7/25/2012

| |

இரசாயன ஆயுதம் இருப்பதாக சிரியா ஒப்புதல் ; சர்வதேச நாடுகள் கண்டனம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 1,260 பேர் பலி
தங்களிடம் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் இருப்பதாக சிரிய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. எனினும் அவைகளை சிரிய மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படமாட்டாது என்றும், வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படும் என்றும் சிரிய அரசு எச்சரித்துள்ளது.
சிரிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஜிஹாத் மக்திசி டமஸ்கஸ்ஸில் நேற்று முன்தினம் நடத்திய ஊடக மாநாட்டில் இந்த தகவலை வெளியிட்டார். இதில் சியா தற்பாதுகாப்பிற்காகவே இரசாயன ஆயுதங்களை வைத்திருப்பதாக கூறிய அவர், ஜனாதிபதி பஷர் அல் அஸாத்திற்கு எதிராக செயற்படும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அவை பயன்படுத்தப்படமாட்டாது என குறிப்பிட்டார்.
“சிரிய அரசின் கையிருப்பிலுள்ள இரசாயன மற்றும் மரபுக்கு முரணான ஆயுதம் சிவிலியன்கள் அல்லது சிரிய மக்களுக்கு எதிராக ஒருபோதும் பயன்படுத்தப்படமாட்டாது. தற்போதைய மோதல் நிலை எந்த கட்டத்தை எட்டினாலும், அவை பயன்படுத்தப்படமாட்டாது” என மக்திசி உறுதியளித்தார்.
எவ்வாறாயினும் சிரியாவில் தொடரும் மோதல்களுக்கு இடையில் அரசு இரசாயன ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக பல தரப்புகளும் அச்சுறுத்தி வருகின்றன. குறிப்பாக கிளர்ச்சியாளர்களின் குண்டுத்தாக்குதலில் சிரிய பாதுகாப்பு அமைச்சர் உட்பட அரசின் முக்கிய பிரமுகர்கள் நால்வர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் அரசு இரசாயன ஆயுதத்தை பயன்படுத்தும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டது.
இதனிடையே சிரிய அரசின் அறிவி ப்பை தொடர்ந்து சர்வதேச சக்திகள் கண்டனம் வெளியிட்டுள்ளன. “சிரிய அரசு இந்த மிகப்பெரிய தவறைச் செய்தால் அது பாரதூரமான விளைவை சந்திக்க வேண்டிவரும்” என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரித்துள்ளார். எனினும் சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தும் தவறை செய்யாது என நம்புவதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனின் ஊடக செயலாளர் ஜோர்ஜ் மலிடில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
பல்கேரியாவில் இருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், சிரிய இரசாயன ஆயுதத்தை பயன்படுத்தும் அபாயம் குறித்து கவலையை வெளியிட்டுள்ளார். “சிரியா பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை பயன்படுத்தினால் அது மிகப்பெரிய முட்டாள்தனமான செயல்” என்றார்.
அதேபோன்று சிரியாவின் அச்சுறுத்தல் கொடூரமான, ஏற்க முடியாதது என ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். “இரசாயன ஆயுதத்தை பயன்படுத்தும் சிரியாவின் அச்சுறுத்தல் கொடூரமானது” என ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் குயிடோ வெஸ்டரிவெல் குறிப்பிட்டுள்ளார். “எந்த நிலையிலும் இரசாயன ஆயுதத்தை பயன்படுத்துவதாக கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் கூறியுள்ளார்.
இதனிடையே சிரியாவிடம் இருக்கும் இரசாயன ஆயுதங்கள் லெபனானின் ஷியா இஸ்லாமிய அமைப்பான ஹிஸ்புல்லாவிடம் கைமாறும் அபாயம் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகும் அச்சம் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து இஸ்ரேல், அமெரிக்கா அவதானமாக உள்ளதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் சிரிய அரசின் கையிருப்பில் இருக்கும் இரசாயன ஆயுதங்களின் ஒரு பகுதியை அந்நாட்டு எல்லைப் பகுதியில் இருக்கும் விமான நிலையங்களுக்கு கெண்டு சென்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலேயே சிரிய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மறுபுறத்தில் சிரிய தலைநகர் டமஸ்கஸ்ஸில் மீண்டும் மோதல் மூண்டுள்ளதாகவும் இரண்டாவது நகரான அலப்போவில் தொடர்ந்தும் மோதல் நீடிப்பதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன. இதன்போது அலப்போ மற்றும் ஹோம்ஸ் நகரிலுள்ள சிறைச்சாலைகளை உடைத்து கைதிகள் தப்பிக்க செய்ய ஆயுததாரிகள் முயன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் அலப்போ சிறைச்சாலையில் 9 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
எனினும் தலைநகர் டமஸ்கஸ்ஸின் பல பகுதிகளை பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான காட்சிகளையும் அந்த தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில் தெற்கு பகுதியான நெஹ்ர் இஷாவின் வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டன.
மோதலின் போது கொல்லப்பட்ட தீவிரவாதிகள் என கூறி உடல்களையும் அரச தொலைக்காட்சி காண்பித்துள்ளது.
கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் சிரியாவின் வர்த்தக நகரான அலப்போவின் பெரும் பகுதியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இதனை மீட்க பாதுகாப்புப் படையினர் நேற்றைய தினத்திலும் கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் ஏற்பட்ட கடும் மோதல்களில் நாடுபூராகவும் 1,260 பேரளவில் கொல்லப்பட்டிருப்பதாக செயற்பாட்டாளர்கள் நேற்று தெரிவித்தனர்.
அதேபோன்று சிரிய அகதிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சிரிய செம்பிறை சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதில் நாட்டுக்குள் 1.5 மில்லியன் பேர் வீடின்றி தவித்து வருவதாகவும் மேலும் 115,000 சிரியர்கள் அகதிகளாக அயல் நாடுகளில் தஞ்சம் புகுந்திருப்ப தாகவும் செம்பிறை சங்கம் கூறியுள்ளது.
சிரியா தொடர்பான கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் மனித உரிமை அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், கடந்த 2011 மார்ச் மாதம் ஆரம்பமான மக்கள் எழுச்சி போராட்டத்தில் இதுவரையில் சிரியாவில் குறைந்தது 19,106 பேர் கொல்லப்பட்டிருப்பதாக கூறியது. ஐ.நா. கடந்த மே மாதம் வெளியிட்ட அறிவிப்பில் 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருப்பதாக கூறியது.