நாம் இறப்பதற்கு முன்னர் எமது மக்களுக்கு ஏதாவது நல்லவற்றைச் செய்ய வேண்டும். எமது நாட்டில் இனியும் தமிழர்கள் அழியக் கூடாது.
வயல்கள், கடல் வளம், ஆறுகள் என்று அனைத்துச் செல்வங்களையும் வைத்து விட்டு நாம் பிச்சைக்காரர்களாக நிற்கக் கூடாது என்பதற்காகவே எமது மக்களுக்குத் தலைமை தாங்கினோம். வரதராஜப் பெருமாள் கைவிட்டு ஓடிய கிழக்கு மாகாண சபையையும் துணிந்து பொறுப்பேற்றோம்.
என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சந்திரகாந்தன் கூறினார். இன்று ஞாயிற்றுக்கிழமை கிரான் பிள்ளையார் ஆலய முன்றலில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
உங்கள் குழந்தைகள் மண் வீட்டினுள் புழுதியில் உறங்குவதை விரும்புவீர்களா? கூறுங்கள். குறைந்த பட்சம் ஒரு சீமெந்துத் தரையில் பாயிலாவது அவர்கள் படுத்துறங்க வேண்டும், அவர்கள் ஆங்கிலம் பேச வேண்டும், கணணித் துறையில் விற்பன்னர்களாக வேண்டும், கைதேர்ந்த அறிஞர்களும், நல்ல தலைவர்களும் எமது மண்ணில் உருவாக வேண்டும். நாம் யாருக்கும் கைகள் கட்டித் தலை வணங்கக் கூடாது.
150 இராணுவத்தினரின் பாதுகாப்புடன் குண்டு துளைக்காத வாகனத்தில் அரசின் சலுகைகளைப் பெற்றுக் கொண்டு பிரபாகரன் எதைச் சாதிக்கப் போகின்றான்? எனக் குரல் கொடுத்துக் கை கொட்டிச் சிரித்த ஆனந்த சங்கரிக்கு இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இடம் கொடுத்திருக்கின்றார்கள்.