8/23/2012

| |

மட்டக்களப்பில் மாற்றம் ஏற்பட்டு விட்டது எமதுமக்கள் தெளிவடைந்து விட்டார்கள்

எனது அப்பா,அப்பப்பா என எல்லோருமே தமிழரசுக் கட்சியினையே ஆதரித்தனர். நீங்களும் அப்படித்தான் கடந்த காலங்களில் வாக்களித்திருப்பீர்கள். நம்பி வாக்களித்த எமக்கு எந்த நன்மையையாவது செய்தால் தானே எமக்கும் எந்தவொரு கட்சிமீதும் நம்பிக்கைவரும். எனதுஅப்பா,அப்பப்பா செய்ததவறினை நான் செய்யப் போவது கிடையாது. எமது மக்களுக்கு மாற்றுத் தெரிவில்லாத காரணத்தினால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு வாக்களித்து வந்தனர். அதற்குத் தமிழர்கள் என்ற ஒரே ஒரு காரணம் தான் இருந்தது. மக்களுக்குச் சேவையாற்றக் கூடியவனா? உதவுகின்ற மனப்பாங்கு இருக்கின்றவனா? என்று யாரும் யாரையும் கேள்விகேட்பதுகிடையாது. தமிழரசுக் கட்சி கொண்டு வந்து யாரைக் காட்டினாலும் எமது மக்கள் வாக்களிப்பார்கள். வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்களும் மக்களை மறந்தவர்களாக தமது சொந்த விருப்பு,வெறுப்புக்களை மாத்திரம் கவனித்துக் கொண்டு மௌனமாகி விடுவார்கள். எல்லாம் தெரிந்தும் எமது மக்கள் எதனையும் கண்டு கொள்வதில்லை. ஆனால் இன்று இந்தக் கயவர் கூட்டத்திற்கு இங்கே இடம் கிடையாது. எமதுமக்கள் தெளிவடைந்துவிட்டார்கள்.இந்தத் தெளிவினைப் பெறும் வரைக்கும் அவர்கள் இழந்தவை எல்லாம் மிகஅதிகம். 
எமக்கு இழப்பிலிருந்துமீண்டெழுவதற்கான தேவைகளும் மிகஅதிகமாகும். தேவைநிறைந்த ஓர் சமூகம் மீண்டும் அழிவுக்குள் செல்ல அனுமதிக்க நாம் தயாரில்லை. எமது மாகாணத்தை நிர்வகித்து எம் மக்களைக் கட்டியாள எம்மால் முடியும். ஆதனை நிரூபித்துக் காட்டியிருக்கின்றோம். அந்தவகையில் எம் மக்கள் எம்மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். எம்மை வெற்றி பெறச் செய்யப் போவதும் அவர்கள் தான் என்று சி.சந்திரகாந்தன் தெரிவித்தார். முதலைக்குடா விநாயகர் ஆலய முன்றலில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக்  கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின  வேட்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.