சிரிய தலைநகர் டமஸ்கஸ்ஸில் நேற்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தாவுத் ரஜியா கொல்லப்பட்டுள்ளார்.
சிரிய நாட்டு தேசிய பாதுகாப்பு சபை தலைமையகத்தை இலக்குவைத்தே இந்த தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது அங்கு அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் அவசர கூட்டத்தில் பங்கேற்றிருந்ததாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் அரசின் பல முக்கியஸ்தர்களும் படுகாயத்திற்குள்ளாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சிரிய கிளர்ச்சியாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் தலைநகரில் கடும் மோதல் நீடிக்கும் நிலையிலேயே இந்த தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் காயமடைந்தோருள் உள்துறை அமைச்சர் மொஹமட் அல்ஷாரும் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதில் கொல்லப்பட்ட கிறிஸ்தவரான பாதுகாப்பு அமைச்சர் ரஜா, பிரதி இராணுவ தளபதி, அமைச்சரவையின் பிரதித் தலைவர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.
இதேவேளை சிரிய தலைநகரின் பல பகுதிகளிலும் இரு தரப்புக்கும் இடையில் மோதல்கள் நீடிக்கின்றன. தலைநகரில் இறுதிக் கட்ட மோதல் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இதில் ஜனாதிபதி மாளிகையை சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு சூட்டு சத்தங்கள் கேட்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த தகவல்களை மறுத்துள்ள சிரிய அரசு கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாக கூறியுள்ளது.