கூட்டமைப்பை தோற்கடிக்க எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இராசதுரை நற்பணிமன்றம் சார்பில் தனித்து வேட்பாளர்கள் போட்டியிடவிருப்பதாக இராசதுரை நற்பணிமன்றம் என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “கிழக்கு மாகாண சபைத் தேர்தல் களத்தில் இராசதுரை நற்பணி மன்றம் குதிக்கிறது” என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இராசதுரை நற்பணி மன்றம் போட்டியிடுவது உறுதி. ஆனால் அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் போட்டியிடுவது சம்பந்தமாக அப்பகுதி ஆதரவாளர்களுடன் கலந்துரையாடி விரைவில் தீர்மானத்தை அறிவிக்கவிருப்பதாகவும் இராசதுரை நற்பணி மன்றத்தின் தலைவரும், முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான எப்.ஜி. ஜெயசிங்கம் கூறியிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
30 ஆண்டுகளுக்கு மேல் செயலிழந்து நின்ற தமிழரசுக் கட்சி இன்று தமிழ் மக்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து செயற்படும் என எதிர்பார்த்த போதும் குறிப்பிட்ட ஒரு சிலரின் அரசியல் வாழ்வு நிரந்தரமாக நிலைக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த காலத்தில் உண்மையான உழைத்த தொண்டர் களையும், ஆதரவாளர்களையும் அரவணைக்காது இக்கட்சி செயற் படுகிறது.
இதனை ஏற்றுக் கொள்ள முடியாத விசுவாசிகள் ஒன்றிணைந்து எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானிப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.