முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை பின்தள்ளி லிபரல் கூட்டணிக்கு அதிக ஆசனங்கள்;
லிபியாவில் கடந்த அரை நூற்றாண்டுக்கு பின்னர் நடைபெற்ற முதலாவது ஜனநாயக தேர்தலின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் லிபரல் கூட்டணி முன்னிலை பெற்றுள்ளதோடு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு பின்தள்ளப் பட்டுள்ளது.
எனினும் எந்த தரப்பும் பெரும்பான்மை பெறாத நிலையில் பாராளுமன்றத்தில் யார் ஆதிக்கம் செலுத்துவார் என்பது தெளிவில்லாமல் உள்ளது.
கடந்த 10 தினங்களுக்கு முன்னர் நடந்த 200 ஆசனங்களுக்கான பாராளுமன்ற தேர்தலின் இறுதி முடிவு திரிபோலியில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. லிபிய இடைக்கால அரசின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல், பிரதமர் அப்துல் ரஹிம் அல் கிப் முன்னிலையில் அந்நாட்டு தேர்தல் ஆணையம் இந்த முடிவை வெளியிட்டது.
கடந்த 42 ஆண்டுகளாக தனியாளாக லிபியாவை ஆண்ட முஅம்மர் கடாபிக்கு பின்னர் அங்கு ஆட்சி மாற்றத்திற்கான தீர்க்கமான முன்னெடுப்பாக இந்த தேர்தல் கருதப்படுகிறது. அதேபோன்று முஅம்மர் கடாபி ஆட்சி கவிழ்க்கப்பட்டதன் பின்னர் அங்கு ஆட்சியிலுள்ள இடைக்கால அரசின் ஆட்சிக் காலமும் இந்த தேர்தல் முடிவுகளுடன் முடிவுக்கு வருகிறது.
ஜிப்ரில் முன்னணி
இதன்படி முஅம்மர் கடாபி அரசுக்கு எதிரான மோதலின் போது கிளர்ச்சிப் படையின் பிரதமராக இருந்த மஹ்மூத் ஜிப்ரிலின் தலைமையிலான லிபரல் கூட்டணி மொத்தம் 39 ஆசனங்களை வென்றுள்ளது. இதற்கு அடுத்ததாக லிபிய முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் கட்சியான நீதிக்கும் கட்டுமானத்திற்குமான கட்சி 17 ஆசனங்களை மாத்திரமே வென்றது.
இந்த தேர்தலில் கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட 80 ஆசனங்களில் எஞ்சிய 24 ஆசனங்களையும் சிறிய கட்சிகள் வென்றுள்ளன.
எனினும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் ஜிஹாத் போராளியும் கடாபி அரசுக்கெதிரான கிளர்ச்சிப் படையில் கட்டளை தளபதிகளில் ஒருவராக இருந்தவருமான அப்துல் ஹகிம் பல் ஹஜ்ஜின் இஸ்லாமிய தேசியக் கட்சி ஒரு ஆசனத்தைக் கூட வெல்லவில்லை.
இதன்போது லிபரல் கூட்டணி, முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
குறிப்பாக நாட்டின் இரு மிகப்பெரிய நகரங்களான தலைநகர் திரிபோலி மற்றும் பெங்காசி ஆகியவற்றில் கூட்டணி அதிக வாக்குகளை வென்றுள்ளது.
இதன்போது 200 ஆசனங்களில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட 120 ஆசனங்களுக்கான தேர்தல் முடிவுகளும் வெளியிடப்பட்டன. இதில் சுயேச்சை வேட்பாளர்களில் ஒரே ஒரு பெண் உறுப்பினர் மாத்திரமே வென்றுள்ளார். ஆனால் கட்சிகள் அடிப்படையில் 30 ஆசனங்களை பெண்கள் வென்றுள்ளனர்.
பெரும்பான்மையில் குழப்பம்
லிபிய பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி மஹ்மூத் ஜிப்ரிலின் லிபரல் கூட்டணி அதிக ஆசனங்களை வென்றாலும் பாராளுமன்ற ஆசன முறையில் உள்ள சிக்கலால் அந்த கூட்டணிக்கு பெரும்பான்மை பெறமுடியாதுள்ளது. தேர்தலில் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் கூட்டணிக் கட்சி சுமார் பாதி அளவான ஆசனங்களை வென்றாலும் அது ஒட்டுமொத்த ஆசன அடிப்படையில் வெறும் 20 வீதத்தையே வென்றுள்ளது.
இந்நிலையில் அனைத்து தரப்பையும் ஒன்றிணைத்த ஐக்கிய கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு மஹ்மூத் ஜிப்ரில் அழைப்பு விடுத்துள்ளார். மஹ்மூத் ஜிப்ரிலின் கூட்டணி கட்சியில் சிறிய அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் என சுமார் 60 கட்சிகள் இணைந்துள்ளன. எனினும் ஜிப்ரில் பிரபலமான ஒருவர் என்பதால் ஜிப்ரிலுக்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்திருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
60 வயதான மஹ்மூத் ஜிப்ரில் முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி அரசில் சிரேஷ்ட உறுப்பினராகவும் பொருளியல் நிபுணருமாவார். எனினும் இவர் லிபியாவில் மக்கள் எழுச்சி ஆரம்பமான போது கடாபி அரசில் இருந்து விலகி கிளர்ச்சியாளர்களுடன் இணைந்துகொண்டார். மஹ்மூத் ஜிப்ரில் கடந்த 8 மாத காலமாக லிபிய இடைக்கால அரசின் பிரதமராக செயற்பட்டார்.
இடைக்கால அரசில் அங்கம் வகிப்பவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் இவர் இம்முறை தேர்தலில் வேட்பாளராக போட்டியிட வில்லை.
இதில் இந்த லிபரல் கூட்டணி தம்மை மத சார்பற்றோராக அடையாளப்படுத்தவில்லை. இஸ்லாமிய ஷரியா சட்டமே லிபியாவின் புதிய அரசியலமைப்பாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. எனினும் அனைத்து மதங்களுக்கும் மதிப்பளிக்கப்படும் என அது அறிவித்துள்ளது.
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு நம்பிக்கை
எவ்வாறாயினும் இந்த தேர்தலில் 17 ஆசனங்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்த முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தாம் பெரும்பான்மை பெறு வோம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது. பெரும்பான்மை சுயேச்சை உறுப்பினர்களுடன் தாம் பெரும்பான்மை பெறுவோம் என அதன் அரசியல் கட்சியான நீதிக்கும் கட்டுமானத்திற்குமான கட்சியின் தலைவர் மொஹமட் சவான் ராய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.
‘இந்த முடிவுகள் அனைத்து லிபிய மக்களினதும் வெற்றியாகும் என நாம் கருதுகிறோம். வெற்றிபெற்ற அனைவருக்கும் எமது வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறோம். நாம் 60 முதல் 70 ஆசனங்கள் வரை வென்றிருக்கிறோம். ஏனைய கட்சிகளுடன் இணைந்து பெரும்பான்மை பெற முடியும்’ என்று மொஹமட் சவான் குறிப்பிட்டார். அரபு எழுச்சிக்கு பின்னர் இடம்பெற்ற தேர்தல்களில் எகிப்து மற்றும் துனீஷியாவில் இஸ்லாமியவாதிகளே வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.
சுயேச்சை உறுப்பினர்களின் கையில்
எகிப்து பாராளுமன்ற ஆசன முறையில் அதிகபட்சமாக சுயேச்சை வேட்பாளர்களுக்கு 120 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட்டோர்கள் தொடர்பில் தெளிவான விளக்கம் இல்லை.இவர்கள் கட்சி சார்பானவர்களாக, தனிப்பட்ட சிந்தனை கொண்டவர்களாக அல்லது பழங்குடியின சார்புடையவர்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
எவ்வாறாயினும் சுயேச்சை வேட்பாளர்களின் கையிலேயே பாராளுமன்றத்தில் அரசியல் கட்சிகள் பெரும்பான்மை பெறுவது தங்கியுள்ளது. ‘தேர்தல் முடிவுகள் பற்றி இப்போதே கணிக்க முடியாது. அடுத்த ஒரு சில தினங்களில் சுயேச்சை உறுப்பினர்கள் எவ்வாறு செயற்படுகிறார்கள் என்பதை பார்த்தே தீர்மானத்தை எட்ட முடியும்’ என்று லிபிய தக்யீர் கட்சி நிறுவனர் குமா அல் கமடி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் ஆரம்ப கட்ட அறிவிப்பு என்றும் முடிவுகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்ய இருவாரகால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்தே இறுதி முடிவுகள் உறுதிப்படுத்தப்பட முடியும் எனவும் அது குறிப்பிட்டுள்ளது.
ஓர் ஆண்டில் மீண்டும் தேர்தல்
தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 200 பேர் கொண்ட பாராளுமன்றம் இடைக்கால அரசின் நிர்வாக பொறுப்புகளை ஏற்கவுள்ளது. இதனால் அப்துல் ஜலீல் தலைமையிலான தற்போதைய இடைக்கால அரசு கலைக்கப்படவுள்ளது. இதன்படி புதிய பிரதமரை தேர்வு செய்யும் பொறுப்பு பாராளுமன்றத்திற்கு வழங்கப்படவுள்ள தோடு லிபியாவின் புதிய அரசியல் அமைப்புக்கான 60 பேர் கொண்ட அரசியலமைப்பு குழுவையும் பாராளுமன்றம் தேர்வு செய்யும்.
இதில் லிபியாவின் புதிய அரசியல் அமைப்பு வரையப்பட்டு அது நிறைவேற்றப்பட்டபின் மீண்டும் ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. எவ்வாறாயினும் அரசியல் அமைப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட பாராளுமன்றத்தில் இரண்டில் மூன்று பெரும்பான்மையை பெற வேண்டும்.