நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சின்னத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி போட்டியிடுகின்றது. இதிலே முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் போடடியிடுகின்றார்.
மீண்டும் சந்திரகாந்தனை முதலமைச்சராக்குவதற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிராம மட்ட பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள,; புத்திஜீவிகள் எனப் பலர் திடசங்கர்ப்பம் பூண்டுள்ள நிலையில், பல்வேறு கிராமங்களிலும் கிராம மக்கள் சந்திரகாந்தனை அழைத்து தங்களது ஆதரவினை உறுதிப்படுத்தி வருகின்றார்கள்.
அந்த வரிசையிலே இன்று வவுணதீவ பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரின் ஏற்பாட்டில் வவுணதீவு பிரதேசத்திலுள்ள பொது அமைப்புக்களின் வேண்டுகோளின் அடிப்படையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.
இதிலே கலந்து கொண்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில், படுவான்கரைப் பிரதேசத்தின் கல்வியின் தந்தையென போற்றப்படுகின்ற பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவலநேசதுரை சந்திரகாந்தனை நாங்கள் என்றுமே மறக்க மாட்டோம். எங்களது படுவான்கரை மக்களின் கல்வி அறிவை பெருக்குவதற்காக புதிதான கல்வி வலயத்தை உருவாக்கி தந்த அந்த மாமனிதருக்கே எங்களது பூரண ஆதரவு என அவர்கள் அனைவரும் தங்களது ஒருமித்த கருத்தினை தெரிவித்தார்கள்.
உண்மையில் படுவான் கரை மக்களுக்கு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் ஒன்றை அமைத்துக் கொடுத்ததன் பயனாக இன்று முன்னாள் முதலமைச்சர் சி..சந்திரகாந்தன் அப்பிரதேச மக்களின் தன்னிகரில்லாத் தலைவனாக திகழ்கின்றார்.
இவ் விசேட கலந்துரையாடலில் மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கா.சுப்பிரமணியம், பிரதி தவிசாளர் ஜெ.ஜெயராஜ், த.ம.வி.புலிகள் கட்சியின் பிரதி தலைவர் யோகவேள் மற்றும் பிரதேச அமைப்பாளர் செ.ஜெயக்குமார் உள்ளிட்ட பல முக்கியஸ்த்தர்களும் கலந்து கொண்டார்கள்.