7/22/2012

| |

உணர்ச்சிக் கோஷ அரிசியல் இனிமேலும் விலைபோகுமா?

இப்னு மஹ்மூத்
முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண  சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்ததிலிருந்து பல முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் புளகாங்கிதம் அடைந்தவர்களாக மாறியுள்ளனர், நாரே தக்பீரும், உரிமைப் போராட்டக் கோசமும், போராளிகளை உசுப்பிவிடும் பேச்சுக்களும் அனல் பறக்கத் தொடங்கியுள்ளன. என்றாலும் இவற்றிற்கான பாத்திரத்தை இந்த அரசியல் நகர்வில் இருக்கிறதா என்றால் சந்தேகம் வலுக்கிறதே தவிர தீரவில்லை. 
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது தொடர்பாக நினைத்துக் கூட பார்க்க அனுமதிக்காத காங்கிரஸ் தலைமைத்துவம் இறுதிவரை அரசோடு ஒட்டிக் கொள்வதிலேயே குறியாக இருந்ததது, இது கிழக்கு மாகாண  சபை கலைக்கப்படக்கூடும்  என்ற ஐயம் தெரிவிக்கப் பட்ட நாளிலிருந்து றஊப் ஹக்கீம் அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளிலும் பத்திரிகை செய்திகளிலும் தெளிவாக  தெரிந்தது. இதற்கான காரணமாக மு. கா வின் உள்ளக தகவல் படி மு. கா வின் ஆதரவு முஸ்லிம் மக்கள் மத்தியில் மிக வெகுவாக சரிந்துள்ளது   என உணரப்பட்டிருந்ததும் இதனை மறைப்பதற்கான யுக்தியாக அரச சின்னத்துக்குள் மறைவதே பொருத்தம் என கட்சி கருதியதுமாகும்.
ஆயினும் மு. கா வின் நிலைமை பேரம் பேசும் நிலையிலிருந்து பிச்சை கேட்கும் நிலைக்கு மாறிவிட்டிருந்தது. அதுமட்டுமல்லாது தன்மான உணர்வுள்ள கட்சி உறப்பினர்கள் பலரதும் வேண்டுகோள்களையும் புறந்தள்ளிவிட்டே றஊப் ஹக்கீம்  அவர்கள் அரசின் காலடியில் சரணடைந்திருந்தார்.  இவர்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கப் பட்டிருந்த வேட்பாளர்கள் எண்ணிக்கையினை குறைப்பதற்கு அரசு முடிவெடுத்தபோதும் அதனைக் கூட கட்சியின் உயர் மட்டக் கூட்டத்தில் நியாயப்படுத்தி கடைசிவரை அரசுடன் ஒட்டிக் கொள்வதற்கான சகல  இறுதிக் கட்ட முயற்சிகளையும் அவர் மேற்கொண்டார். அது பலனளிக்காமல் போனபோதுதான் தனித்து போட்டியிடுவது என்ற முடிவுக்கு அவர் உடன்பட்டார். இது கட்சியின் அதன் தலைமைத்துவத்தின் கையாறு நிலையினை தெளிவாக உலகுக்கு காட்டியது.
முஸ்லிம் சமுகம் தற்போது பல நெருக்குவாரங்களுக்கும் அழுத்தங்களுக்கும் உட்பட்டு மனக் கிலேசத்தொடு உள்ள இந்த நிலையில் கட்சி சார்பான நிலைப்பாடுகளுக்கு அப்பால் சமூக நன்மை பற்றி சிந்த்திக்க வேண்டிய தருணம் இது. சிறுபான்மை மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு  கிடைத்த உருப்படியற்ற தீர்வான மாகாண சபை என்பது அதிலுள்ள ஒரு சில அம்சங்களிலாவது சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை வெளிக்கொணரக்கூடிய ஒரு களமாக இருக்கிறது என்ற காரணத்தினால் தான் சிறுபான்மை மக்கள் அதில் சிரியதொரு நம்பிக்கையினைக் கொண்டுள்ளனர். அதனைக் கூட மலினமான அரசியல் லாபங்களுக்காக கோட்டை விடுவதென்பது மிக முட்டாள் தனமான செய்கையாகவே சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட எவராலும் நோக்காப்படும்.
இந்த தருணத்தில் அரசியல் சாணக்கியமும் நுட்பமான அரசியல் நகர்வும் நம்பிக்கையற்றுப் போயிருக்கின்ற தமிழ் சிறுபான்மை சமூகத்திற்கு கூட விடிவையும் நம்பிக்கையினையும் கட்டி எழுப்பக்கூடிய சகோதர  தலைமைத் துவத்தை வழங்கக் கூடிய வாய்ப்பினை வழங்கி இருக்கிறது. இதனை சிதைத்து விடக்கூடியதான நகர்வுகள் வரவேற்கக் கூடியதல்ல. இதனை வழங்கவல்ல வலிமையினை எந்தவொரு முஸ்லிம் அரசியல் கட்சியும் கொண்டிருக்கவில்லை, ஏன் தமிழர் தரப்பும்கூட  கொண்டிருக்கவில்லை என துணிந்து கூற முடியும்.
எதிர்வரும் மாகான சபைத் தேர்தலில் மு. கா பல்தரப்பு சவால்களுக்கு முகம் கொடுக்க  வேண்டியுள்ளது. ஆளும் கூட்டணியோடு   இணைந்துள்ள முஸ்லிம் தரப்பு, தமிழர் தரப்பு அணிகள், புதிய வியூகங்கள் வகுத்து செயற்படும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மற்றும்  பலவீனமான நிலையிலிருந்தாலும் ஒரு சிறிய வாக்கு வங்கியினை கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி போன்ற எதிர்த்தரப்பிற்கு மத்தியில் தமது வேட்பாளர்களை  நிலை நிறுத்த வேண்டிய சூழலில் தற்போது அந்த கட்சி உள்ளது.  இதில் அரச கூட்டணியோடு இருக்கின்ற முஸ்லிம் தரப்பினை பொறுத்தவரை ஒவ்வொரு ஊருக்குமான வலிமையான வேட்பாளர்களை கொண்டிருப்பதும் பிரதேச  அரசியல்  களத்தில் செல்வாக்குச் செலுத்தும் அரசியல் வாதிகளினது இருப்பும் மு. கா விற்கு பெரும் சவாலான விடயங்களாக அமையப் போகின்றன.
அத்தோடு மு கா வின் வேட்பாளர்கள்  தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டதாகவும் தெரியவில்லை. அதற்கான அவகாசத்தையும் பிரதேச அபிப்பிராயங்களையும் கருத்தில் கொள்வதற்கு மு. கா வின் தலைமைத்துவம் தவறிவிட்டது. அரசுடன் இணைந்து தேர்தலை சந்திப்பது என்ற நம்பிக்கையிலிருந்த மு. கா மாற்று வழிமுறைகள்  பற்றி சிந்திக்கவோ செயற்படவோ இல்லை. இதனை எதிர்வரும் தேர்தல் இவர்களுக்கு சரியாக கற்பிக்கும் என எதிர்பார்க்க முடியும். கடந்த நகர சபைத் தேர்தலில் மு. கா சந்தித்திருந்த பின்னடைவு இதற்கு தெளிவான உதாரணமாகும். இந்த பின்னடைவை புரிந்து கொண்டு கட்சியை வலுப்படுத்தும் எந்த ஒரு திட்டத்தினையும்  மு. கா இதுவரை மேற்கொண்டிருக்கவில்லை.
ஆயினும் தனித்துவமான தாய்க் கட்சி, உரிமைக் கோசங்கள், இஸ்லாமிய உணர்ச்சியூட்டல்கள், கையாறு நிலையில் தனித்து நிற்பதை உரிமைக்கான தியாகம் என அர்த்தப்படுத்திய பிரச்சாரங்கள், உணர்வில் ஊறிப் போயுள்ள முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு என்பன ஓரளவான வாக்கு பலத்தை மு. கா விற்கு கொடுக்கும்  என்றாலும் அது முஸ்லிம்களின் தனிப் பெரும் பலம் என்பதை நிருபிக்கப் போதுமானதாக இருக்குமா  என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அம்பாறையிலும் திருகோண மலையிலும் இந்த செல்வாக்கினை ஓரளவு காண முடியும் என்றாலும் மட்டக்களப்பு மாவட்டம் மு. கா விற்கு பெரும் சவாலான களமாகவே  அமையும் என்பதில் சந்தேகமில்லை. எது எவ்வாறு இருப்பினும்  நாம் அளிக்கப் போகும் வாக்குகள் யாவும் நாம் என்ன தூய்மையான எண்ணத்தோடு அளித்தாலும். இறுதியாக அரசாங்கத்திற்கு காணிக்கையாக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை இதனை றஊப் ஹக்கீம் அவர்கள் தனது பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்.
அரசியலை மக்கள் மயப்படுத்துவதற்கு பதிலாக மக்களை அரசியல்மயப்படுத்தி வைத்திருக்கிற எமது முஸ்லிம் அரசியலுக்கு மத்தியில் மக்களுக்கான அரசியலை மக்களுக்காகவே செய்கின்ற மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலுக்கான காலம் தற்போது கனியத் தொடங்கியுள்ளது என்பதை உணர முடிகிறது.