கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதா இல்லை தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
நேற்று முன்தினம் கட்சியின் தலைவர் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற கூட்டமும் முடிவுகள் எட்டப்படாது முடிவுற்றது. ஆசனப்பகிர்வு, சக கட்சி வேட்பாளர்களை களமிறக்கும் இடங்கள் என்பவற்றில் ஐ.ம.சு.மு, மு.கா விடையே இழுபறிகள் உள்ளன.
முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் இது குறித்துப் பேசினர்.
இக்கூட்டத்தில் எழுந்த பலத்த வாதப் பிரதிவாதங்களையடுத்து எந்தவித முடிவும் எட்டப்படாத நிலையில் கூட்டம் முடிவின்றி இழுபறியில் முடிவடைந்தது.
எதிர்வரும் 10 ஆம் திகதி மீண்டும் கூடி ஆராய்ந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தல் குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைமை இக்கூட்டத்தில் முடிவெடுத்தது. 10 ஆம் திகதி கூடுவதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவைச் சந்தித்து ஆசனப் பகிர்வு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதென்றும் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது. அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வுடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் எட்டப்படும் முடிவு குறித்து 10 ஆம் திகதி நடைபெவுள்ள முஸ்லிம் காங்கிரஸின் கூட்டத்தில் ஆராயப்பட்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.
எனினும், ஐ.ம.சு.மு.வுடன், முஸ்லிம் காங்கிரஸ் முன்னர் நடத்திய பேச்சுக்களில் அம்பாறை மாவட்டத்துக்கு 5 ஆசனங்களை வழங்கவே ஐ.ம.சு.மு. விருப்பம் வெளியிட்டிருந்தது. ஆனாலும் அம்பாறை மாவட்டத்தில் ஆகக்குறைந்தது 6 ஆசனங்களையாவது தமக்கு வழங்க வேண்டும் என்பதில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை உறுதியாகவுள்ளமை தெரிய வருகிறது.
ஐ.ம.சு.மு.வுடனான பேச்சுவார்த்தையில் இவ்விடயம் பிரஸ்தாபிக்கப்படவிருப்ப தாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோன்று மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் வழங்கப்பட வேண்டுமென்று கோரிய ஆசனங்களையே மு.கா. கோருகின்றது. இம்மாவட்டங்களில் முறையே மூன்று, மூன்று ஆசனங்கள் கோரப்படலாம்.
அதேநேரம் சக கட்சி வேட்பாளர்களை எந்தெந்தப் பகுதிகளில் களமிறக்குவது என்பது குறித்தும் ஐ.ம.சு.முன்னணியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன. மற்றும் சப்ரகமுவ, வடமத்திய மாகாணங்களிலும் நியாயமான ஆசன ஒதுக்கீடுகளை முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது.
எதுவாகவிருந்தாலும், அரசுடன் இணைந்து போட்டியிடுவதையே பெரும்பாலானவர்கள் விருப்புவதாக கட்சி வட்டாரங்கள் மூலம் தெரிய வருகிறது.