7/27/2012

| |

நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தேசிய வேலைத்திட்டம் அமைச்சரவை ஏகமனதாக அங்கீகாரம்

* 285 சிபார்சுகளில் குறுகிய காலத்தினுள் செய்யக்கூடியவையே முன்னெடுப்பு
* பாதுகாப்பு, காணி மறுசீரமைப்பு பொறுப்புகள் பெருமளவில் நிறைவேற்றம்
* 2013 பட்ஜட்டில் திறைசேரி கூடுதல் நிதி ஒதுக்கீடு


நல்லிணக்க ஆணைக்குழுவின் பரித்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் நேற்று தெரிவித்தார்.
இதன்படி, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்றின் ஒத்துழைப் புடன் இதற்கான வேலைத் திட்டங்கள் பரவலான முறையில் துரிதப்படுத்தப் படவிருப்பதாகவும் அவர் கூறினார்.
அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இணைந்து வெளிவிவகார அமைச்சில் நேற்று இது தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளித்தனர்.
இதன்போது பரிந்துரைகளுக்கான செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு தேவையான நிதியினை திறைசேரியினூடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடத்துக்கான வரவு-செலவுத் திட்டத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்வதற்கு திறைசேரி இணக்கம் தெரிவித்திருப்ப தாகவும் செயலாளர் லலித் வீரதுங்க கூறினார்.
கடந்த ஏழு வார காலப்பகுதிக்குள் பரிந்துரையில் கூறப்பட்டுள்ள குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றக் கூடிய வேலைத் திட்டங்கள் மும்மரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு மற்றும் காணி மறுசீரமைப்பு ஆகிய அமைச்சுக்கள் குறிப்பிட்டுக் கூறும்படியாக முக்கிய பங்கினை நிறைவேற்றியிருப்பதாகவும் செயலாளர் லலித் வீரதுங்க சுட்டிக்காட்டினார்.
காணிப் பிரச்சினைக்கு தீர்வு
அத்துடன், காணிப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணும் வகையில் நான்காவது ஆணைக்குழுவொன்றினை விரைவில் ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் தீர்மானித்திருப்பதாகவும் குறிப்பிட்ட செயலாளர் வீரதுங்க, எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் காணிப்பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினைக் கண்டுவிட முடியுமெனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் ஒவ்வொரு பரிந்துரையும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயற்பாடுகளைக் கொண்ட தாகவே அமைத்திருப்பதனால், இவை தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்கள், திணைக்களங்கள், நிறுவனங்கள், ஆணைக்குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கூடாக அதன் செயற்பாடுகள் பகிர்ந்தளிக்கப்படும்.
இவ்வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக அரசாங்க அதிபர்கள், பொலிஸ் அதிகாரிகள், முப்படையினர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க உத்தியோகத்தர்களது ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படும்.
இச்செயற்திட்டம் தேசிய வேலைத் திட்டமாக கருதப்படுவதனை யடுத்து ஒவ்வொரு செயன்முறைக்கும் காலவ ரையறை, முக்கிய பொறுப்புக் கூறும் நிறுவனம் மற்றும் ஒத்துழைப்பு வழங்கும் முகவர் அமைப்புகள் ஆகியனவும் வரையறுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், பரிந்துரைகளில் இனங்காணப்பட்டுள்ள குறுகிய கால வேலைத் திட்டங்களை பரவலாகவும் துரிதமாகவும் இலகுவாகவும் முன்னெடுக்கக் கூடியதாக இருக்குமெனவும் செயலாளர் வீரதுங்க கூறினார்.
மேற்படி செயற்பாடொன்றில் ஈடுபடும் அமைச்சு அல்லது அதனுடன் சம்பந்தப்பட்ட நிறுவனம் திறைசேரியை தொடர்புகொண்டு தமது செயற்பாடுகள் குறித்து விளக்க மளிப்பதன் மூலம் அதற்கான நிதியினை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் 2011ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் திகதியன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 17ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அச்சமயம் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் ஏற்கனவே வரையப்பட்டிருந்ததனால், இதற்கென விசேட நிதி ஒதுக்கீடுகள் எதுவும் செய்யப்பட்டிருக்கவில்லை. இருப்பினும் குறுகிய காலத்திற்குள் செயற்படுத்தக் கூடிய பரிந்துரைகளை இயலுமானவரை முன்னெடுத்துள்ளோம்.
பரிந்துரைகளின் மிகுதி செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் 2013ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் பாரிய நிதி ஒதுக்கீடுகளை செய்ய திறைசேரி இணங்கவிருப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
நல்லிணக்க ஆணைக்குழுவினால் 285 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை குறுகிய இடைக்கால மற்றும் நீண்டகால செயற்பாடுகளாக வகுக்கப் பட்டுள்ளன.
அந்த வகையில் குறுகிய காலப்பகுதிக்குள் பாதுகாப்பு அமைச்சும் காணி மறுசீரமைப்பு அமைச்சும் தமது பொறுப்புகளை இயலுமான வரை நிறைவேற்றியுள்ளன வென்றும் அவர் கூறினார்.
காணி மறுசீரமைப்பு அமைச்சு இடம்பெயர்ந்தோரது காணிப்பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து வரு கின்றது. எதிர்வரும் 12 மாத காலங்களில் இது தொடர்பான கற்கைகள் முடிவ டைந்ததும் நான்காவது ஆணைக்குழு வொன்று நியமிக்கப்படும். இதன் உறுப்பினர்கள் ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்படுவர். எதிர்வரும் 2 வருடங்களுக்குள் காணிப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படுமெனவும் கூறினார். பரிந்துரைகளில் சுட்டிக்காட் டப்பட்டுள்ள அநேக விடயங்களுக்கு பாராளுமன்ற தெரிவுக் குழுவினூடாகவே தீர்வு காணப்பட வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, இது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத் திட்டமென்பதனையும் அவர் இதன் போது சுட்டிக் காட்டினார்.
இதனுடன் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றுவது பெரும் உந்துசக்தியாக விருக்கும் அதேவேளை, பரிந்துரைகளின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பல்வேறு தரப்பினரது கருத்துக்களை உள்வாங்க தாம் தயாரெனவும் அவர் கூறினார்.
பரிந்துரைகளின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கென ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தலைமையிலான எட்டு பேர் கொண்ட குழுவொன்றினை ஜனாதிபதி அவர்கள் கடந்த மே மாதமளவில் நியமித்திருந்தார். இக்குழுவினரது சிபாரிசுக்கேற்ப அமைச்சரவைக்கு முன்வைக்கப் பட்டதற்கமையவே இச்செயற்பாடு தேசிய வேலைத்திட்டமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய மோதல்களின்போது உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களில் 98 சதவீதமானோர் தற்போது மீளக்குடியமர்த்தப்பட்டிருப்பதாக அமைச்சர் பீரிஸ் கூறினார்.
மோதல்கள் காரணமாக 2009 மே மாதமளவில் 2 இலட்சத்து 97 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்திருந்ததாகவும் +ரிw குறிப்பிட்டார்.
அத்துடன், முன்னாள் புலி உறுப்பினர்களுள் 90 சதவீதமானோர் புனர்வாழ்வளிக்கப்பட்டிருப்பதாகவும், கண்ணிவெடியகற்றும் பணிகள் முடிவடையும் தறுவாயிலிருப்பதாகவும், மொழிப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு பாடசாலை மட்டத்திலிருந்தே சிங்கள மாணவர்களுக்கு தமிழும் தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழி கற்பிக்கப்பட்டு வருவதாகவும் அவர் இதன் போது கூறினார்.
அமைச்சரவையில்
இதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட தேசிய வேலைத்திட்டம் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது பற்றி அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலும் தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் 285 பரிந்துரைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றின் கீழும் பிரிவு பிரிவாக பெரும் எண்ணிக்கையான பரிந்துரைகள் உள்ளன.
குறுகிய, மத்திம, நீண்டகால என்ற அடிப்படையில் பதிர்துறைகள் அமுல்படுத்தப்படவேண்டும். எனினும் குறுகிய கால, மத்திய கால என்ற அடிப்படையில் சுமார் 60 வீத பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனினும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கும் அரசுக்கும் அழுத்தம் கொடுக்கின்ற நாடுகளுக்கு இவை பற்றி நாம் தெரிவிக்கவில்லை.
நல்லிணக்க ஆணைக்குழுவில் குறித்துறைக்கப்பட்டுள்ள 285 பரிந்துரைகளில் நடைமுறைப்படுத்த இயலாத பரிந்துரைகள் ஏதேனும் உண்டா? என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது:
இருக்கலாம், நாம் இன்னும் அவ்வாறான ஒரு கட்டத்துக்கு வரவில்லை. குறிப்பாக அரசியல் யாப்பு தொடர்பான சில திருத்தங்கள், தேசிய கொள்கைகள் தொடர்பாக வரலாம். எனினும் நாம் அவ்வாறான ஒரு கட்டத்தை இன்னும் எட்டவில்லை என்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.