சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கபே நீண்ட காலமாக இந்த மாவட்டத்தை அவதானித்து வருகின்றது என்ற அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டமே இதுவரை எதுவிதமான தேர்தல் வன்முறையுமற்ற மாவட்டமாக அவதானிக்கப்பட்டுள்ளது என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் கபே அமைப்பின் தேர்தல் கண்காணிப்பு உத்தியோகத்தர்களுக்குமிடையிடையிலான சந்திப்பு நேற்று திங்கட் கிழமை பிற்பகல் மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக் காரியாலத்தில் இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கே மட்டக்களப்புத் தேர்தல் களம் மிகவும் அமைதியாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சிக்குரிய விடயம். நான் தற்சமயம் மட்டக்களப்பில் இருக்கின்றேன். அதேவேளை நீண்டகாலமாக மட்டக்களப்பை நோட்டமிட்டு வந்திருக்கின்றேன். இந்தமுறை பாரிய சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்து விடவில்லை அவ்வாறான முறைப்பாடுகள் எதுவும் நமக்குக் கிடைத்திருக்கவும் இல்லை. போலியாக அச்சுறுத்தல்கள் இருப்பதாக உருவகப்படுத்தும்போது சிலவேளை உண்மையாகவே எதுவும் நடந்து விட்டாலும் கூட அதன் பாரதூரமும் அது பற்றி நடவடிக்கை எடுப்பதற்கு இந்தவகை போலிப்புனைவுகள் தடங்கல்களை ஏற்படுத்தி விடும் என்றார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய சுயேட்சைக் குழு வேட்பாளருமான தங்கேஸ்வரிக்கு ஒரு மிரட்டல் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்;டுள்ளது. அதில் தங்கேஸ்வரி அரசின் ஆலோசனைப்படி அரசுடன் இணைந்து தமிழ் மக்களின் வாக்குகளைச் சிறதடிக்கத் துணை நிற்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மாத்திரம்தான்; கபே யிடம் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து முறைப்பாடாகக் கிடைத்துள்ளது என்றும் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் கூறினார்.
அதன்போது கருத்துத் தெரிவித்த முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தங்களது வேட்பாளர்களும் கூட எல்ரீரீஈ யின் கடிதத் தலைப்பில் அச்சுறுத்தல் கடிதங்களைப் பெற்றுள்ளார்கள். ஆனாலும் நாங்கள் இதை ஒரு பாரிய அச்சுறுத்தலாகக் கருதி இதுபற்றி எங்குமே முறையிடவில்லை என்றார். இது தேர்தல் காலங்களில் இடம்பெறும் வழமையான மிரட்டல்கள்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
என்னையும் எனது கட்சியையும் மக்களிடமிருந்து ஓரங்கட்டவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் கங்கணம் கட்டி நிற்கின்றனர். ஆயினும் நான் எனது கட்சிக்காரர்களுக்கு இந்தத் தேர்தலில் மிகுந்த கட்டிடுப்பாட்டைக் கடைப்பிடித்து மிகவும் முன்மாதிரியான ஜனநாயகப் பண்புகளைக் காண்பிக்குமாறு கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளேன். சுவரொட்டிகளைக்கூட மதில்களில் ஒட்டவேண்டாம் என்று பணித்துள்ளேன். அதே வேளை சில ஊடகங்கள் பக்கச் சார்பாக நடந்து கொண்டு வன்முறைகள் தூண்டப்படுவதற்குக் காரணமாக செயற்படுகின்றன. எனது ஆட்சிக்காலத்தில் 120 பேர் கடத்தப்பட்டுள்ளதான செய்தி மற்றும் கிழக்கில் ஆயுதக் கலாசாரம் இன்னமும் இருக்கிறது என்பதான புனைவுக்கதைகதைகளை ஜேவிபி இனரும் ஏனையோரும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். எங்களது மாகாணத்தில் எதுவித வன்முறைகளும் இடம்பெறாமல் தேர்தலை ஜனநாயகத்தின் வழியில் சுமுகமாக நடத்தி முடிப்பதற்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் முன்னாள் முதலமைச்சர் கபே தேர்தல் கண்காணிப்புக் குழுவினரிடம் உறுதியளித்தார்.
இந்தச் சந்திப்பில் கபே அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஏ. மனாஸ் அதன் மாவட்டக் கண்காணிப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் கே. யோகவேள் அதன் கொள்கை பரப்புச் செயலாளர் ஆசாத் மௌலானா மட்டக்களப்பு மாநகரசபைப் பிரதி மேயர் ஜோர்ஜ் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.