மூன்று மாகாண சபைகளுக்காக நடைபெறவுள்ள தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றிபெறுவது உறுதி என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.
ஜனநாயக முறையிலும், நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நடவடிக் கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித் தார்.
உள்ளூரிலும், சர்வதேச மட் டத்திலும் அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக சதித் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்ற நிலையில் உரிய காலத்திற்கு முன்னரே தேர்தல்களை நடத்தி தேர்தலில் கிடைக்கப்பெறும் அமோக வெற்றி மூலம் அரசியல் ஸ்திரத்தன்மையை காண்பிப்பது ஒரு பதிலாக அமையும் என்று அவர் மேலும் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்த விஷேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை கொழும்பிலுள்ள மஹாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சருமான டலஸ் அழகப்பெரும, கட்சியின் தவிசாளரும், சுற்றாடல் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன் யாப்பா ஆகியோர் கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் தகவல் தருகையில்:-
மூன்று மாகாணங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான மூன்று தெரிவுக் குழுக்கள் தனித் தனியாக நியமிக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் கிழக்கு மாகாண சபைக்கான வேட்பாளர் தெரிவும், அமைச்சர் ஜோன் செனவிரத்ன தலைமையில் வட மத்திய மாகாண சபைக்கான வேட்பாளர் தெரிவும், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் சப்ரகமுவ மாகாண சபைக்கான வேட்பாளர் தெரிவும் இடம்பெறவுள்ளன.
6ம் திகதி (வெள்ளிக்கிழமை) இந்தக் குழு கூடவுள்ளதுடன் சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் அனைவரும் இந்தக் குழு முன் ஆஜராகி விருப்பத்தை கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
அதன் பின்னர் அடுத்த வாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கூடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தின்போது தெரிவுகளை சமர்ப்பித்து வேட்பாளர்கள் தொடர்பில் அனுமதி பெறப்படும்.
அதன் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஆராய்ந்து ஐ.ம.சு.மு. வேட்பாளர்கள் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்பட்ட பின்னர் இருவார காலப்பகுதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும்.
தேர்தல் நடந்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடக்கம் எதிர்க் கட்சிகள் எதிர்ப்பை தெரிவிப்பதுடன் சிலர் நீதிமன்றுக்கு சென்றுள்ளனர். இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் பயம் தெளிவாக தெரிய வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
காலத்தை கடத்தாது உரிய காலத்திற்கு முன்னரே தேர்தல்களை நடாத்தி வெற்றி பெற்று தமது அரசியல் ஸ்திரத்தை காண்பிக்கும் ஒரே ஒரு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாகும்.
இளைஞர்களுக்கும், புது முகங்களுக்கும் இம்முறை சந்தர்ப்பத்தை வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவித்தார். யுத்தத்திற்கு பின்னர் நாட்டில் பாரிய அளவில் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றதுடன் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.