அரசியல் கலந்துரையாடலின் நிமித்தம் வவுணதீவுப் பிரதேசத்தின் பல்வேறு பிரதேசங்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.சந்திரகாந்தன் விஜயம் செய்தார்.
நேற்று வியாழக்கிழமை அன்று காயான்மடு, கரையாக்கன் தீவு, கொத்தியாபுல, மண்டபத்தடி, பருத்திச்சேனை, காஞ்சிரங்குடா போன்ற பிரதேசங்களுக்கே அவர் விஜயம் செய்திருந்தார்.
இச் சந்திப்புக்களின் போது பிரதேச மக்கள் தமது ஆதரவு குறித்து எவ்விதமான ஐயங்களும் வேண்டாமெனவும், நாம் எப்போதும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கரங்களை பலப்படுத்தும் சக்திகளாகவே இருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டனர்.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய சி.சந்திரகாந்தன், தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வின் ஆரம்பப் புள்ளி மாகாண சபை ஆகும். எனவே இவ்வளவு காலமும் நாம் இழந்தவைகளை ஈடுசெய்வதற்கான ஓர் மையமாகவும் மாகாண சபையே விளங்குகின்றது. அந்த வகையிலே தமிழ் மக்கள் அனைவரும் சிந்தித்து முடிவெடுக்கின்ற ஓர் வரலாற்று சந்தர்ப்பத்தில் இருக்கின்றோம். அபிவிருத்தி மாத்திரமன்றி அதிகாரத்துடன் கூடிய ஓர் மாகாண சபை முறைமையை ஏற்படுத்தி தொடர்ந்து எதிர் காலத்தில் எம் மக்களுக்கான சிறந்த சேவைகளை ஆற்றுவதற்கான சிறந்த சூழலை எற்படுத்த வேண்டிய பொறுப்பு எம் மக்களை சார்ந்தது. எனவே விதண்டாவாதம் பேசும் வீண்பேச்சுக்காரர்களின் கொள்கைகளுக்கு பின்னால் செல்லாமல் எமது மாகாணத்திற்கான சிறந்த ஓர் செயல்வீரமுள்ளவனை தெரிவு செய்யவேண்டும் என கேட்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.