8/03/2012

| |

பிரிட்டிஷ் பாராளுமன்றக் குழு ஜனாதிபதியுடன் நேற்று சந்திப்பு

வடக்கு, கிழக்கு சென்று நிலைமைகளை நேரில் ஆராயுமாறு பிரி. குழுவிடம் ஜனாதிபதி வேண்டுகோள்
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் பாராளுமன்றக் குழுவினர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பு நேற்றுக் காலை கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றதுடன் இலங்கைக்கும் பிரித்தானியாவுக்குமிடையில் முதலீடுகள், வர்த்தகத்துறை மேம்பாடுகள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
தற்போது இலங்கையில் நிர்மாணிக்கப் பட்டு வரும் மேம்பாலங்களுக்கு பிரித்தானியா நிர்மாண உதவிகளை வழங்கி வருகிறது. அதேவேளை, இலங்கையில் தற்போதுள்ள முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் ஜனாதிபதி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.
பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்பாடுகள், அமைதியை ஏற்படுத்தவும் மக்களின் இயல்பு வாழ்க்கையைக் கட்டியெழுப்பவும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது விளக்கினார்.
அத்துடன், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதையும் அவர் பிரித்தானியப் பாராளுமன்றக் குழுவினருக்கு எடுத்துக் கூறினார்.
அபிவிருத்திச் செயற்பாடுகளை நேரடியாகக் கண்டறிவதற்காக வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு விஜயம் செய்யுமாறும் அக்குழுவினருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
இதற்கிணங்க எதிர்வரும் தினங்களில் மேற்படி குழுவினர் வடக்கு கிழக்குக்கு விஜயம் செய்யத் தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் 6ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் பிரிட்டிஷ் பாராளுமன்றத் தூதுக்குழுவினர் அம்பாந்தோட்டைத் துறைமுகம், மத்தன சர்வதேச விமான நிலையம் உட்பட நாட்டின் முக்கிய அபிவிருத்திப் பிரதேசங்களைப் பார்வையிடவுள்ளனர்.
அமைச்சர்கள் சரத் அமுனுகம, வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோருடன் முக்கியஸ்தர்கள் பலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.