8/27/2012

| |

இந்த தேர்தலின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கிழக்கில் மாபெரும் சக்தியாக வியாபிப்பர்


சர்வதேச அரசுகளின் கைக்கூலியாகச் செயற்பட்டு இராணுவத் தளபதியினை சர்வதேச நியதிச் சட்டங்களில் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்க உதவி செய்து தமிழர்களின் வாக்குரிமையினைத் தாரை வார்த்து தமிழினத்திற்கு மிகப் பெரும் துரோகம் செய்தவர் தான் இந்த சம்பந்தர். இன்று எங்களைப் பார்த்து கைக்கூலி என்கின்றார். யார் கைக்கூலிகளென்று மக்களுக்குத் தெரியும்.
மண்டை காய்ந்து போன இந்த மனிதர் டொலர் நோட்டுக்களுக்காக எமது மக்களின் தலைவிதியினை,எமது மக்களின் நியாயத்தினை விலைபேசி விற்றார். நீங்கள் பொன்சேகாவுக்கு அளித்த ஒவ்வொரு வாக்குகளுக்கும் தரகுப் பணத்தினைப் பெட்டிகளாக  எண்ணிப் பார்த்து கணக்கு முடித்திருப்பார் இந்த சம்பந்தர். எமது மக்கள் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்திடுவது போன்ற இந்தக் காரியத்தைச் செய்தது யாரை நம்பி???
ஈழத் தமிழர்களின் ஏகபிரதிநிதியும்,ஒப்பற்ற அரசியல் தலைவனுமாகத் தன்னைச் சித்தரித்து அரசியல் நடத்தி வரும் இந்த சம்பந்தனை நம்பித் தானே???

பாவம் எமது மக்கள் வழிநடாத்த யாருமற்ற நிலையில் திருடர் கூட்டம் என்று தெரிந்தும் தமது தலைவிதிகளை அடகு வைத்தனர். என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
 கடந்த சனிக்கிழமை (25.08.2012) அன்று செட்டி பாளையத்தில் இடம் பெற்ற அரசியல் பிரச்சாரக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் 62 வருடகால அரசியல் வரலாற்றில் தேசிய அரசியல்,சர்வதேச அரசியல் ஆகியவற்றைச் சரிவரப் புரிந்து கொள்ளாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரசியல் செய்கின்றதா? அல்லது இவையனைத்தும் தெட்டத் தெளிவாகத் தெரிந்தும் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்காது தமது கட்சியின் ஸ்திரத்தன்மை மற்றும் தமது சொந்த நலன்களை மாத்திரம் கருத்திலெடுத்து அரசியல் செய்கின்றதா கூட்டமைப்பு?
எது எப்படியிருப்பினும் கூட்டமைப்பின் அரசியல் மூலம் படுபாதாளத்தில் வீழ்ந்தது தமிழ் மக்கள் தான். அந்த வகையில் நாம் சரிவரச் சிந்திக்க வேண்டும்
இந்த தேர்தலின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கிழக்கில் மாபெரும் சக்தியாக வியாபிப்பர் என்று கூறினார்.
இக் கூட்டத்தின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் ஆலோசகர் சின்னா மாஸ்டர் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் என முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கூட்டத்தில் அறுநூறுக்கும் அதிகமான எண்ணிக்கையில் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர். கூட்டம் முடிந்து இரவு ஒன்பது மணியளவில் வீடு திரும்பிகொண்டிருந்த தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் இரு ஆதரவாளர்கள் மீது கூட்டமைப்பு வேட்பாளர் ஜனாவின் அடியாட்கள்  பிரசுரங்களை பறித்து தாக்கிவிட்டு தப்பிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.