ஒரு சைக்கிள் கூடப் பயணிக்க இயலாத நிலையில் இருந்த போது தளவாய், சிங்காரத்தோப்பு பாதையினை எமக்குத் திறம்பட அமைத்துக் கொடுத்தவர் எமது முதல்வரே எனக் களுவங்கேணி சிங்காரத்தோப்பு பிரதேச வாழ் மக்கள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், மண்ணை விட மிகச் சிறியதான ஓர் விதையிலிருந்தே ஆலமரம் உருவாகின்றது அது போன்றே எமது முதல்வரும் கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வருகின்றார்.
யாழ் மேட்டுக்குடி சிந்தனையாளர்கள் எமது இளைஞர், யுவதிகளை சிறந்த தலைவர்களாகவும், வழிகாட்டிகளாகவும் விளங்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள்.
போராளிகளை உருவாக்கும் களமாகவே அவர்கள் கிழக்கினைப் பயன்படுத்தினர். கிழக்குத் தமிழன் சிந்திக்கக் கூடாது என்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தனர்.
ஆனால்....! அனைத்து வியாக்கியானங்களையும் தகர்த்தெறிந்து ஓர் புதிய பாதையைக் காட்டி எம் சிந்தனையைக் கிளர்ந்தெழச் செய்த எம் தன்மானத் தலைவன் சிவநேசதுரை சந்திரகாந்தனையும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினையும் ஆலமர விழுதுகளாகத் தாங்க நாம் தயாராகவே இருக்கின்றோம் என்று கூறினர்.
நேற்றுக் களுவங்கேணி சிங்காரத்தோப்பு சித்தி விநாயகர் ஆலய முன்றலில் பிரதேச மக்களுடனான அரசியல் கலந்துரையாடலின் போதே மக்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
இக் கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் வவுணதீவுப் பிரதேச சபையின் தவிசாளர் கா.சுப்ரமணியம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களான திரு.ந.அருண், திரு.சுந்தரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.