7/18/2012

| |

முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறியது

எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியல் தொடர்பான இட ஒதுக்கீட்டில் நேற்று முன்தினம் முதல் சர்ச்சை தோன்றியிருந்தது.
திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம் காங்கிரஸ் கோரியிருந்த 06 வேட்பாளர்களை வழங்குவதற்கு அமைச்சர் அதாஉல்லா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற வேட்பாளர் ஒதுக்கீடு தொடர்பான கூட்டம் ஒன்றில் முஸ்லிம் காங்கிரசுக்கு 05 வேட்பாளர்களை வழங்குவது என்று தீர்மாநிக்கப்பட்டதை அமைச்சர் ரவூப் ஹகீம் ஏற்றுக்கொண்டதை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எதிர்த்ததை தொடர்ந்து இந்த சர்ச்சை வலுவடைந்தது.
நேற்றிரவு இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவார்த்தைகளை விட்டு வெளியேறியது. முஸ்லிம் காங்கிரசை சமாதானப்படுத்த அரச தரப்பு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில், அமைச்சர்களான அதாஉல்லா மற்றும் ரிசாத் பதியுதீன் ஆகியோருடன் ஆளும் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி முஸ்லிம் காங்கிரசுக்கு 06 வேட்பாளர்களை வழங்குவது குறித்த சாத்தியப்பாட்டை ஆராய்ந்த போதும் அதாஉல்லா இறுதி வரை அதை ஏற்றுக்கொள்ளவில்லை, இல்லாவிட்டால் தான் தனித்துப் போட்டியிடப் போவதாக கூறியிருந்தார்.
எந்த இணைக்கப்படும் எட்டப்படாத நிலையில் இன்று காலை முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்ற தீர்மானத்தை எட்டியது.
அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரசும், அமைச்சர் றிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் அரசுடன் இணைந்து போட்டியிடும் என்று தெரிகிறது. இதற்குரிய நியமனப் பத்திரங்களில் குறித்த கட்சிகளின் வேட்பாளர்கள் இன்னும் சற்று நேரத்தில் ஜனாதிபதி செயலகத்தில் கையொப்பம் இடுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
நாளை வியாழக்கிழமை நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்வதற்கான இறுதித்தினம் என்பதும் மதியம் 12:00 மணிக்கு முன் அனைத்து நியமனப் பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது