7/17/2012

| |

தனக்கு ஆசனம் வழங்க மறுத்ததால் பரிசளிப்பு விழாவை நடாத்த விடாத கோட்டக் கல்வி அதிகாரி.

தற்போது அனைவராலும் பேசப்படுகின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே பல கட்சிகள் முண்டியடித்துக் கொண்டு தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இருந்த போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலுக்கு முழுமையாக தயாராகாத நிலையில்  அந்த கட்சியிலே தன்னை ஓர் வேட்பாளாராக நிறுத்தும்படி கல்குடா கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் கல்விக் கோட்ட அதிகாரி சுகுமார் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கேட்டிருந்தார். இதற்கு கட்சியின் வடக்கு தலைமை உடன்பட்ட போதும் கடைசி தருணத்தில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், செல்வராசா, அரியநேந்திரன் போன்றவர்கள் சுகுமாhருக்கு ஆசனம் வழங்கக் கூடாது என கட்சி தலைமையை கோரியிருந்தார்கள். காரணம் கல்குடா தொகுதியிலே யோகேஸ்வரனின் அக்காவை நிறுத்த இருப்பதே இதற்கு உண்மையான காரணமாகும். ஆனால் இதற்கு சுகுமார் தரப்பினர் சொல்லும் காரணம் வேறு, அதாவது சுகுமார் வெற்றியீட்டினால் பாராளுமன்ற தேர்தலிலே களமிறங்குவார் என்ற பயம் குறித்த 3 பேருக்கும் பிடித்து விட்டது. இதனால்தான் அவர்கள் சுகுமாரனுக்கு ஆசனம் வழங்க கூடாது என்கிறார்கள்.
 
அது ஒருபுறம் இருக்கட்டும் இன்றைக்கு (13.07.2012) ஏறாவூர் பற்று கோட்டக்கல்வி அதிகாரி சுகுமாரன் தலைமையில் பரிசளிப்பு விழா செங்கலடி மத்திய கல்லூரியில் இடம்பெறவிருந்தது. இதற்கு பிரதம அதிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், செல்வராசா, அரியேந்திரன் ஆகியோர் அழைக்கபட்டிருந்தார்கள். பிரமாண்டமாக ஏற்பாடு இடம் பெற்றது. மாணவர்கள் எல்லாம் உரிய இடங்களிலிருந்து நேரத்திற்கு வந்து விட்டார்கள். மதிய சாப்பாட்டிற்கான முழு ஏற்பாடுகளும் இடம் பெற்று விட்டன. ஏன் மரக்கறிகள் அனைத்தும் வெட்டியிருந்தது. பாவம் மாணவர்கள் நிகழ்வு இடம்பெறவில்லை என்றதால் உடனே திரும்பி சென்றார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்றும் தெரியாது. 3 பிரதம அதிதிகளும் தனக்கு ஆதரவு வழங்கத் தயார் இல்லை என்பதனை கடைசி நேரத்தில் அறிந்து கொண்ட சுகுமாரன் அந்த நிகழ்வை உடனடியாக எந்தவொரு முன்னறிவித்தலுமின்றி நிறுத்தினார். எது எப்படியோ இவர்களது தேவையற்ற பிரச்சினைகளால் பாதிக்கபபட்டது மாணவர்கள்தான்.