7/28/2012

| |

நான் நீதியையும் சட்டத்தையும் உச்ச அளவில் மதிப்பவன்

கேள்வி:- அண்மையில் மன்னாரில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக தற்போது பரவலாகப் பேசப்படுகின்றது. ஆகவே இச்சம்பவம் தொடர்பாகவும், அச்சம்பவம் இடம்பெற ஏது வான பின் னணி குறித் தும் வன்னி மாவ ட்ட மக்கள் பிரதி நிதி என்ற வகை யில் சுருக்கமாகக் கூற முடியுமா?
பதில்:- ஆம். வட மாகாணத்திலுள்ள மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்கள் சில மணிநேரக் காலக்கெடுவுடன் உடுத்த உடையோடு 1990ம் ஆண்டில் புலிகளால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டனர். அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில் நானும் ஒருவனாவேன். எதுவித குற்றமும் அறியாத வட மாகாண முஸ்லிம்கள், முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் வட மாகாணத்திலிருந்து புலிகளால் விரட்டப்பட்டனர்.
இவ்வாறு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் புத்தளம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு சென்று முதலில் தஞ்சமடைந்தனர். என்றாலும் சொற்ப காலத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் பெரும் பகுதியினர் புத்தளம் மாவட்டத்திலுள்ள புத்தளம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களுக்கு சென்று தங்கினர்.
வட மாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இற்றைக்கு 22 வருடங்களாகி விட்டன. இருந்தும் அனேக முஸ்லிம் குடும்பங்கள் இன்னும் அகதி முகாம்களில் தான் தங்கியுள்ளன. புலிகளின் பயங்கரவாத செயல்கள் ஒழிக்கப்பட்டு இற்றைக்கு மூன்று வருடங்கள் கழிந்து விட்ட போதிலும் முஸ்லிம்கள் தமது பாரம்பரிய சொந்த வாழிடங்களில் சுதந்திரமாக மீளக் குடியேற முடியாத நிர்க்கதி நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு புலிகளின் சிந்தனையில் வளர்ந்த சிலர் காட்டும் எதிர்ப்பும், பாரபட்சமுமே காரணமாகும்.
இவை இவ்வாறிருக்க, 2001ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் நாட்டில் தற்காலிக சமாதான நிலை ஏற்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் சிலர் தமது பாரம்பரிய வாழிடங்களுக்குத் திரும்பி வாழத் தொடங்கினர். என்றாலும் பெரும்பாலான முஸ்லிம்கள் அகதி முகாம்களிலேயே தொடர்ந்தும் தங்கி இருந்தனர்.
2001ம் ஆண்டில் ஏற்பட்ட தற்காலிக சமாதான சூழலைப் பயன்படுத்தி தம் வாழிடங்களில் மீளக் குடியேறியவர்களில் மன்னார் மாவட்டத்திலுள்ள உப்புக்குளத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் சிலரும் அடங்குவர். இவர்கள் மீன்பிடிப்பதையே தம் தொழிலாகக் கொண்டவர்களாவர். என்றாலும் இவர்கள் காலாகாலமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த கோந்தப்பிட்டி மீன்பிடித்துறையில் வேறு பிரதேச மீனவர்கள் ‘வாடி’ அமைத்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் உப்புக்குளத்திலிருந்து சுமார் 20 கிலோ மீற்றர்களுக்கு அப்பாலுள்ள விடத்தல் தீவைச் சேர்ந்த கத்தோலிக்க மீனவர்களாவர்.
வெளியேற்றப்பட்ட உப்புக்குள முஸ்லிம் மீனவர்கள் தம் வாழிடங்களுக்கு திரும்பி இருப்பதை அறிந்த புலிகளின் அன்றைய மன்னார் கடற் பொறுப்பாளர் அமுதன், கோந்தப்பிட்டியில் விடத்தல்தீவு மீனவர்களும் மீன்பிடிக்க தற்காலிகமாக இடமளிக்குமாறு உப்புக்குள மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அம்மீனவர்கள் சொற்ப காலத்தில் தம்மிடங்களுக்குத் திரும்பி விடுவர் எனவும் அவர் கூறியுள்ளார்.
அந்த அடிப்படையில் உப்புகுள முஸ்லிம்கள் தாம் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த துறையில் விடத்தல் தீவு மீனவர்களும் வாடி அமைத்து மீன்பிடிக்க இடமளித்துள்ளனர். அப்போது சொற்ப முஸ்லிம் மீனவர்களே உப்புக்குளம் திரும்பி இருந்ததால் வேறு பிரதேச மீனவர்கள் தம்மிடங்களில் வாடியமைத்து மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதை அவர்கள் பெரிய பிரச்சினையாகப் பார்க்க வில்லை.
இருந்த போதிலும் விடத்தல் தீவு மீனவர்கள் இணக்கப்பாட்டை மீறி தொடர்ந்தும் உப்புக்குள முஸ்லிம்களின் மீன்பிடித்துறையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டனர். இதனை யடுத்து உப்புக்குள முஸ்லிம் மீனவர்கள் கடற்றொழில் அதிகாரிகள், பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர், மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் என பல்வேறு மட்டத்தினரையும் அவ்வப்போது சந்தித்து தமக்கு நியாயம் பெற்றுத் தருமாறு கோரி வந்துள்ளனர். இருப்பினும் இப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை.
இவ்வாறான நிலையில் 2009ம் ஆண்டு மே மாதம் புலிப் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டு அச்சம், பீதியற்ற சுதந்திரமாக நடமாடக் கூடிய அமைதிச் சூழலை எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இந்த நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்தது. அதன் பயனாக வட மாகாணத்திலிருந்து புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் தங்கள் பாரம்பரிய வாழிடங்களுக்குத் திரும்பத் தொடங்கினர்.
இந்தச் சந்தர்ப்பத்தில் உப்புக்குளத்தைச் சேர்ந்த 550 முஸ்லிம் குடும்பங்களும் முழுமையாக மீளக்குடியேற தம் பாரம்பரிய வாழிடங்களுக்குத் திரும்பின. இதனைத் தொடர்ந்து இம்மீனவர்களின் பிரச்சினை மேலும் அதிகரித்தது. அப்போதும் விடத்தல்தீவு மீனவர்கள் தம்மிடங்களுக்கு திரும்புவதாக இல்லை. என்றாலும் முஸ்லிம் மீனவர்கள் தமக்கு நியாயம் பெற்றுத் தருமாறு கோரி அரச அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் சமூக முக்கியஸ்தர்களையும் சந்தித்து வந்தனர்.
இவ்வாறான நிலையில் கடந்த ஜூன் மாதம் 26ம் திகதி (2012) அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விடத்தல் தீவு மீனவர்கள் மூன்று தினங்களில் வெளியேறி விடுவதாக உறுதியளித்துள்ளனர். ஆனால் மூன்று தினங்கள் கழிந்தன. ஒரு வாரம் கழிந்தது. இரண்டு வாரங்கள் கழிந்தன. ஆனால் அம்மீனவர்கள் வெளியேறுவதாக இல்லை.
இப்படியான நிலையில் உப்புக்குள மீனவர்களில் சிலர் தமது பாரம்பரிய மீன்பிடித் துறையை விடத்தல் தீவு மீனவர்களிடமிருந்து பெற நேரடி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இச்சமயம் கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் கைகலப்போ, பொருட்சேதமோ ஏற்படவில்லை. பொலிஸார் வந்ததும் உப்புக்குள மீனவர்கள் தம்மிடங்களுக்குத் திரும்பியுள்ளனர்.
என்றாலும் இச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து உப்புக்குள கிராமத்தைச் சேர்ந்த 12 முக்கியஸ்தர்களைக் கைது செய்யவென பொலிஸார் சென்றுள்ளனர். அத்தோடு விடத்தல் தீவு மீனவர்களை அவ்விடங்களில் தொடர்ந்தும் மீன்பிடிக்குமாறும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இதன் பின்னரே உப்புக்குள மீனவர்கள் கடந்த 18ம் திகதி ஜூன் மாதம் (2012) தமக்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமெனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
கேள்வி: இந்த ஆர்ப்பாட்டம் பதற்ற நிலையாக மாறியுள்ளதே.
பதில்: உப்புக்குள மீனவர்கள் தமக்கு நியாயம் வழங்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை அமைதியான முறையிலேயே காலை 9.00 மணிக்கு ஆரம்பித்துள்ளார்கள். முற்பகல் 11.30 மணி வரையும் இந்த ஆர்ப்பாட்டம் அமைதியாக இடம்பெற்றுள்ளது. முற்பகல் 11.30 மணியளவில் மன்னார் மஜிஸ்ரேட் நீதவான் நீதிவான்களுக்கான உத்தியோகபூர்வ மேலாடையுடன் வெளியே வந்து தடிஅடி மற்றும் முழங்காலுக்கு கீழ் துப்பாக்கி பிரயோகம் என்பவற்றைப் மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர் களைக் கலைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதன் காரணத்தினால் தான் கலவர நிலைமை உருவாகியுள்ளது. இவ்வாறு தான் அப்பிரதேச மக்கள் எம்மிடம் கூறினார்கள்.
கேள்வி:- இச்சம்பவத்துடன் உங்களது பெயர் இணைத்து பேசப்படுகிறதே!
பதில்:- அதுதான். எனக்கு பெரிதும் மனவேதனையை அளித்து இருக்கின்றது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு பிற்பகல் 3.45 மணியளவில் தான் ஹெலிகொப்டரில் நான் மன்னாருக்குப் போய்ச் சேர்ந்தேன். அப்போது அங்கு எந்த பிரச்சினையுமே நிலவவில்லை. அமைதி நிலையே காணப்பட்டது. அச்சமயம் பிரதேச வாசிகள் எம்மிடம் கூறியவைகளையே நான் உங்களிடம் கூறினேன்.
மற்றபடி நான் மன்னார் மஜிஸ்ரேட் நீதவான் நீதிமன்ற நீதிபதியை சந்திக்கவுமில்லை. அவருடன் கதைக்கவுமில்லை. அவருக்கு எதுவிதமான அச்சுறுத்தலை விடுக்கவுமில்லை. அவரை நான் இச்சம்பவத்திற்கு முன்பு கூட சந்தித்தது கிடையாது. இதுதான் உண்மை. நிலை.
கேள்வி:- இச்சமயம் நீங்கள் நீதிமன்றத்தை அவமதித்ததாக தெரிவிக்கப்படுகி றதே!
பதில்:- நான் எப்போதும் சட்டம் ஒழுங்கைப் பேணி நடப்பவன். நீதியை உச்ச அளவில் மதித்து கெளரவப்படுத்துபவன் நான். அப்படியான என்மீது தான் இப்படியான குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகின்றது.
சட்டத்தரணிகள் சங்கம் இவ்விவகாரம் தொடர்பாக என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. அவர்கள் என்மீது தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கின்றேன்.
அதேநேரம் சட்டத்தரணிகள் சங்கம் என்மீது இவ்வாறான முடிவொன்றுக்கு வந்திருப்பது குறித்து அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கம் ஆச்சரியம் தெரிவித்துள்ளதோடு ஏகமான தீர்மானத்தை நிறைவேற்றி சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
கேள்வி:- இறுதியாக நீங்கள் கூட விரும்புவதென்ன?
பதில்:- நான் நீதித்துறையை உச்ச அளவில் மதித்து கெளரவிக்கும் வகையில் நடக்கும் ஒரு மக்கள் பிரதிநிதியாவேன். அதனால் இவ்விவகாரத்தில் எனக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக வுள்ளது. அதேநேரம் நான் எவருக்கும் தீங்கு நினைக்காத வன். இன,மத பேதம் பாராமல் மக்களின் சுபீட்சத்திற்காகவே பாடுபட்டு வருபவன். ஆகவே எனக்கு இரவு பகலாக இவ்விவகா ரத்தில் நியாயம் கிடைக்கும்.