ.