எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹொர்மூஸ் கால்வாயை மூடுவதற்கான சட்ட மூலம் ஒன்று ஈரான் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ளது.
ஈரானுக்கு எதிரான எண்ணெய் தடைக்கு ஆதரவளித்த நாடுகளுக்கான மசகு எண்ணெய் கப்பல்கள் ஹொர்மூஸ் கால்வாயூடாக செல்வதற்கு தடைவிதிக்க இந்த சட்டமூலம் கோரவுள்ளது.
ஈரான் பாராளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார கொள்கை களுக்கான குழு இந்த சட்டமூலத்தை வரைந்துள்ளது. இதற்கு 290 ஆசனங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் 100 பேர் ஆதரவு கையொப்பம் இட்டுள்ளனர்.
இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் எண்ணெய் தடை விதித்ததற்கு பதிலளிக்கும் வகையில் இந்த சட்டமூலம் கொண்டுவரப்படுவதாக ஈரான் பாராளுமன்றத்தின் வெளிவிவகார குழு உறுப்பினர் இப்ராஹிம் அகா மொஹமதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்ட மூலத்தின் படி ஈரானுக்கு எதிராக எண்ணெய் தடை விதித்த நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் ஹொர்மூஸ் கால்வாயூடாக செல்வதை தடுத்து நிறுத்த அரசுக்கு முழு அதிகாரமும் வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதன் தேவைக்கேற்ப நடைமுறைப் படுத்தப் படவுள்ளது.
ஈரான் கடலெல் லையில் அமைந்துள்ள ஹொர்மூஸ் கால்வாய் பெர்சிய வளைகுடா மற்றும் மேற்கு ஓமான் கடலை இணைக்கும் குறுகிய கால்வாயாகும். இதனூடே சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், குவைட், ஈராக் ஆகிய நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் செல்வ தோடு கட்டாரின் எரிவாயு ஏற்றுமதி களில் பெரும்பால னவை இந்த கால் வாயூடாகவே செல்கிறது. சராசரியாக இந்த கால்வாயூடாக நாளொன்றுக்கு 15 மில் லியன் பீப்பாய் மசகு எண்ணெய் பயணிக்கிறது.
இந்நிலையில் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி அமெரிக்கா கடந்த மார்ச்சில் அதனது எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு தடைவிதிக்க அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஈரானின் எண்ணெய் இறக்குமதியை பெரும்பாலான நாடுகள் குறைந்துக் கொண்டன. 27 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தென்கொரியா ஆகியன இம்மாதம் முதலாம் திகதியுடன் ஈரான் எண்ணெய் இறக்குமதியை முழுமையாக நிறுத்திக் கொண்டது.
இதனால் ஈரான் எண்ணெய் ஏற்றுமதியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலை யிலேயே ஹொர்மூஸ் கால்வாயை மூடுவதற்கு ஈரான் மீண்டும் ஒருமுறை திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அது ஹொர்மூஸ் கால்வாயை மூடுவதாக எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.