ஜும் ஆ தொழுகையின் பின் அமைதிப் பேரணி நடத்தி பிரார்த்திக்குமாறு உலமா சபை, முஸ்லிம் கவுன்ஸில் வேண்டுகோள்
இடம்பெயர்ந்த வடபகுதி முஸ்லிம்களை மீண்டும் தாயக மண்ணில் மீளக் குடியமர்த்துவதற்கான பணிகளை முன்னெடுக்கும் அரசியல் நிலைமைகளின் பணிகளுக்கு திட்டமிட்ட வகையில் போடப்பட்டு வரும் தடைகளைக் கண்டிக்க முஸ்லிம்கள் முன்வர வேண்டுமென அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் மன்னார்க் கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக விடுக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து மீண்டும் 22 வருடங்களின் பின்னர் தமது தாயக மண்ணில் மீள்குடியேறும் முஸ்லிம்களுக்குகெதிராக பல்வேறுபட்ட இன்னல்களும், தடைகளும் தொடர்ந்த வண்ணம் இருப்பதை இந்த நாட்டு மக்களாகிய யாவரும் அறிவர்.
இலங்கையில் வாழும் சமூகங்களுடன் முஸ்லிம்கள் மிகவும் அந்நியோன்னியமாக வாழ்ந்து வருவதுடன் அவர்களின் மதக் கலாசார விழுமியங்களை மதித்து வாழும் ஒரு சமூகமாக முஸ்லிம்கள் இருந்து வருகின்றனர்.
வடக்கு முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நியாயம் கோரி பல்வேறுபட்ட முயற்சிகள் எமது அரசியல் தலைமைகளால் எடுக்கப்பட்டு வந்தபோதும், அதற்கெதிராக சில சக்திகள் செயற்பட்டு எமது முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் வேலையினை மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் இந்த நாட்டு முஸ்லிம்கள், வடக்கு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டு வரும் இந்த அநீதிகளுக்கெதிராக குரல் கொடுக்க வேண்டியது அவர்களது கடமையென நாம் கருதுகிறோம்.
இதேவேளை இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு, கொம்பனி வீதியில் அமைந்துள்ள வேக்கந்த் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக ஜும்ஆத் தொழுகையின் பின்னர் பாரிய அமைதிப் பேரணியொன்றை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைமையிலான அமைப்புகள் ஏற்பாடுகளை மேற்கொண்டு ள்ளதுடன், இதேபோன்று நாடு தழுவிய முறையில் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் பேரணிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
எமது வடபுல முஸ்லிம்களின் மீள்குடி யேற்றத்திற்காக முன்னெடுக்கப்படும் இந்த பேரணியில் அனைத்து முஸ்லிம் சகோதரர்களும் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்குமாறும், எமது முஸ்லிம் சகோதரர்களுக்காக துஆப் பிரார்த்தனைகளை செய்யுமாறும் வேண்டிக்கொள்கின்றோம்.
இவ்வாறு ஜம்இயதுல் உலமாவின் மன்னார்க் கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது.
முஸ்லிம் கவுன்ஸில் அறிக்கை
இதேவேளை, முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்காவும் மேற்படி சம்பவம் தொடர்பாக முஸ்லிம்களை தெளிவுபடுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்க சதித்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ள முஸ்லிம் கவுன்ஸில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் பாடுபடும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை இலக்கு வைத்து சில நிகழ்வுகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஆயுதமுனையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக புலிகள் செய்த சதியை இன்று சிலர் இன, மத வாதத்தை தூண்டி செய்ய முற்படுகின்றனர்.
22 வருடங்களுக்கு முன் வெளியேற் றப்பட்ட வட புல முஸ்லிம்களை அரசா ங்கம் உடனடியாக மீள் குடியேற்ற வேண்டும் என்றும் கோரியுள்ள முஸ்லிம் கவுன்ஸில் இதற்காக அனைத்து பேதங்க ளையும் மறந்து முஸ்லிம்கள் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது.
வடபுல முஸ்லிம்களின் நலன்களை பாதுகாக்கவும் அதற்கு ஒத்தாசை வழங்க வும் நாடு பூராவுமுள்ள முஸ்லிம் சமூகத் தினர் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களின் நலன்களுக்காக பிரார்த்திக்கு மாறும் முஸ்லிம்களை அச்சுறுத்தும் சக்திகளுக்கு எதிராக ஒன்றுதிரளுமாறும் தெரிவித்துள்ள முஸ்லிம் கவுன்ஸில் எமது சமூகத்தின் ஒன்றுமையையும் ஆதரவையும் இன்று ஜும் ஆ தொழு கையின் பின் முழு உலகிற்கும் வெளிப்ப டுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.