கடைசி நிமிடம் வரை அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதற்கே முஸ்லிம் காங்கிரஸ் முன்னுரிமை வழங்கியது. வேட்புமனுத் தாக்கலுக்கான காலக்கெடு முடிவடைய 24 மணி நேரம் இருக்கும் நிலை யிலே தனித்துப் போட் டியிட முடிவு செய்யப் பட்டது என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
முரண்பாட்டுடன் அன்றி அரசாங் கத்துடன் இணக்கப்பாட்டுடனே மு.கா. கிழக்கில் தனித்துப் போட்டி யிடுகிறது. தேர்தலின் பின் அரசாங்கத் துடன் இணைந்து செயற்பட வாய் மூலமான இணக்கப்பாடு எட்டப்பட் டுள்ளது எனவும் அவர் கூறினார்.
கிழக்கு மாகாண தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று மு.கா தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப் பினர்களான பைசல் காசிம், மொஹமட் அஸ்லம், மு.கா. பிரதித் தலைவரும் மட்டு மாவட்ட முதன்மை வேட் பாளருமான ஹாபிஸ் நkர் ஆகியோரும் கலந்து கொண் டனர்.
ஊடகவியலாளர் எழுப்பிய கேள் விகளுக்கு பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,
அரசாங்கத்தின் கூட்டுக்கட்சி என்ற வகையில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதற்கே மு.கா. முன்னுரிமை அளித்தது. இரண்டாவது மாற்று வழியாகவே தனித்துப் போட்டியிடும் விடயம் ஆராயப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தரப்பினர் முன்வைத்த மாற்று வழிகள் தொடர்பில் கூடுதல் முக்கியத்துவம் வழங்கப் படவில்லை.
அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் முக்கிய அமைச்சர்களுடன் 2 வாரங்கள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முதலமைச்சர் கோரிக்கை தொடர்பில் அரசுடனான பேச்சு முறிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. பதவிக்காக நாம் அரசுடன் இணைந்து போட்டியிடும் முடிவை மாற்றவில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் நம்பிக்கை இழக்கச் செய்யும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வில்லை. சில தரப்பினர் மு.கா. தனித்துப் போட்டியிடுவது குறித்து கடுமையாக விமர்சித்தாலும் அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடனே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
மனச்சாட்சிக்கு இயைபாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. பலத்த முயற்சியின் பின் கடைசி நேரத்திலே நாம் இரண்டாவது மாற்று வழியை தேர்ந்தெடுத்தோம் என்பது ஜனாதிபதிக்கும் முக்கிய அமைச்சர்களுக்கும் தெரியும்.
நேற்று முன்தினம் காலை ஜனாதிபதியுடன் பேசினேன். கட்சியின் தனித்துவத்திற்கு குந்தகம் ஏற்படாத வகையிலே அரசின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியும். அதற்கு மாறாக செயற்பட முடியாது என்ற எமது நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு விளக்கினேன்.
நாம் அரசாங்கத்தில் இருந்து விலகி கிழக்குத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவில்லை. இ.தொ.கா., தேசிய சுதந்திர முன்னணி என்பன சில மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடுவது போன்றே நாமும் பங்காளிக்கட்சியாக இருந்து கொண்டு தனித்துப் போட்டியிடுகிறோம். கேகாலையில் அரசுடன் இணைந்தே போட்டியிடுகிறோம்.
தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் இணைவது தொடர்பில் எழுத்து மூலமான ஒப்பந்தம் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால் வாய்மூலமான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
தேர்தலின் பின் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவோம். பதவி எதுவுமின்றி இணைந்து செயற்படவும் நாம் தயார் ஏனென்றால் பதவிகளில் மட்டும் எமது கட்சி தங்கியிருக்கவில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் தனது அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுக்காது. முஸ்லிம்களது உரிமைகளை வென்றெடுப்பதற்காக தனது அனைத்து அரசியல் பலத்தையும் மு.கா. பிரயோகிக்கும். எதிர்க் கட்சியில் இருந்து தீர்மானிக்கும் சக்தியாகவும் எமக்கு செயற்பட முடியும்.
கிழக்கு தேர்தலில் மு.கா.வும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். தமிழ் தேசிய கூட்டமைப்பும் தீர்மானிக்கும் சக்தியாக வர முடியும். தெரிவாகும் உறுப்பினர் தொகை அதிகரிப்பதன் மூலம் எமது பலத்தை காண்பிக்க முடியும்.